அமெரிக்காவை அடுத்து இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் பிரிட்டன்.. இந்தியர்கள் நாடுகடத்தப்படுகிறார்களா? தாய்நாட்டில் வாழ்வது தான் இனி பாதுகாப்பு..

பிரிட்டனில் சிறைத்தண்டனை பெற்றுள்ள வெளிநாட்டு குற்றவாளிகளை, அவர்கள் மேல்முறையீடு செய்வதற்கு முன்பே நாடுகடத்தும் புதிய கொள்கையை பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இந்தியா, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 15 நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன.…

britain

பிரிட்டனில் சிறைத்தண்டனை பெற்றுள்ள வெளிநாட்டு குற்றவாளிகளை, அவர்கள் மேல்முறையீடு செய்வதற்கு முன்பே நாடுகடத்தும் புதிய கொள்கையை பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இந்தியா, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 15 நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம், பிரிட்டனில் சிறைவாசம் அனுபவித்து வரும் இந்தியர்கள், தங்கள் மேல்முறையீடுகள் நிலுவையில் இருந்தாலும், உடனடியாக இந்தியாவுக்கு நாடுகடத்தப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

பிரிட்டனின் புதிய அதிவேக நாடுகடத்தல் கொள்கையானது, வெளிநாட்டு குற்றவாளிகள் தங்கள் தண்டனை காலத்திற்குப் பிறகு, மேல்முறையீடுகளை சாக்கிட்டு பிரிட்டனில் தங்குவதை தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஒரு வெளிநாட்டு குற்றவாளியை நாடுகடத்த உள்துறை அலுவலகம் முடிவு செய்தால், அவர் உடனடியாக நாடுகடத்தப்படுவார். அவரது மேல்முறையீட்டு விசாரணை, அவர் தனது சொந்த நாட்டிலிருந்து, பொதுவாக வீடியோ இணைப்பு மூலம் நடைபெறும். இந்தக் கொள்கை, பிரிட்டனுடன் சட்ட ஒப்பந்தங்களை கொண்ட நாடுகளின் குடிமக்களுக்கு மட்டுமே பொருந்தும்.

குற்றவாளிகள் மேல்முறையீட்டு நடைமுறையை தவறாக பயன்படுத்தி, பிரிட்டனில் மாதக்கணக்கில், ஆண்டுகணக்கில் தங்குவதை தடுக்க இந்த கொள்கை உதவும் என்று அரசு கூறுகிறது. மேல்முறையீட்டுக்கு பிறகு ஒருவருக்கு சாதகமாகத் தீர்ப்பு வந்தால், அவர் மீண்டும் பிரிட்டனுக்குத் திரும்புவதற்கு அனுமதிக்கப்படுவார்.

இந்த திட்டத்தில் புதிதாகச் சேர்க்கப்பட்ட 15 நாடுகளில், இந்தியா மிக முக்கியமானது. காரணம், இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள வெளிநாட்டு குற்றவாளிகளில் இந்தியர்களே அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.

பிபிசி அறிக்கையின்படி, ஜூன் 2025 நிலவரப்படி, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் சிறைகளில் 320 இந்திய குடிமக்கள் உள்ளனர். புதிய விதிகளின்படி, இந்த இந்திய குற்றவாளிகள் தண்டனைக்கு பிறகு உடனடியாக நாடுகடத்தப்பட்டு, இந்தியாவில் இருந்து தங்கள் மேல்முறையீடுகளை செய்ய முடியும்.

இதுகுறித்து பிரிட்டன் இந்தியாவுடன் தொடர்ந்து பேசி வந்தாலும், சில குற்றவாளிகளை ஏற்றுக்கொள்வதில் இந்தியா எதிர்ப்பு தெரிவித்தால், அது சில சவால்களை உருவாக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரிட்டன் சிறைச்சாலைகளில் உள்ள நெரிசலை குறைப்பது இந்த புதிய திட்டத்தின் மற்றொரு முக்கியக் காரணம். இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் சுமார் 10,700-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு குற்றவாளிகள் உள்ளனர். இது மொத்த சிறைவாசிகள் எண்ணிக்கையில் 12 சதவீதம். இந்த விரைவான நாடுகடத்தல், சிறையில் இட நெருக்கடியை குறைத்து, அரசுக்கு ஏற்படும் செலவுகளையும் குறைக்கும் என்று அரசு நம்புகிறது.