சென்னை: சென்னையில் ரூ.20 லட்சம் பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சப்-இன்ஸ்பெக்டர் ராஜா சிங் பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர், வாகன சோதனை என்ற பெயரில் லட்சக்கணக்கில் பணம் பறித்து உள்ளதாகவும், வருமான வரித்துறை அதிகாரிகளுடன் கைகோர்த்து செயல்பட்டதாகவும் புகார் எழுந்துள்ளது
சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த முகமது கவுஸ் என்பவர் கடந்த டிசம்பர் 16-ந்தேதி அன்று இரவு சி.டி. ஸ்கேன் கருவியை வாங்குவதற்காக ரூ.20 லட்சத்தை கொண்டு சென்றுள்ளாராம். ஓமந்தூரார் அரசு மருத்துவமனை அருகே வாகன சோதனை என்ற பெயரில் ரூ.20 லட்சத்தை பறித்ததாக புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ராஜா சிங் (வயது 48) என்பவர் கைது செய்யப்பட்டார்.
அவருடன் இணைந்து செயல்பட்டதாக வருமான வரித்துறையை சேர்ந்த அதிகாரிகள் தாமோதரன் (41), பிரதீப் (42), பிரபு (42) ஆகியோரும் கைது செய்யப்பட்டார்கள். முகமது கவுசிடம் பறித்த ரூ.20 லட்சத்தில் ரூ.15 லட்சத்தை வருமான வரி அதிகாரி பிரபுவின் அண்ணாநகர் வீட்டில் இருந்து போலீசார் கைப்பற்றினார்கள்.
இந்த ணப்பறிப்பு சம்பவத்தில் புகார்தாரரான முகமது கவுசும் சிக்கியிருக்கிறார். அவர் பறிக்கப்பட்ட ரூ.20 லட்சத்தில் ரூ.5 லட்சத்தை தான் வாங்கி கொண்டு போலீஸ் நிலையத்துக்கு அதுபற்றி தகவல் தெரிவிக்காமல் தலைமறைவானார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அவரையும் ரூ.5 லட்சத்துடன் தனிப்படை போலீசார் பிடித்து விசாரித்தனர். இந்த கூட்டுக்கொள்ளை சம்பவத்தில் கைதான சப்-இன்ஸ்பெக்டர் ராஜா சிங், வருமான வரி அதிகாரிகள் தாமோதரன், பிரதீப், பிரபு ஆகிய 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்டு வருகிற 31-ந்தேதி வரையில் நீதிமன்ற காவலில் சைதாப்பேட்டை சப்- ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
கைது நடவடிக்கையில் சிக்கியதால் சப்-இன்ஸ்பெக்டர் பணியில் இருந்து ராஜா சிங் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ராஜ சிங்கின் சொந்த ஊர் தஞ்சை ஆகும். 1997-ம் ஆண்டு 2-ம் நிலை போலீஸ்காரராக தமிழக போலீஸ்துறையில் பணியில் சேர்ந்தார்.
இவரது தந்தை பெயர் தாமஸ், தாயார் பெயர் ராணி. இவர், கடந்த 27 ஆண்டுகளாக போக்குவரத்து போலீஸ் பிரிவிலேயே பணியாற்றி வந்துள்ளார். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்ற பின்னர் கடந்த 5 மாதங்களாகத்தான் திருவல்லிக்கேணி சட்டம்-ஒழுங்கு பிரிவில் பணியாற்றி வந்தார்.
இவர் பூக்கடை, யானைக்கவுனி, வடக்கு கடற்கரை பகுதியில் போக்குவரத்து பிரிவில்தான் பணியாற்றி வந்துள்ளார். அப்போது அந்த பகுதியில் நடமாடும் ஹவாலா மோசடி கும்பலோடு இவருக்கு தொடர்பு ஏற்பட்டதாக தனிப்படை போலிசார் கூறுகிறார்கள். இவர் கடந்த 2014-ம் ஆண்டு யானைக்கவுனி போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றிய போது வியாபாரி ஒருவர் கொண்டு சென்ற ரூ.1.5 லட்சம் பணத்தை பறித்த புகாரில் சிக்கியிருக்கிறார். அதனடிப்படையில் அப்போது அவர் மீது 6 மாத காலம் பணியிடை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஹவாலா கும்பலின் பண பரிமாற்றம் குறித்து இவருக்கு ரகசிய தகவல்கள் வருமாம். ஒருமுறை ஹவாலா கும்பல் கொண்டு சென்ற பணத்தை பறிமுதல் செய்த இவர், வருமான வரித்துறைக்கு தகவல் கொடுத்தார். அந்த பணத்தை பறிமுதல் செய்ய இப்போது கைதாகி உள்ள வருமான வரித்துறை அதிகாரி தாமோதரன் நேரடியாக வந்திருக்கிறார். அப்போதுதான் வருமான வரி அதிகாரி தாமோதரனுடன் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாசிங்கிற்கு பழக்கம் ஏற்பட்டதாம். அதன்பிறகு இவர்கள் இணைந்து செயல்பட்டு வாகனச் சோதனை என்ற பெயரில் ‘ஹவாலா’ கும்பலிடம் பணத்தை கைப்பற்றுவார்களாம். அதில் 3 அல்லது 5 சதவீத பணம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா சிங்கிற்கு போய் சேர்ந்துவிடுமாம். இவ்வாறு இவர்கள் கை கோர்த்து ஹவாலா கும்பலிடம் லட்சக்கணக்கில் பணத்தை கைப்பற்றி ஏப்பம் விட்டார்களாம்.
அந்த வகையில்தான் முகமது கவுஸ் ரூ.20 லட்சம் பணம் வைத்திருந்தது பற்றி வருமான வரி அதிகாரி தாமோதரனுக்கு சப்-இன்ஸ்பெக்டர் ராஜா சிங் தகவல் கொடுத்துள்ளார். உடனே அவர் தனது சக அதிகாரிகள் பிரதீப், பிரபு ஆகியோருடன் வந்து முகமது கவுஸ் வைத்திருந்த ரூ.20 லட்சம் பணத்தை பறித்துக் கொண்டு ஒரு காரில் அவரை ஏற்றி சென்றுள்ளார்களாம்.
எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை அருகே ரூ.20 லட்சத்தில் ரூ.5 லட்சத்தை மட்டும் முகமது கவுசிடம் கொடுத்து விஷயத்தை வெளியே சொல்ல வேண்டாம் என்று கூறி காரில் இருந்து அவரை இறக்கி விட்டார்களாம். ரூ.5 லட்சம் பணத்தை பங்காக பெற்றுக்கொண்ட முகமது கவுஸ் அதுபற்றி போலீசாரிடம் எதுவும் தெரிவிக்காமல் தான் வைத்திருந்த ரூ.20 லட்சம் பணத்தை பறித்து சென்றுவிட்டார்கள் என்று மட்டும் வாய்மொழியாக தெரிவித்து தப்பி சென்றததாக கூறப்படுகறிது. இதனால் அவரும் சிக்கியுள்ளார்.
இதனிடையே திருவல்லிக்கேணி துணை கமிஷனர் சந்தோஷ் கடிமாணி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜா சிங்கிடம் நேரடியாக விசாரணை நடத்திய போது, ராஜா சிங் துணை கமிஷனரோடு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம். ‘நான் எந்த தவறும் செய்யவில்லை. ரூ.20 லட்சம் பணத்தை வருமான வரி அதிகாரிகளை அழைத்து அவர்களிடம் தான் ஒப்படைத்தேன். நான் என் வீட்டுக்கு அந்த பணத்தை கொண்டு போகவில்லை. நான் எப்படி குற்றவாளியாக முடியும்? என்று கடுமையாக வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. ‘நீங்கள் ரூ.20 லட்சம் பணம் பறிமுதல் செய்தது குறித்து உங்களது உயரதிகாரிகளான உதவி கமிஷனருக்கோ, இன்ஸ்பெக்டருக்கோ ஏன் தகவல் கொடுக்கவில்லை’ என்று துணை கமிஷனர் எதிர் கேள்வி கேட்டார். அதற்கு ராஜாசிங்கால் பதில் கூற முடியவில்லையாம். நீண்ட நாட்களாக சப்-இன்ஸ்பெக்டர் ராஜா சிங்கும், இதர 3 வருமான வரி அதிகாரிகளும் கை கோர்த்து செயல்பட்டு ஹவாலா கும்பலை குறி வைத்து லட்சக்கணக்கில் பணம் பறித்திருக்கலாம் என்ற சந்தேகம் தனிப்படை போலீசாருக்கு ஏற்பட்டிருக்கிறது. எனவே ராஜா சிங்கை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.