தமிழக அரசியலில் நிலவும் தற்போதைய சூழல், ஒரு மறுதேர்தல் என்பது நாம் நினைப்பது போல அத்தனை எளிதான ஒன்றாக இருக்காது என்பதை உணர்த்துகிறது. கடந்த தேர்தலில் திமுகவின் வலுவான ‘ஈக்கோ சிஸ்டம்’ தங்களை எளிதில் வெற்றிபெற வைக்கும் என்று அவர்கள் சற்று மெத்தனமாக இருந்திருக்கலாம், ஆனால் தவெக என்ற புதிய சக்தியிடம் பல அமைச்சர்களே தோல்வியை தழுவியிருப்பது அவர்களின் அதிகார திமிரையும், ஈகோவையும் பலமாக சீண்டியுள்ளது. இந்த அவமானம் அவர்களை பெரும் கோபத்திற்கு உள்ளாக்கியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. எனவே, அடுத்த முறை களம் காணும்போது அவர்கள் முன்னெப்போதும் இல்லாத வேகத்தோடும், அதிகார பலத்தோடும் மிகத்தீவிரமாக பணியாற்றுவார்கள் என்பதை தவெக மறந்துவிட கூடாது.
ஜனநாயக ரீதியாக யார் யார் தவெகவிற்கு வாக்களித்தார்கள் என்ற தரவுகள் இந்நேரம் திமுக தரப்பின் கையில் துல்லியமாக இருக்கும். எந்தெந்த பகுதிகளில் சறுக்கல் ஏற்பட்டது, யாரால் தங்களின் வெற்றி தடுக்கப்பட்டது என்பதை ஆராய்ந்து, அந்த இடங்களில் மீண்டும் தவெக தலைதூக்காத வண்ணம் அவர்கள் மிக கடுமையாக இறங்கி வேலை செய்வார்கள். கடந்த தேர்தலை போல வேட்பாளர்கள் மக்கள் மத்தியில் செல்லாமல், விஜய் என்ற ஒற்றை பிம்பத்தை வைத்து மட்டுமே வாக்குகள் விழுந்துவிடும் என்று இனி எதிர்பார்க்க முடியாது. ஒவ்வொரு வாக்காளரையும் தனித்தனியாக சந்தித்து, திமுகவின் அதிகார பலத்தையும் பணபலத்தையும் எதிர்கொண்டு வாக்குகளை பெறுவது என்பது தவெக நிர்வாகிகளுக்கு மிகப்பெரிய சவாலாக அமையப்போகிறது.
இருப்பினும், கடந்த தேர்தலில் ‘விஜய்யால் வெல்ல முடியாது’ என்று எண்ணி அவருக்கு வாக்களிக்க தயங்கிய மக்கள், 108 இடங்களை பிடித்த பிறகு இப்போது அவர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். ஒருமுறை வாய்ப்பு வழங்கப்பட்டால் அவர் மாற்றத்தை கொண்டு வருவார் என்ற எண்ணம் பொதுமக்களிடையே வேரூன்றியுள்ளது. இந்த நேர்மறையான எண்ணம் மறுதேர்தலில் தவெகவிற்கு பெரும் பலமாக மாறும். குறிப்பாக, திமுகவின் ஆட்சியை விரும்பாமல் வேறு வழியின்றி அதிமுகவிற்கு வாக்களித்த நடுநிலை வாக்காளர்கள், இப்போது ஒரு வலுவான மாற்று இருப்பதை உணர்ந்து தவெக பக்கம் தங்கள் பார்வையை திருப்புவார்கள். இது விஜய்யின் வாக்கு வங்கியை இன்னும் பலப்படுத்தும்.
எதிர்கால அரசியல் களம் என்பது திமுகவிற்கும் தவெகவிற்கும் இடையிலான நேரடி போட்டியாகவே உருவெடுக்கும். திராவிட கட்சிகளின் பல தசாப்த கால அரசியல் அனுபவத்தையும், அடிமட்ட அளவிலான கிளை கட்டமைப்புகளையும் ஒரு புதிய கட்சி எதிர்கொள்வது என்பது சாதாரணமான காரியமல்ல. வெற்றியை தக்கவைக்க தவெக தொண்டர்கள் ஒவ்வொரு வீதியிலும், ஒவ்வொரு வீட்டிலும் கடுமையாக உழைக்க வேண்டி வரும். திமுக தனது அத்தனை அஸ்திரங்களையும் பயன்படுத்தி அதிகாரத்தை தக்கவைக்கப் போராடும் வேளையில், தவெக தனது கொள்கையையும் மக்களின் எதிர்பார்ப்பையும் முதலீடாக கொண்டு இந்த மகா யுத்தத்தை எதிர்கொள்ள வேண்டும்.
இறுதியாக, தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த மும்முனை போட்டியில் மிகப்பெரிய இழப்பை சந்திக்கப் போவது அதிமுக தான் என்பது நிதர்சனம். திமுகவின் தோல்வி அல்லது வெற்றி என்பது அவர்களின் நிர்வாகத்தை பொறுத்தது, ஆனால் அதிமுகவின் வாக்குகள் ஒட்டுமொத்தமாக தவெக பக்கம் நகர்வது எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய அரசியல் நெருக்கடியை உருவாக்கும். சில இடங்களை மட்டுமே பெற்றுள்ள அதிமுக, மறுதேர்தலில் தனது இருப்பை தக்கவைக்க முடியாமல் போனால், அது அந்த பேரியக்கத்தின் வீழ்ச்சிக்கே வழிவகுக்கும். மொத்தத்தில், வரப்போகும் மறுதேர்தல் என்பது விஜய்க்கு ஒரு அக்னி பரீட்சையாகவும், திராவிட கட்சிகளுக்கு ஒரு வாழ்வா சாவா போராட்டமாகவும் அமையும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
