தமிழக அரசியலில் 2026 சட்டமன்ற தேர்தல் களம் தற்போது ஒரு மிகப்பெரிய மாற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இதுவரை திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான கூட்டணி அசைக்க முடியாத சக்தியாக தெரிந்தாலும், தற்போதைய அரசியல் சூழலில் விரிசல்கள் வெளிப்படையாக தெரிய தொடங்கிவிட்டன. குறிப்பாக, காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை திமுக திட்டவட்டமாக நிராகரித்துள்ள நிலையில், அக்கட்சி விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தை நோக்கி பார்க்கும் சூழல் உருவாகியுள்ளது. விசிக போன்ற கட்சிகளும் தங்கள் செல்வாக்கிற்கு தகுந்த அங்கீகாரத்தை எதிர்பார்க்கும் நிலையில், இந்த 2 தூண்கள் கழன்றுவிட்டால் திமுக கூட்டணி பலமிழந்துவிடும் என்பது அரசியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது. இந்த சூழலை விஜய் சல்லி சல்லியாய் நொறுக்கி, தனது அரசியல் அறுவடையை தொடங்க தயாராகிவிட்டார்.
மறுபுறம், அதிமுக மீண்டும் பாஜகவுடன் கைகோர்த்து தேசிய ஜனநாயக கூட்டணியை உறுதிப்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் 2026 தேர்தலை சந்திக்கப் போவதாக அமித்ஷா அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தாலும், பாஜகவின் மீதான ‘மைனஸ்’ பிம்பம் அதிமுகவிற்கு ஒரு மிகப்பெரிய சவாலாகவே இருக்கும். சிறுபான்மையினர் மற்றும் திராவிட சித்தாந்தத்தில் பற்றுள்ள நடுநிலை வாக்காளர்கள் பாஜக இருக்கும் கூட்டணியை ஏற்பார்களா என்பது கேள்விக்குறிதான். அதிமுக எத்தனை கட்சிகளை தனது கூட்டணியில் இணைத்தாலும், பாஜகவின் பிம்பம் அந்தப் பலத்தை ஈடுசெய்யும் அளவிற்கு போதுமானதாக இல்லை என்பதே கள எதார்த்தம்.
விஜய்யின் தமிழக வெற்றி கழகம் தற்போது மக்களின் ஒரே ஆப்ஷன் என்ற பிம்பத்தை மிக வேகமாக உருவாக்கி வருகிறது. விஜய் தனது கட்சியை ஒரு மாற்று சக்தியாக முன்னிறுத்துவதுடன், திமுக மற்றும் பாஜக ஆகிய இருவருமே தனது எதிரி என்று பிரகடனப்படுத்தியுள்ளார். இது பாரம்பரிய கட்சிகளின் மீது சலிப்படைந்த வாக்காளர்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. குறிப்பாக, கடந்த கால தேர்தல் கணக்குகளையும் வாக்கு விகிதங்களையும் வைத்து விஜய்யை குறைத்து மதிப்பிடுவது அரசியல் முதிர்ச்சியின்மை என்று அண்ணாமலை போன்றவர்களே கருத்து தெரிவித்துள்ளனர். விஜய்யின் வருகை என்பது ஒரு புதிய அரசியல் ரத்தப்பாய்ச்சலாக பார்க்கப்படுகிறது.
பொதுவாக ஒரு புதிய கட்சியின் வெற்றி என்பது அதன் அடிப்படை தொண்டர்களை மட்டும் சார்ந்தது அல்ல, மாறாக அரசியலில் எவ்வித சார்பும் இல்லாத நடுநிலை மக்களின் வாக்குகளை சார்ந்தது. தற்போதைய கணிப்புகளின்படி, தமிழகத்தில் சுமார் 30% முதல் 32% வரை வாக்கு விகிதத்தை விஜய் பெறுவார் என்று சில உள்நாட்டு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த நடுநிலை வாக்குகள் தான் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக மாறப்போகின்றன.
விஜய்யின் பலம் என்பது வெறும் சினிமா பிரபலம் மட்டுமல்ல, அவர் கையிலெடுத்துள்ள கொள்கை ரீதியான முழக்கங்களும் தான். வாரிசு அரசியல் இல்லாத, ஊழலற்ற நிர்வாகம் என்ற அவரது வாக்குறுதி, குறிப்பாக தமிழகத்தின் 6.2 கோடி வாக்காளர்களில் பெரும் பகுதியினராக உள்ள இளைஞர்கள் மற்றும் பெண்களை கவர்ந்துள்ளது. திராவிட கட்சிகள் இலவச திட்டங்களால் மக்களை கட்டிப்போட முயலும் வேளையில், விஜய் மாற்றத்திற்கான புரட்சி என்ற ஆயுதத்தை ஏந்தியுள்ளார். இந்த மும்முனை போட்டியில் விஜய் நடுநிலை மக்களின் பேராதரவை பெற்று, திராவிட கோட்டைகளை தகர்க்கும் ஒரு வரலாற்று நிகழ்வை நிகழ்த்த வாய்ப்புள்ளது.
இறுதியாக, 2026 தேர்தல் என்பது தமிழகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஒரு மாபெரும் யுத்தமாகும். கூட்டணி கணக்குகளையும், ஜாதி ரீதியான ஓட்டு வங்கிகளையும் மட்டுமே நம்பியிருக்கும் பழைய கட்சிகளுக்கு, விஜய்யின் புதுக்கணக்கு ஒரு மிகப்பெரிய பாடமாக அமையப்போகிறது. நடுநிலை மக்களின் மௌனமான ஆதரவு ஒரு மிகப்பெரிய அலையாக மாறி, விஜய்யை ஆட்சி கட்டிலில் அமர வைத்தால் அது ஆச்சரியப்படுவதற்கில்லை. பழைய சித்தாந்தங்கள் ஓய்வெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும், தமிழகம் ஒரு புதிய விடியலை நோக்கி நகர தயாராகிவிட்டதாகவும் தவெக தொண்டர்கள் தெறிக்கவிட்டு வருகின்றனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
