வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என இன்போசிஸ் அதிபர் நாராயண மூர்த்தி மற்றும் L&T நிறுவனர் எஸ்.என்.சுப்பிரமணியன் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், பெங்களூரில் நேற்று, இந்நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் திடீரென இருவரது கருத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுவாக 8 மணி நேரம் மட்டுமே வேலை என்று அனைத்து துறைகளிலும் நடைமுறையில் இருக்கும் நிலையில், திடீரென இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி “ஒரு வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்” என்றும் “நானும் அதே அளவு வேலை செய்கிறேன்” என்றும் தெரிவித்தார். இதனால், இந்த கருத்து மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
அவரது கருத்தை ஆதரிக்கும் வகையில் L&T நிறுவனத்தின் தலைவர் எஸ்.என்.சுப்பிரமணியம் அவர்கள், “நீங்கள் ஞாயிற்றுக்கிழமை வேலை செய்யாமல் இருப்பது மகிழ்ச்சி தருவதாக இல்லை” என்றும் “அன்றைய தினம் மனைவியுடன் இருந்து என்ன மகிழ்ச்சியை காணப் போகிறீர்கள்?” என்றும் கூறினார். மேலும், “வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்” என்ற அவரின் கருத்தும் விவாதத்தை தூண்டியது.
இந்த நிலையில், நாராயண மூர்த்தி மற்றும் L&T நிறுவனரின் கருத்தை கண்டித்து, பெங்களூரில் நேற்று ஐந்து தொழிலாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இருவரது உருவ பொம்மைகளை எரிக்க முயன்ற போது, காவல்துறையினர் அவர்களை தடுத்தனர்.
இதுகுறித்து ஐடி ஊழியர்கள் கூறுகையில் “ஆரோக்கியமான வேலை மற்றும் குடும்ப சந்தோஷம் ஆகிய இரண்டும் ஒரு ஊழியரின் உரிமை. கூடுதல் நேரம் வேலை செய்வது மன அழுத்தத்தை ஏற்படுத்தும். குடும்பத்துடன் நேரம் செலவழிக்க முடியாத நிலை உருவாகும்.
8 மணி நேர வேலை நேரத்தை 14 மணி நேரமாக அதிகரிக்க நினைக்கும் நிறுவனங்களை கண்டித்து, தொழிலாளர்கள் “அதிக வேலைச்சுமை மன அழுத்தத்தையும், உழைப்புச் சுரண்டலையும் ஏற்படுத்தும்” என்று தெரிவித்தனர். இதனால், இந்த விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.