தங்கத்தில் முதலீடு செய்வதற்கு பதிலாக தங்க பத்திரத்தில் முதலீடு செய்யலாம் என்று மத்திய அரசு 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் முறையாக ரிசர்வ் வங்கியால் தங்க பத்திரங்கள் வெளியிட்டது. 8 ஆண்டு காலம் முதிர்வு காலம், முதிர்வு தேதியில் தங்கத்தின் விலையின் படி தொகை கொடுக்கப்படும், மேலும் தங்க பத்திரங்களுக்கு ஜிஎஸ்டி வரி கிடையாது, அது மட்டும் இன்றி ஆண்டுக்கு 2.5% வட்டி வருமானமும் கிடைக்கும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.
இந்த கவர்ச்சிகரமான திட்டம் காரணமாக ஏராளமானோர் தங்க பத்திரத்தில் முதலீடு செய்தனர். ஒவ்வொரு ஆண்டும் நான்கு அல்லது ஐந்து முறை தங்க பத்திரங்கள் வெளியாகும் நிலையில் அதில் பலர் முதலீடு செய்தனர் என்பதும் இதனால் கோடிக்கணக்கில் முதலீடு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டதால் தங்கத்தின் விலை சரிந்து விட்டது. இதன் காரணமாக தங்க பத்திரங்களின் மதிப்பும் இறங்கிவிட்டது.
குறிப்பாக கடந்த 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விற்பனை செய்யப்பட்ட இரண்டாம் தொகுப்பு தங்க பத்திரங்கள் இந்த மாதம் முதிர்வு பெறுகிறது. இவ்வாறு முதிர்வு பெறுபவருக்கு மிகவும் குறைவான லாபம் தான் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
தங்க பத்திரங்கள் முதிர்வு அடைவோர்களுக்கு குறைந்த தொகையை கிடைக்கும் என்று கூறப்படும் நிலையில் இன்னொரு பக்கம் தங்க பத்திர திட்டத்தையே முடித்துக் கொள்வதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தங்க பத்திரம் காரணமாக மத்திய அரசுக்கு செலவுகள் அதிகரிப்பதாகவும் எனவே தங்க பத்திரத்தை நாளடைவில் குறைக்க அல்லது முடித்துக் கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த செய்திகள் காரணமாக தங்க பத்திரத்தில் முதலீடு செய்தவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் இனிமேல் தங்க பத்திரத்தில் முதலீடு செய்ய யாரும் முன்வர மாட்டார்கள் என்றும் கூறப்படுகிறது.