மத்திய கிழக்கில் ஈரான் மேற்கொண்டு வரும் அதிரடி ராணுவ நடவடிக்கைகள், அமெரிக்க கூட்டணி நாடுகளை நிலைகுலைய செய்துள்ளதுடன், உலகளாவிய பாதுகாப்பு சமன்பாடுகளை முற்றிலுமாக மாற்றி அமைத்துள்ளது. அண்மையில் நடந்த பல்வேறு தாக்குதல்களில், அமெரிக்காவின் ஆறு வீரர்கள் குண்டுவீச்சில் கொல்லப்பட்ட நிலையில், ஈராக்கில் நடந்த விமான விபத்தில் மேலும் நான்கு வீரர்கள் உயிரிழந்துள்ளனர்; இருவர் இன்னும் மாயமாகவே உள்ளனர். இதுமட்டுமன்றி, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஒரு வீரரும் இந்த மோதலில் பலியாகியுள்ளார். இத்தகைய தொடர் உயிரிழப்புகள், பல ஆண்டுகளாக மத்திய கிழக்கில் ஆதிக்கம் செலுத்தி வந்த அமெரிக்காவின் பிடி தளர்ந்து வருவதையே அப்பட்டமாக தோல் உரித்து காட்டுகின்றன.
ஈரானின் இந்த ஆக்ரோஷமான பதிலடி, ஐரோப்பிய நாடுகளையும் பின்வாங்க செய்துள்ளது. ஈராக்கில் உள்ள இத்தாலியின் ராணுவ தளம் மீது ஈரான் நடத்திய சரமாரியான தாக்குதல்கள், அங்குள்ள வீரர்களுக்கு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. இதனால், உயிரிழப்புகளை தவிர்க்கவும் தற்காத்து கொள்ளவும் இத்தாலிய ராணுவம் உடனடியாக அந்த இடத்தை காலி செய்ய முடிவு செய்துள்ளது. இது ஈரானுக்குக் கிடைத்த ஒரு மிகப்பெரிய ராஜதந்திர மற்றும் ராணுவ வெற்றியாக பார்க்கப்படுகிறது. ஒரு காலத்தில் அமெரிக்காவின் குடையின் கீழ் பாதுகாப்பாக உணர்ந்த நாடுகள், இப்போது தங்கள் உயிரை காப்பாற்றி கொள்ள ஓட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளன.
இந்த மோதலில் சற்றும் சம்பந்தமே இல்லாமல் அடி மேல் அடி வாங்கி வருவது துபாய் தான். சர்வதேச நிதி மற்றும் வர்த்தக மையமான துபாயின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல்கள், அந்த நகரின் பாதுகாப்பை சிதைத்துள்ளன. துபாய் சர்வதேச நிதி மையம் புகை மண்டலமாக காட்சியளிப்பது, உலக முதலீட்டாளர்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. வளைகுடா நாடுகளின் மிக முக்கியமான பொருளாதாரப் புள்ளியை தாக்குவதன் மூலம், ஒரு பிராந்திய போரை உலகளாவிய பொருளாதார பேரழிவாக மாற்ற முடியும் என்பதை ஈரான் நிரூபித்துக் காட்டியுள்ளது.
சவுதி அரேபியாவும் ஈரானின் கோபத்திலிருந்து தப்பவில்லை. அந்த நாட்டின் மீது ஒரே நாளில் சரமாரியாக ட்ரோன்கள் ஏவப்பட்டுள்ளன. சவுதி ராணுவம் 28 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக பெருமைப்பட்டு கொண்டாலும், தொடர்ச்சியாக வரும் இத்தகைய தாக்குதல்கள் அந்த நாட்டின் வான் பாதுகாப்பு கட்டமைப்பிற்கு பெரும் சவாலாக மாறியுள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை முழுமையாக நம்பி, ஈரான் மீது பொருளாதார தடைகளை விதிக்க ஆதரவு அளித்த நாடுகளுக்கு, இப்போது ஏற்பட்டுள்ள இந்த சூழல் ஒரு கசப்பான பாடமாக அமைந்துள்ளது. டிரம்பின் வெற்று மிரட்டல்களை நம்பிய நாடுகளுக்கு “இதுவும் வேணும், இன்னமும் வேணும்” என்ற ரீதியிலேயே சர்வதேச விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
ஈரான் தன்னை தற்காத்துக் கொள்வது என்பது ஒருபுறம் இருந்தாலும், ஒட்டுமொத்த உலக நாடுகளின் பொருளாதாரத்தையே முடக்கும் வல்லமை தனக்கு உண்டு என்பதை அந்த நாடு இப்போது செயலில் காட்டியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் மற்றும் துபாய் மீதான தாக்குதல்கள் வழியாக, உலக எண்ணெய் விநியோகத்தையும் நிதி சந்தையையும் ஈரான் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. அமெரிக்காவின் மிரட்டல்களுக்கு பணியாமல், வான்வழி தாக்குதல்களுக்கு நடுவே மக்கள் வீதியில் இறங்கி போராடுவது, ஈரானியர்களின் மன உறுதியையும் அந்த நாட்டின் முதிர்ச்சியான வியூகத்தையும் பறைசாற்றுகிறது.
இனியாவது உலக நாடுகள் சுதாரித்து கொள்ளுமா என்பதுதான் இப்போது எழுந்துள்ள மிகப்பெரிய கேள்வி. அமெரிக்காவின் மேலாதிக்கத்தை மட்டும் நம்பி கொண்டிருப்பது ஆபத்தானது என்பதையும், ஈரானை ஒரு சாதாரண சக்தியாக கருதி ஒதுக்கிவிட முடியாது என்பதையும் தற்போதைய நிகழ்வுகள் உணர்த்துகின்றன. வல்லரசு நாடுகளின் மோதலில் சிக்குண்டு தவிக்கும் வளைகுடா நாடுகள், தங்கள் பாதுகாப்பிற்கு மாற்று வழிகளை தேட வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. போர் மேகங்கள் மேலும் சூழ்ந்தால், அது வெறும் பிராந்திய போராக இல்லாமல், உலகையே இருளில் தள்ளும் பொருளாதார பேரழிவாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
