தமிழகத்திலேயே முதன் முறை; ஊட்டி மலைப்பாதையில் விபத்துக்களை தடுக்க சிறப்பு ஏற்பாடு!

By Amaravathi

Published:

தமிழகத்திலேயே முதல் முறையாக உதகை அருகே கல்லட்டி மலை பாதையில் விபத்துகளை தடுக்க சுழலும் ரப்பர் உருளை தொழில்நுட்பத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கல்லட்டி மலைப்பாதையில் 36 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. மிகவும் அபாயகரமான இந்த மலை பாதையில் வாகனங்களை இயக்க போதிய அனுபவம் இருக்க வேண்டும். அனுபவம் இன்மையால் கடந்த 2018-ஆம் ஆண்டு வரை ஏராளமான வாகனங்கள் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். அதனை தொடர்ந்து அந்த மலை பாதை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

ஆனால் நீலகிரி மாவட்ட பதிவு எண் கொண்ட மற்றும் நீலகிரி மாவட்ட ஓட்டுநர் உரிமம் பெற்ற நபர்கள் இந்த மலைப்பாதையில் இருபுறமும் சென்று வர மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. அதே நேரத்தில் வெளிமாநில மற்றும் வெளி மாவட்ட வாகனங்கள் இந்த மலை பாதை வழியா மசினகுடிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனை கண்காணிக்க தலைகுந்தா பகுதிகளில் 24 மணி நேர போலிஸ் கண்காணிப்பும் போடபட்டுள்ளது.

இதனிடையே இந்த மலைப்பாதை வழியாக கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற தென்மாநில சுற்றுலா பயணிகளும், வட மாநில சுற்றுலா பயணிகளும் உதகைக்கு தினந்தோறும் ஆயிரக்கணகில் வருவதால் மலை பாதையை மேம்படுத்தி விபத்துக்களை முழுவதுமாக தடுக்கும் விதமாக தமிழகத்திலேயே முதல் முறையாக சுழலு ரப்பர் உருளைகளை கொண்டு தடுப்புகளை அமைக்க நீலகிரி மாவட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.

முதற்கட்டமாக 34-வது கொண்டை ஊசி வளைவில் மட்டும் பொருத்தி சோதனை செய்த போது வெற்றிகரமாக இருந்தது. அதனை தொடர்ந்து தற்போது மிகவும் அபாயகரமான அதிக வாகன விபத்துக்கள் ஏற்படக்கூடிய 6 கொண்டை ஊசி வளைவுகளை தேர்வு செய்து சுமார் 300 மீட்டர் நீளத்திற்கு சூழலும் ரப்பர் உருளைகள் கொண்டு புதிய தொழில்நுட்பத்தில் பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

வளைவுகளில் மஞ்சள் நிறத்திலான ரப்பர் உருளைகள் பொறுத்தபட்டுள்ளதால் கொண்டை ஊசி வளைவுகள் வண்ணமயமாக காட்சியளிக்க தொடங்கி உள்ளன. நீலகிரி மாவட்ட நெடுஞ்சாலை துறையின் இத்திட்டத்திற்கு வாகன ஓட்டிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.