சமீபத்தில், இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் சீனாவின் வெளியுறவு அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து, சீனா உடனான வர்த்தக நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக சீனாவின் ஊடகங்கள் உறுதிப்படுத்தின. முன்பு தடை செய்யப்பட்டிருந்த அரிதான பொருட்கள், உரங்கள் மற்றும் சுரங்கப்பாதை இயந்திரங்களை தற்போது இந்தியாவுக்கு வழங்க சீனா தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த மாற்றம், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் முன்னேற்றத்திற்கான ஒரு அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
இந்த மாற்றத்திற்கான முக்கிய காரணம், இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் அமெரிக்காவை ஒரு பொதுவான எதிரியாக கருதும் தற்போதைய அரசியல் சூழலாக இருக்கலாம். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற ஃபார்முலாவில் இரு நாடுகளும் கைகோர்த்துள்ளன. இருப்பினும், சர்வதேச அரசியலில் நிரந்தர நண்பர்கள் அல்லது எதிரிகள் இல்லை என்ற தத்துவம் இங்கு கவனிக்கத்தக்கது. சீனா மீது முழு நம்பிக்கை வைப்பது “நம்மை நாமே சேற்றில் புதைத்துக்கொள்வதற்கு” சமம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
வரவிருக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்தில், இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சீனாவில் சந்திக்கவுள்ளார், இது இருதரப்பு உறவுகளுக்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமையக்கூடும். மேலும், இது இந்தியா-சீனா எல்லையில் அமைதியை நிலைநாட்டவும் உதவலாம். இருநாடுகளும் பழையதை மறந்துவிட்டு உண்மையான நட்பை தொடர்ந்தால் இரு நாடுகளுக்கும் பல நன்மைகள் உள்ளன.
ஒரு காலத்தில் இந்தியாவின் நட்பு நாடாக கருதப்பட்ட அமெரிக்கா, இப்போது இந்திய ஏற்றுமதிகளில் சிலவற்றிற்கு 50% வரி விதித்து, பல பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக வர்த்தக அமைப்பின் (WTO) அதிகாரத்தை அமெரிக்கா மதிக்காததால், உலக வர்த்தகத்தை சீர்குலைப்பதைத் தடுக்க அது நடவடிக்கை எடுக்கவில்லை. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகள், இந்தியாவின் சேவை துறையை பெரிதும் பாதிக்கக்கூடும். ஆனால் அதே நேரத்தில் அமெரிக்காவிற்கு எதிராக இந்தியா பதிலடி கொடுத்தால், அமெரிக்காவுக்கும் சேவைத்துறையில் பெரும் பாதிப்பு ஏற்படக்கூடும்.
79வது சுதந்திர தின உரையின்போது, அமெரிக்காவை சார்ந்த சேவைகளை குறைத்து, இந்தியாவின் சொந்த சமூக ஊடக தளங்களை உருவாக்க பிரதமர் மோடி அழைப்பு விடுத்ததும் குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானை பொறுத்தவரை, பாகிஸ்தான் இப்போது அமெரிக்காவை நாடி வருவதாகவும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவிற்கு பதிலாக பாகிஸ்தானின் உதவியை நாடக்கூடும் எனவும் கூறப்படுகிறது. அமெரிக்கா-பாகிஸ்தான் உறவில் ஏற்பட்ட இந்த மாற்றம், பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருந்த சீனா, இப்போது இந்தியாவுடன் உறவு வைத்து கொள்ள முக்கிய காரணமாக இருக்கலாம். இந்தியா – சீனா கூட்டணி, அமெரிக்க – பாகிஸ்தான் கூட்டணி என இரண்டு புதிய கூட்டணிகள் உருவாகியுள்ளதை அடுத்து ஆசிய பிராந்தியத்தில் எந்த கூட்டணிக்கு வெற்றி கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
