ஆபரேஷன் சிந்தூரில் ஒரே நாளில் பாகிஸ்தானை கதற வைத்தது இந்தியா.. தீவிரவாத மையங்களை அழித்தவுடன் போரையும் நிறுத்திவிட்டது.. ஆனால் 6 நாள் ஆகியும் அமெரிக்காவின் போர் தொடர்கிறது.. ஆப்கானிஸ்தான், ஈராக், போரில் பாடம் கற்காத அமெரிக்கா, ஈரானிலும் போரை தொடர்கிறது.. ஒவ்வொரு நாள் போரும் தாய்நாட்டில் வரி செலுத்துவோருக்கு எதிரானது என்பதை இந்தியா உணர்ந்தது.. ஆனால் அமெரிக்கா உணராததால் மிகப்பெரிய பொருளாதார அழிவு வருமா?

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரானுக்கு எதிராக தொடங்கியுள்ள போர் தற்போது ஒரு சிக்கலான கட்டத்தை எட்டியுள்ளது. போரை தொடங்குவது எளிது, ஆனால் அதை முடிவுக்கு கொண்டு வருவது மிகவும் கடினமானது என்பதை அமெரிக்கா…

war 2

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரானுக்கு எதிராக தொடங்கியுள்ள போர் தற்போது ஒரு சிக்கலான கட்டத்தை எட்டியுள்ளது. போரை தொடங்குவது எளிது, ஆனால் அதை முடிவுக்கு கொண்டு வருவது மிகவும் கடினமானது என்பதை அமெரிக்கா தற்போது உணர தொடங்கியுள்ளது. ஈரான் அதிபர் காமேனியின் ஆட்சி அதிகாரத்தை தகர்த்துவிடலாம் என்ற அதீத நம்பிக்கையில் அமெரிக்கா இந்த தாக்குதலை தொடங்கியது. தங்களின் அதிநவீன போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை கண்டு ஈரானிய மக்கள் கிளர்ந்தெழுந்து ஆட்சியை மாற்றுவார்கள் என அமெரிக்கா கணக்கு போட்டது. ஆனால், கள நிலவரம் முற்றிலும் வேறாக உள்ளது. ஒரு நாட்டின் தலைவர் போருக்கான உத்தரவை ஒரு போன் காலில் பிறப்பித்துவிட முடியும், ஆனால் அந்த போர் எப்போது நிற்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தி அவரிடம் மட்டும் இருப்பதில்லை.

இந்தச் சூழலில், இந்தியா தனது ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் பாகிஸ்தானுக்கு எதிராக கையாண்ட ராஜதந்திரத்தை அமெரிக்கா கற்க வேண்டும். பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்களை அழிப்பதே இந்தியாவின் தெளிவான இலக்காக இருந்தது. அந்த இலக்கு எட்டப்பட்டவுடன், பாகிஸ்தானின் வான்வழி தாக்குதல்களை முறியடித்துவிட்டு இந்தியா போரை நிறுத்திக்கொண்டது. எப்போது விலக வேண்டும் என்ற தெளிவு இந்தியாவிடம் இருந்தது. ஆனால் அமெரிக்காவோ, ஆப்கானிஸ்தான் முதல் ஈராக் வரை சென்ற இடமெல்லாம் பல ஆண்டுகளாக போரை நீட்டித்து, இறுதியில் எவ்வித பலனும் இன்றி வெளியேறுவதையே வழக்கமாக கொண்டுள்ளது. தற்போது ஈரானிலும் அதே போன்ற ஒரு தெளிவற்ற இலக்கையே அமெரிக்கா கொண்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஒவ்வொரு நாளும் போரின் இலக்குகளை மாற்றிக்கொண்டே இருக்கின்றனர். முதலில் ஆட்சி மாற்றம் என்றார்கள், பிறகு ஈரானின் கடற்படையை அழிப்பது இலக்கு என்றார்கள், இப்போது அணுசக்தி நிலையங்களை சிதைப்பதே நோக்கம் என்கிறார்கள். ஏற்கனவே ‘மிட்நைட் ஹேமர்’ தாக்குதலில் ஈரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணை தளங்கள் அழிக்கப்பட்டுவிட்டதாக கூறிய அமெரிக்கா, இப்போது மீண்டும் அவற்றை தாக்க போவதாக கூறுவது முரணாக உள்ளது. இது அமெரிக்கா முன்னுக்கு பின் முரணாக பொய் சொல்கிறதோ என்ற சந்தேகத்தை உலக நாடுகளிடையே வலுப்படுத்தியுள்ளது.

ஈரான் இந்த போரை ராணுவ ரீதியாக மட்டுமல்லாமல், பொருளாதார ரீதியாகவும் எதிர்கொள்கிறது. அமெரிக்காவின் பொருளாதாரத்தை நிலைகுலைக்க ஈரான் எண்ணெய் அரசியலை கையில் எடுத்துள்ளது. சவுதி அரேபியாவின் அராம்கோ சுத்திகரிப்பு நிலையங்கள், கத்தார் மற்றும் துபாயின் வணிக மையங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்துவதன் நோக்கம், கச்சா எண்ணெய் விலையை ஒரு பேரலுக்கு 200 டாலருக்கு மேல் உயர்த்துவதே ஆகும். எண்ணெய் விலை இந்த அளவை தாண்டினால், அமெரிக்கா ராணுவ ரீதியாக ஜெயித்தாலும் பொருளாதார ரீதியாக தோற்றுவிடும். ஈரான் ஒரு ‘பொருளாதார போரை’ நடத்தும்போது, அமெரிக்கா அதை வெறும் ராணுவ மோதலாக மட்டுமே பார்ப்பது அதன் பலவீனத்தை காட்டுகிறது.

மறுபுறம், இஸ்ரேல் இந்த போரில் மிகவும் தெளிவான இலக்கை கொண்டுள்ளது. கடந்த 78 ஆண்டுகளாக வன்முறையின் நிழலிலேயே வாழ்ந்து வரும் இஸ்ரேலுக்கு, தனது பாதுகாப்பை உறுதி செய்ய யாரை, எப்போது தாக்க வேண்டும் என்பதில் எவ்வித குழப்பமும் இல்லை. ஆனால், அமெரிக்காவோ தனது 750-க்கும் மேற்பட்ட உலகளாவிய ராணுவ தளங்களை வைத்துக்கொண்டு, எங்கு போரை நிறுத்த வேண்டும் என்று தெரியாமல் தவிக்கிறது. இந்த போரினால் வளைகுடா நாடுகளில் வசிக்கும் ஒரு கோடிக்கும் அதிகமான இந்தியர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. உலக நாடுகள் அனைத்தும் போரை நிறுத்துமாறு அழுத்தம் கொடுத்தாலும், அமெரிக்கா தனது இலக்குகளை மாற்றிக்கொண்டே போரை நீட்டிக்கிறது.

மொத்தத்தில் ஒரு போரில் ஈடுபடும்போது அதன் வெற்றி-தோல்வியை விட, அதிலிருந்து எப்போது வெளியேற வேண்டும் என்ற உத்தி மிக முக்கியமானது. வியட்நாம், கொரியா மற்றும் ஆப்கானிஸ்தான் போர்களில் செய்த அதே தவற்றை அமெரிக்கா தற்போதும் செய்து வருகிறது. ஈரானின் பதிலடி மற்றும் உலகளாவிய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் அமெரிக்கா தற்போது தடுமாறி நிற்கிறது. இஸ்ரேலின் தெளிவான அணுகுமுறைக்கு நேர்மாறாக, அமெரிக்காவின் குழப்பமான நகர்வுகள் மத்திய கிழக்கு பிராந்தியத்தை இன்னும் பல ஆண்டுகளுக்கு அமைதியற்ற இடமாக மாற்றப்போகிறது என்பது மட்டும் திண்ணம்.