கூகுளின் ஜிமெயில் லாகினில் இரண்டு அடுக்கு பாதுகாப்பு உள்ளது. அதில் ஒன்றாக எஸ்.எம்.எஸ். மூலம் பயனாளிகளுக்கு குறியீடுகளை அனுப்பி, அவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் முறையை பயன்படுத்தி வந்தது. இது, பயனர்களின் கணக்குகளை பாதுகாக்கவும், குற்றவாளிகள் போலி ஜிமெயில் கணக்குகளை உருவாக்குவதை தடுக்கவும் உதவியது.
தற்போது, ஹேக்கர்கள் எஸ்.எம்.எஸ். ஐ ஹேக் செய்து மோசடியில் ஈடுபட்டு பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால், கூகுள் எஸ்.எம்.எஸ்.க்கு பதிலாக புதிய QR முறையை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து கூகுள் வெளியிட்டுள்ள அறிக்கையில், இனிமேல் ஜி மெயில் பயனாளர்கள் இரண்டு அடுக்கு பாதுகாப்புகளில் ஒன்றாக எஸ்.எம்.எஸ். குறியீடுகளுக்கு பதிலாக QR குறியீடுகளை பெறுவார்கள். இதனை ஸ்மார்ட்போன் மூலம் ஸ்கேன் செய்து நுழையலாம். இதன் மூலம் மோசடிகளின் அபாயத்தை குறைக்கலாம் என்று கூகுள் தெரிவித்துள்ளது.
இந்த மாற்றம் அடுத்த சில மாதங்களில் செயல்படுத்தப்படும் என்றும், இந்த நடவடிக்கையின் மூலம் ஜிமெயில் நுழைவு பாதுகாப்பு மேலும் அதிகரிக்கும் என்றும் கூகுள் குறிப்பிட்டுள்ளது.