நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற தனது அரசியல் கட்சியின் சார்பில் திருச்சியில் நடத்திய முதல் பிரசார பயணம், தமிழக அரசியல் களத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது. ஒரு நடிகர், அரசியல் தலைவராக உருவெடுக்கும்போது, அதை விமர்சிப்பவர்கள் பலர். ஆனால், திருச்சியில் கூடியிருந்த மக்களின் கூட்டம், ஒரு “சினிமாக்காரனின்” பிரசார பயணம் என்று சொல்ல முடியாது. Gen Z இளைஞர்கள் எழுச்சி என்பதை நிரூபித்துள்ளது.
இதுவரை அரசியல் தலைவர்களின் கூட்டம் என்றால் காசு கொடுத்து கூடும் கூட்டம் என்பதை தான் தமிழக மக்கள் பார்த்திருக்கின்றனர். கம்யூனிஸ்ட், நாம் தமிழர் கட்சிகளின் கூட்டங்களுக்கு மட்டும் தான் காசு கொடுக்காமல் ஓரளவு கூட்டம் வரும். ஆனால் இந்த கட்சிகள் தேர்தல் அரசியலில் இதுவரை தங்களை நிரூபிக்கவில்லை.
ஆனால் விஜய், திருச்சி விமான நிலையத்திலிருந்து பொதுக்கூட்டம் நடக்கும் இடம் வரை 8 கிலோமீட்டர் தூரத்தைக் கடக்க ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக ஆனது. இது திட்டமிடப்படாத ஒரு நிகழ்வாக இருந்தாலும், மக்கள் கூட்டத்தின் அளவு, விஜய்யின் செல்வாக்கையும், மக்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் வரவேற்பையும் உணர்த்துகிறது. அரசியல் விமர்சகர்களின் கூற்றுப்படி, இது வெறும் ரசிகர்கள் கூட்டம் மட்டுமல்ல, அரசியல் மாற்றத்தை விரும்பும் பொதுமக்களும் இதில் அடக்கம். இந்த கூட்டம், பணம் கொடுத்து கூட்டப்பட்ட கூட்டமல்ல, மாறாக, தன்னெழுச்சியாக மக்கள் திரண்டு வந்த கூட்டம். இது தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுக்கும் ஒரு தெளிவான எச்சரிக்கையாகும்.
விஜய்யின் பிரசார பயணத்திற்கு தி.மு.க. அரசு விதித்த 22 நிபந்தனைகள், அவர்களின் பதட்டத்தை வெளிப்படையாக காட்டுகிறது. ஒரு அரசியல் தலைவருக்கு எத்தனை நிமிடங்கள் பேச வேண்டும் என்று நிபந்தனை விதிக்கும் அதிகாரம் காவல்துறைக்கு இல்லை. இந்த கடுமையான நிபந்தனைகள், தி.மு.க.வின் அடிமடியில் கை வைத்தது போல, அவர்களை நிலைகுலைய செய்துள்ளது.
விஜய்யின் வருகையை தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் “கொள்கை இல்லாத கூட்டத்தை கூட்டி கும்மாளம் போடும் கட்சி தி.மு.க. அல்ல” என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வரி, விஜய்யின் கூட்டத்தை குறிப்பிட்டு சொன்னது என்பது தெளிவாக தெரிகிறது. ஒரு முதலமைச்சர், ஒரு வளர்ந்து வரும் அரசியல் தலைவருக்கு எதிராக இவ்வாறு கருத்து தெரிவிப்பது, தி.மு.க.வின் உள் பதட்டத்தை காட்டுகிறது.
நேற்றைய கூட்டத்தில் விஜய்யின் பேச்சு, மிகவும் ஆச்சரியமளிப்பதாக இருந்தது. எளிய மக்களுக்கும் புரியும் வகையில் எளிய வார்த்தைகளில் நேருக்கு நேர் ஒருவரிடம் பேசுவது போல் இயல்பாக பேசினார். அவர் தனது பேச்சில், தி.மு.க.வின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளான கல்விக் கடன் ரத்து, மகளிர் உரிமைத்தொகை, பழைய ஓய்வூதிய திட்டம் போன்றவற்றை நிறைவேற்றாததை குறித்து கடுமையாக விமர்சித்தார். அவர் பேசும்போது, காகிதங்களை வைத்துக் கொண்டு, கவனமாக தயாரித்து வந்த தகவல்களை பேசினார். இது ஒரு நடிகர் திடீரென அரசியல் பேசியது போல அல்லாமல், ஒரு பொறுப்பான, அனுபவமுள்ள அரசியல் தலைவரின் பேச்சாக இருந்தது.
விஜய் தனது பேச்சில், ஆளுங்கட்சிக்கு எதிராக மட்டுமின்றி, பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வையும் விமர்சித்தார். “மக்கள் இந்த இரு கட்சிகள் மீதும் வெறுப்பில் உள்ளனர்,” என்று வெளிப்படையாக கூறினார். இது ஒரு புதிய அரசியல் பயணத்திற்கான தெளிவான பாதையை காட்டுகிறது. தமிழக அரசியலில் ஒரு புதிய மாற்று சக்தி உருவாகி வருவதை இது குறிக்கிறது. இதுவரை தமிழக வரலாறில் இரு திராவிட கட்சிகளையும் ஒரே நேரத்தில் எதிர்த்த எந்த கட்சியும் வெற்றி பெறவில்லை. முதல்முறையாக வெற்றி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
விஜய்யின் பிரசார பயணத்திற்கு ஊடகங்கள் கொடுத்த பெரும் முக்கியத்துவம், இந்த நிகழ்வின் தாக்கத்தை மேலும் அதிகரித்தது. இது ஒரு திரைப்படத்தின் வெளியீடு போல, அனைத்து ஊடகங்களிலும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இதுவும் ஆளுங்கட்சியின் பதட்டத்திற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
மொத்தத்தில் திருச்சியில் விஜய்யின் அரசியல் பயணம், தமிழக அரசியலில் ஒரு மாற்றத்தின் தொடக்கமாக இருக்கலாம். இது வெறும் ஒரு நடிகரின் வருகை அல்ல, மாறாக, மக்கள் மத்தியில் நிலவும் அதிருப்தியின் வெளிப்பாடு. இந்த சம்பவம், தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுக்கும் ஒரு பெரிய சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அரசியல் தலைவர்கள் தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், ஊழல் மற்றும் குடும்ப அரசியல் செய்து வரும் நிலையில், மக்கள் ஒரு மாற்றத்தை விரும்புகிறார்கள். விஜய்யின் வருகை, அந்த மாற்றத்திற்கான ஒரு நம்பிக்கையை அவர்களுக்கு அளித்திருக்கிறது. இனி வரும் நாட்களில், அவர் தனது அரசியல் பயணத்தை எவ்வாறு முன்னெடுக்கிறார் என்பதை பொறுத்தே, தமிழகத்தின் எதிர்காலம் அமையும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
