கடந்த சில ஆண்டுகளாகவே ஐடி துறையில் பணிபுரியும் ஊழியர்கள் சம்பளத்தில் திருப்தி இல்லாமல் இருப்பதால், பலர் சொந்த தொழில் தொடங்க ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஆரம்பித்து வருவதாக கூறப்படுகிறது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை, தற்போது ஐடி துறையில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களுடைய திறமைக்கு ஏற்ப ஊதிய உயர்வு கிடைப்பதில்லை என்று சர்வே ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளனர். 2022 ஆண்டுக்கு பின்னர், ஐடி நிறுவனங்கள் ஊதிய உயர்வை நிறுத்திவிட்டதாகவும், சில நிறுவனங்கள் மட்டும் குறைந்த அளவில் ஊதிய உயர்வை வழங்கி வருவதாகவும் ஐடி ஊழியர்கள் கூறுகின்றனர்.
டிசிஎஸ் போன்ற பெரிய நிறுவனங்களே 5 முதல் 8 சதவீதம் வரை மட்டுமே ஊதிய உயர்வு வழங்கியிருக்கிறது. இன்போசிஸ் போன்ற நிறுவனங்களிலும் பெரிய அளவில் ஊதிய உயர்வு இல்லை என்று கூறப்படுகிறது. வெறும் 13 சதவீத ஊழியர்களுக்கு மட்டுமே திருப்தியான ஊதியம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ஏராளமான ஊழியர்கள் வேலையை ராஜினாமா செய்து, ஸ்டார்ட் அப் தொழில் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
ஒரே நிறுவனத்தில் வேலை செய்யும் மூன்று அல்லது நான்கு இளைஞர்கள் ஒன்று சேர்ந்து கூட்டணியாக ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தொடங்கி வருவதாகவும், இதனால் ஐடி துறையில் இருந்து வெளியேறும் பணியாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொருளாதார சூழ்நிலை காரணமாக, இந்திய ஐடி நிறுவனங்களில் எதிர்பார்த்த அளவு வளர்ச்சி இல்லை. இதனால், பல்வேறு நிறுவனங்கள் ஊதிய குறைப்பு மற்றும் வேலை நீக்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த நிலையில், மாற்று வழிகளை யோசிக்கும் இளைஞர்கள் ஸ்டார்ட் அப் பிஸினஸ்களை தொடங்குவது ஒரு நேர்மறையான மாற்றமாக பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
