உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஆக்ராவில் நடந்த வினோதமான சம்பவத்தில் ஒரு பெண் திருமணமாகி 40 நாட்களுக்கு பிறகு தனது கணவரிடம் இருந்து விவாகரத்தை நாடியுள்ளார். அவர் 40 நாட்களாக குளிக்கவில்லை என்ற காரணத்தை கூறியுள்ளார். தனது கணவர் மாதத்தில் ஒருமுறை அல்லது இருமுறை மட்டுமே குளிப்பார் என்றும், இதனால் ஏற்பட்ட உடல் துர்நாற்றத்தை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை, அதனால் அவருடன் வாழ முடியாது என்று அவர் தனது விவாகரத்து மனுவில் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவரது கணவரிடம் கேட்டபோது, அவர் வழக்கமாக மாதம் ஒருமுறை அல்லது இருமுறை மட்டுமே குளிப்பதாக ஒப்புக் கொண்டார். ஆனால் அதே நேரத்தில் வாரத்தில் ஒருமுறை கங்கை புனித கங்கை நீரை தன் மீது தெளிப்பதாகவும் கூறினார். திருமணத்திற்கு பின்னர் 40 நாட்களில் ஆறு முறை மட்டுமே குளித்திருப்பதாகவும், இது தனது வழக்கமான முறையைவிட அதிகம் என்றும் அவர் கூறினார்.
திருமணத்திற்கு பின் சில வாரங்களில் குளிக்காததால் ஏற்பட்ட தகராறுகள் இருவருக்கும் இடையே அதிகரித்ததால், அந்த பெண் தனது அம்மா வீட்டுக்கு சென்று விட்டார். பெண்ணின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததோடு விவகாரத்து நடவடிக்கையும் எடுத்துள்ளனர்.
நீண்ட அறிவுரைக்கு பின் கணவர் ராஜேஷ் தனது சுத்தத்தை மேம்படுத்துவதாகவும், தினமும் குளிப்பதாக வாக்குறுதி அளித்தார். ஆனாலும் அவரது மனைவி தனது முடிவில் உறுதியாக இருப்பதால் இருவருக்கும் சில நாட்கள் கவுன்சிலிங் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.