ஹிண்டன்பர்க் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் உள்ள பிரபல நிறுவனங்களின் நம்பிக்கையை சிதைக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டு அந்த நிறுவனங்களின் பங்குகள் குறைந்த போது அதை வாங்கி ஒரு வாரத்தில் அதிக லாபம் பெறும் நோக்கத்தோடு தான் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது என்று பொருளாதார நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
வேண்டுமென்றே ஒரு நிறுவனத்தின் பங்குகளை குறைக்க வேண்டும் என்பதற்காகவே அறிக்கைகளை வெளியிட்டு வரும் ஹிண்டன்பர்க் போன்ற நிறுவனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க செபி மற்றும் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலீட்டாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
உலகின் ஏதாவது ஒரு இடத்தில் போர் நடந்தால் அல்லது குண்டு வெடித்தால் உடனே பங்குச்சந்தை பெரும் அளவு பாதிக்கிறது. இவற்றை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுத்து முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டு வருகிறது.
இதுவரை தங்கம், ரியல் எஸ்டேட், பிக்சட் டெபாசிட் போன்ற முதலீடுகளில் பழக்கமான இந்திய முதலீட்டாளர்கள் இப்போதுதான் பங்குச் சந்தை பக்கம் வந்து கொண்டிருக்கின்றனர். பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் தங்களுடைய முதலீடு பாதுகாப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையை செபி மற்றும் மத்திய அரசு வழங்க வேண்டியது கட்டாயம். எனவே ஹிண்டன்பர்க் போன்ற நிறுவனங்கள் போலியாக அறிக்கை வெளியிடுவது உள்பட பல்வேறு விஷயங்களை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து முதலீட்டாளர்களின் கோரிக்கையாக உள்ளது.