பாகிஸ்தான் தலைவர் பிலாவல் புட்டோ-சர்தாரி, இந்தியா சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தியதைக் கண்டித்து சிந்து நதியில் இந்தியர்கள் ரத்தம் ஓடும் என கடுமையான பேசியதற்கு மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கடும் பதிலளித்துள்ளார்.
சுகூர் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய புட்டோ, “சிந்து நதி நம்முடையது, என்றும் நம்முடையதுதான் இருக்கும். அந்த நதியில் எங்கள் தண்ணீர் ஓடும், இல்லையென்றால் அவர்கள் இரத்தம் ஓடும்,” என்று பேசியுள்ளார்.
மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி இதற்கு கொடுத்த பதிலடியில், ‘அவர் பேசியதை நான் கேட்டேன். அவரை எங்காவது தண்ணீரில் குதிக்கச் சொல்லுங்கள். ஆனால் தண்ணீர் இல்லையென்றால் எங்கே குதிப்பார்? இப்படிப்பட்ட பேச்சுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டாம். அவர்கள் விரைவில் தங்கள் தவறுகளை உணருவார்கள்,” என்றார்.
மேலும், பாகிஸ்தான் இதற்காக பெரும் விலையை கொடுக்க நேரிடும் என்றும், இது ஆரம்பமே என்றும் கூறினார். “பாகிஸ்தான் ஒரு ஆபத்தான நாடு மட்டுமல்ல, வீழ்ச்சியின் எல்லையை அடைந்த நாடு,” என்றும் அவர் கடுமையாக விமர்சித்தார்.
அதோடு, லண்டனில் நடந்த ஒரு போராட்டத்தின் போது பாகிஸ்தான் இராணுவ அதிகாரி ஒருவர் இந்தியர்களிடம் கத்தியை காட்டும் விதமாக சைகை செய்தது தொடர்பாகவும், “இது அரச ஆதரவு பயங்கரவாதம்,” என்று கடும் கண்டனம் தெரிவித்தார்.
இந்தியா சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தியதற்கு பதிலளிக்க பாகிஸ்தான் முக்கிய ஒப்பந்தங்களை நிறுத்தியது, இந்தியாவுடனான வர்த்தகத்தையும் விமான போக்குவரத்தையும் நிறுத்தியது. மேலும், தண்ணீர் தடுக்கும் பட்சத்தில் அதை போர் எனவே கருதுவோம் என்று எச்சரித்துள்ளது.