பிரபல பத்திரிகை மீது ரூ.2 கோடி அவதூறு வழக்கு தொடுத்த கவுதம் காம்பீர்.. என்ன காரணம்..?

Published:

இந்தி நாளிதழான பஞ்சாப் கேசரிக்கு எதிராக இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக எம்பியுமான கவுதம் கம்பீர் 2 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்று நீதிபதி சந்திர தாரி சிங் முன் விசாரணைக்கு வந்தது.

பத்திரிகை சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தியதாக கூறி, பஞ்சாப் கேசரி பத்திரிகையின் ஆசிரியர் ஆதித்யா சோப்ரா மற்றும் நிருபர்கள் மீது கம்பீர் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்த வழக்கின் இன்றைய விசாரணையின் போது கவுதம் கம்பீர் வழக்கறிஞர் ஜெய் அனந்த் டெஹாத்ராய் மூலம், கம்பீர் ஒரு மனுவை தாக்கல் செய்தார், இதில் பஞ்சாப் கேசரி பத்திரிகையில் ஒரு சில செய்திகளை ஆதாரமாகக் குறிப்பிட்டார், அந்த செய்தித்தாள் அதன் கட்டுரையில் தன்னை பற்றி ‘தவறான’ முறையில் திரித்து எழுதி இருப்பதாகவும், புராண அரக்கனை தன்னை ஒப்பீடு செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த கட்டுரைகள் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரான தனது செயல்திறன் மற்றும் நேர்மையைப் பற்றி புனையப்பட்டவை என்றும், தனது நற்பெயரை மிகவும் சேதப்படுத்தியதோடு,, வாசகர்களை தவறாக வழிநடத்துகிறது என்றும் கம்பீர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த கட்டுரையில் தன்னை சாதிய நம்பிக்கை கொண்டவராகவும், திமிர்பிடித்த அரசியல்வாதியாகவும் சித்தரித்துள்ளது என்றும் அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த கட்டுரையால் தனது தொகுதியினர், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையில் தனது நற்பெயரையும் நிலைப்பாட்டையும் குறைக்க வேண்டுமென்றே பிரச்சாரம் செய்துள்ளது என்றும், அதற்கு இழப்பீடாக 2 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று கம்பீர் கோரியுள்ளார். மேலும், பஞ்சாப் கேசரியால் விநியோகிக்கப்படும் டிஜிட்டல் பதிப்புகள் உட்பட அனைத்து செய்தித்தாள்களிலும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், தனக்கு எதிராக வெளியிடப்படும் ஒவ்வொரு அவதூறான பிரசுரங்களையும் திரும்பப் பெறுவதை கட்டாயமாக்கி, உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் என்று கம்பீர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் உங்களுக்காக...