60 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்: இந்திய தொழிலதிபர்கள் போல் யோசிக்கும் கூகுள் நிறுவனர்..

இந்தியாவில் உள்ள சில தொழில் அதிபர்கள்   வாரத்துக்கு ஆறு நாட்கள் வேலை செய்ய வேண்டும், வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று கூறிக் கொண்டிருக்கும் நிலையில், கூகுள் நிறுவனர்…

sergey brin
இந்தியாவில் உள்ள சில தொழில் அதிபர்கள்   வாரத்துக்கு ஆறு நாட்கள் வேலை செய்ய வேண்டும், வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று கூறிக் கொண்டிருக்கும் நிலையில், கூகுள் நிறுவனர் தங்கள் ஊழியர்கள் வாரத்திற்கு 60 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று விரும்புவதாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி, “வாரத்தில் ஆறு நாட்கள் வேலை செய்ய வேண்டும். ஞாயிற்றுக்கிழமையில் கூட நான் வேலை செய்கிறேன். அதேபோல், ஊழியர்களும் வேலை செய்ய முன்வர வேண்டும்,” என்று தெரிவித்திருந்தார். மேலும், மனைவியின் முகத்தை எவ்வளவு நேரம் தான் பார்ப்பார்கள்?” என்ற கேள்வியையும் எழுப்பினார். அதேபோல், எல் & டி நிறுவனர் எஸ். என். சுப்பிரமணியம் அவர்கள், “வாரத்திற்கு 90 மணி நேரம் உழைக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இவர்களுடைய கருத்துகள் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கூகுள் நிறுவனர் செர்கி பிரின், தனது நிறுவன ஊழியர்கள் வாரத்திற்கு 60 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

தற்போது, ஏ.ஐ. தொழில்நுட்பம் பெரும் சவாலாக இருக்கும் நிலையில், ஊழியர்கள் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தவும், தங்களுடைய வேலை பாதுகாப்பை உறுதி செய்யவும் கூடுதல் நேரம் உழைக்க வேண்டும் என்றும், வாரத்திற்கு 60 மணி நேரம் வேலை செய்வது உச்சகட்ட உற்பத்தி திறனை பெறுவதற்கான அம்சமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

குறைந்தபட்சம் வாரத்தில் எல்லா நாட்களிலும் அலுவலகத்தில் இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய கூகுள் கொள்கையின்படி, மூன்று நாட்கள் அலுவலகத்திற்கு வரவேண்டும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், வாரத்தில் ஐந்து நாட்களிலும் ஊழியர்கள் அலுவலகத்திற்கு வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், 60 மணி நேரம் வேலை என்பது உடல் நலத்திற்கு தீங்கானது என்றும், மன அழுத்தம் அதிகரிக்கும் என்றும், அது சாத்தியமில்லை என்றும், அவருடைய கருத்துக்கு அவரது நிர்வாகத்தில் உள்ளவர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.