இந்திய மக்களிடம் 25 ஆயிரத்து 537 டன் தங்கம்.. மொத்த மதிப்பு ரூ.193 லட்சம் கோடி.. வெளியான புள்ளி விவரம்

சென்னை: இந்தியர்களின் வீடுகளில் 25 ஆயிரத்து 537 டன் தங்கம் இருப்பு உள்ளதாக கூறப்பபடுகிறது. அவற்றின் மதிப்பு ரூ.193 லட்சம் கோடி என்றும் இது இந்திய அரசிடம் உள்ளதைவிட அதிக தங்கம் என்றும் புள்ளி…

Indian people own 25,537 tons of gold: Total value Rs. 193 lakh crore

சென்னை: இந்தியர்களின் வீடுகளில் 25 ஆயிரத்து 537 டன் தங்கம் இருப்பு உள்ளதாக கூறப்பபடுகிறது. அவற்றின் மதிப்பு ரூ.193 லட்சம் கோடி என்றும் இது இந்திய அரசிடம் உள்ளதைவிட அதிக தங்கம் என்றும் புள்ளி விவரங்களில் தெரிய வந்துள்ளது.

 

நாட்டின் பொருளாதார வலிமைக்கு தங்கத்தின் இருப்பு முக்கியமானது நிச்சயமற்ற தன்மை அதிகரித்து வருவதன் காரணமாக உலகின் பல்வேறு நாட்டு வங்கிகள் தங்கத்தை அதிகளவில் பாதுகாப்பான மற்றும் நம்பகமான சொத்துகளாக மாற்றி வருவது வாடிக்கையாக உள்ளது. ஒவ்வொரு நாட்டின் ரிசர்வ் வங்கிகள் தங்கத்தின் இருப்பை அதிகரித்து கொண்டே வருவதை பார்க்க முடிகிறது. இதில் போலந்து, ஹங்கேரி, இந்தியா, துருக்கி, உஸ்பெகிஸ்தான் நாடுகள் கடந்த காலாண்டை காட்டிலும் நடப்பு காலாண்டில் தங்கத்தின் இருப்பை அதிகரித்து இருக்கிறது.

 

தங்கம் இருப்பு என்பது ஏப்ரல்-ஜூன், ஜூலை-செப்டம்பர், அக்டோபர்-டிசம்பர், ஜனவரி-மார்ச் என ஒவ்வொரு ஆண்டும் 4 காலாண்டுகளில் கணக்கிடப்பட்டு புள்ளி விவரங்களாக உலக தங்கம் கவுன்சில் வெளியிடுகிறது. இந்த பட்டியலில், அமெரிக்கா 8,133.46 டன் தங்கம் இருப்புடன் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. அதற்கு அடுத்தபடியாக ஜெர்மனி (3,351.53 டன்), இத்தாலி (2,451.84 டன்), பிரான்ஸ் (2,436.94), ரஷியா (2,335.85 டன்), சீனா (2,264.32 டன்), சுவிட்சர்லாந்து (1,039.94 டன்) ஆகிய நாடுகள் வருகின்றன.

இந்த பட்டியலில் இந்தியா 8-வது இடத்தில் உள்ளது. அதன்படி, அக்டோபர்-டிசம்பர் வரையிலான 3-வது காலாண்டில் இந்தியாவிடம் 853.63 டன் தங்கம் இருப்பு இருப்பதாக உலக தங்க கவுன்சிலின் புள்ளி விவரங்களில் தெரிய வந்துள்ளது. இதற்கு முன்பு 2-வது காலாண்டில் 840.75 டன்னாகவும், முதல் காலாண்டில் 822.09 டன்னாகவும் தங்கம் இருப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இந்தியாவின் தங்க இருப்பு ஒவ்வொரு காலாண்டிலும் அதிகரித்து வருகிறது. நடப்பு ஆண்டின் 3-வது காலாண்டோடு, கடந்த ஆண்டின் 3-வது காலாண்டை ஒப்பிடும் போது, கிட்டதட்ட 50 டன் தங்கம் இருப்பு அதிகரித்துள்ளது புள்ளி விவரங்களில் காட்டுகிறது. இது இந்தியாவின் ரிசர்வ் வங்கியில் இருக்கும் இருப்பு ஆகும்.

இந்தியர்களிடம் எவ்வளவு இருப்பு?: இதுதவிர இந்தியர்களிடம் இருக்கும் தங்கத்தின் இருப்பு குறித்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதில் இந்தியர்களின் வீடுகளில் 25 ஆயிரத்து 537 டன் தங்கம் இருப்பு இருக்கிறது எனவும், இதன் மதிப்பு என்பது ரூ.193 லட்சம் கோடி எனவும் சொல்லப்படுகிறது. இந்த மதிப்பு ஆண்டு இறுதிக்குள் ரூ.200 லட்சம் கோடியாக உயர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றும் தெரிவிக்கின்றனர். மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியர்களிடம் தான் தங்கம் இருப்பு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.