எந்த வகை கடன்களாக இருந்தாலும் கடன்கள் இப்போது எளிதில் கிடைக்கும் சூழலில், கடன்களை சாமர்த்தியமாக நிர்வகிக்கக்கூடியவர் தான் உண்மையான நிதி ஹீரோ! வட்டி விகிதங்கள் உயர்ந்து கொண்டிருக்கும் நிலையில், கடனை திருப்பி செலுத்துவதற்கான திட்டமிடல் மிகவும் முக்கியமானது.
நிதி மேலாண்மை துறையில் உள்ள நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், உங்கள் கடனை வேகமாகவும், செலவில்லாமல் மற்றும் மனஅழுத்தமின்றி தீர்க்கும் சில சிறந்த வழிகள் இதோ:
1. அதிக வட்டியுள்ள கடன்களையே முதலில் திருப்பி செலுத்துங்கள்:
பல கடன்களில் சிக்கிக்கொண்டிருக்கும்போது, முதலில் அதிக வட்டி விகிதம் உள்ள கடன்களை முடிக்க வேண்டும். இது உங்கள் மொத்த செலவுகளை குறைக்கும். வட்டி விகிதம் அடிப்படையில் உங்கள் கடன்களை பட்டியலிட்டு, அதிக வட்டி தரும் கடன்களுக்கு முதலில் கவனம் செலுத்த வேண்டும்.
2. பல கடன்களை ஒன்று சேர்த்து கையாளுங்கள்
பல EMI-களை கையாள்வது குழப்பமாக இருக்கலாம். டெப்ட் கன்சாலிடேஷன் லோன் மூலம் இந்த சுமையை குறைக்கலாம். இது ஒரு மாத EMI-யாக மாற்றுவதால், உங்கள் திட்டமிடலை எளிதாக்கும். சில நேரங்களில், இதன் மூலம் சிறந்த வட்டி விகிதமும் கிடைக்கும்.
3. உங்கள் EMI தொகையை அதிகரியுங்கள்
உங்கள் வருமானம் அனுமதிக்கிறது என்றால் உங்கள் மாத தவணையை சிறிது அதிகரிக்கலாம். இது அசல் கடன் தொகையை வேகமாக குறைக்கும், அதனால் உங்கள் மொத்த வட்டி செலவுகள் குறையும். உதாரணமாக மாதம் ₹2,000–₹5,000 கூடுதலாக செலுத்த முடிந்தால், உங்கள் கடன் அளவும் காலக்கெடுவும் குறைந்து பல ஆயிரம் ரூபாய்களை வட்டியை மிச்சப்படுத்தலாம்.
4. கூடுதல் வருவாயைப் புத்திசாலியாக பயன்படுத்துங்கள்
போனஸ், ஊதிய உயர்வு, அல்லது வேறுவிதமாக தொகைகள் கிடைத்தால், அதை வெறுமனே செலவழிப்பதற்கு பதிலாக கடன் திருப்பிச் செலுத்த பயன்படுத்துங்கள். ஒரே தவணையில் ஒரு பெரிய தொகையை முன்கூட்டியே செலுத்துவது, உங்கள் கடன் தொகை மற்றும் வட்டி சுமையை பெரிதும் குறைக்கும்.
5. முன்கூட்டியே செலுத்தும் கட்டணங்களை கவனியுங்கள்
சில கடன் நிறுவனங்கள் முன்கூட்டியே செலுத்துவதற்கு அபராதம் விதிக்கலாம். அந்தக் கட்டணத்தை, நீங்கள் சேமிக்கும் வட்டியுடன் ஒப்பிட்டு, பயனுள்ளதாக உள்ளதா என பாருங்கள்.
6. உங்கள் கடன் நிலுவையை அடிக்கடி கண்காணிக்கவும்
நிதி ஒழுங்கு மிகவும் அவசியம். உங்கள் நிலுவையில் ஏதேனும் தவறுகள் இருக்கிறதா என கண்டுபிடிக்கவும், முன்கூட்டியே திட்டமிடவும் இது உதவுகிறது. இது உங்கள் திட்டப்படி நீங்கள் முன்னேறுகிறீர்களா எனவும் உறுதிப்படுத்துகிறது.
7. உங்கள் வருமானத்துக்குள் EMI திட்டமிடுங்கள்
பலரும் செய்யும் தவறு வருமானத்தைவிட அதிகமாக கடன் கட்டுடுவது. உங்கள் மாத வருமானத்தில் 30–40% -ஐத் தாண்டாத வகையில் EMI-யை நிர்ணயிக்க வேண்டும். இல்லையேல் அது உங்கள் செலவுகளை அழுத்தும், தவறுகளை உருவாக்கும், சிபில் மதிப்பெண்களை பாதிக்கும்.
8. குறைந்த வட்டியுள்ள மூலங்களிலிருந்து கடன் எடுங்கள். சில நேரங்களில், PPF லோன் அல்லது பிரொவிடெண்ட் ஃபண்ட் மூலம் குறைந்த வட்டியில் கடன் எடுத்து, அதிக வட்டியுள்ள கடன்களை முடிப்பது நிதி நன்மையை தரும். ஆனால், இது நீண்டகால சேமிப்புகளை பாதிக்காத அளவுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
முடிவாக அதிக வட்டியுள்ள கடன்களை முன்பே முடித்தல், குறைந்த EMI-யுடன் மேலாண்மை, கூடுதல் வருமானத்தை கடனை அடைக்க பயன்படுத்துதல் போன்றவைகள், உங்களை விரைவில் கடன் இல்லாத வாழ்க்கையை நோக்கி கொண்டு செல்லும்.