மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வரன் தேடும் இளைஞர்களை குறிவைத்து திருமணம் செய்து, மணப்பெண் மூலம் கொள்ளையடிக்கும் கும்பல் கையும் களவுமாக சிக்கியுள்ளது. இதில் ஜெயா, அருணா தேவி, காளீசுவரி ஆகிய மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொள்ளாச்சி மற்றும் திருப்பூரை சேர்ந்த சீனிவாசன், ஜெயபாரதி, சுசித்ரா, முரளிதரன் ஆகிய 4 பேரை தேடிவருகின்றனர். எப்படி இந்த பெண்கள் சிக்கினார்கள் என்பது சுவராஸ்யமானது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பூதிப்புரம் கிராமத்தை சேர்ந்த பெருமாயி என்பவர் தன்னுடைய மகனுக்கு பெண் பார்ப்பதற்காக தரகர் மூலம் வரன் தேடிக்கொண்டிருந்தார். அப்போது பெருமாயிக்கு யார்மூலமாகவோ பொள்ளாச்சியை சேர்ந்த விஜயா என்ற ஜெயா (வயது 45) அறிமுகமாகியிருக்கிறார்.
இந்த ஜெயா என்ற பெண் கடந்த 14-ந் தேதி அருணா தேவி என்ற பெண்ணை அழைத்து வந்து பெருமாயி மகனுக்கு திருமணம் முடித்து வைப்பதாக கூறியிருக்கிறார். அப்போது ஜெயா, தரகுக்காக ரூ.1 லட்சம் வரை கேட்டிருக்கிறார்.
இதனால் சுதாரித்து கொண்ட பெருமாயி எப்படியோ இவர்கள் திருமண மோசடி கும்பல் என்பதை கண்டுபிடித்துவிட்டார். எனினும் வெளிக்கட்டாமல் அருணாதேவி, ஜெயா மோசடி கும்பல் கையும், களவுமாக பிடித்தார். உசிலம்பட்டி தாலுகா போலீஸ் நிலையத்தில் அவர்களை ஒப்படைத்து புகார் அளித்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் தெரியவந்தன.
விசாரணையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த கதிரேசன் என்பவருடைய மனைவிதான் ஜெயா. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வ.உ.சி. நகர் 2-வது தெருவை சேர்ந்த மகாலிங்கம் மனைவி காளீசுவரி (52), அருப்புக்கோட்டை அருகே உள்ள கல்லூரணியைச் சேர்ந்த குமார் மனைவி அருணா தேவி (38). இவர்கள் உள்ளிட்ட 7 பேர் கொண்ட கும்பல் திருமணம் ஆகாத வாலிபர்களின் வீடுகளை குறிவைத்து, இவர்கள் ஏற்பாடு செய்த பெண்களை திருமணம் செய்து வைக்கிறார்கள். பின்னர் திருமணம் முடிந்ததும் அன்று இரவே மணப்பெண் மூலம் நகை, பணம் போன்றவற்றை அந்த கும்பல் கொள்ளையடித்து தப்புவதை வாடிக்கையாக கொண்டு இருந்தனர். அந்த கும்பல்தான் தற்போது பிடிபட்டிருக்கிறது என்று போலீசார் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக உசிலம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயா, அருணா தேவி, காளீசுவரி ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய பொள்ளாச்சி மற்றும் திருப்பூரை சேர்ந்த சீனிவாசன், ஜெயபாரதி, சுசித்ரா, முரளிதரன் ஆகிய 4 பேரை தேடிவருகிறார்கள். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இவர்கள்ஏமாற்றிய மணமகள் யார் யார், எப்படி எல்லாம் ஏமாற்றினார்கள். இதுவரை ஏமாந்தவர்கள் யார் யார் என்பது விசாரணைக்கு பின்னரே தெரியவரும்.