ஏப்ரல் 1 முதல், நீண்ட நாட்களாக பயன்பாட்டில் இல்லாத மொபைல் எண்களுடன் UPI செயல்படாது என இந்திய தேசிய கட்டணக் கழகம் அறிவித்துள்ளது. பயனர் பாதுகாப்பை அதிகரிக்கவும், இணைய குற்றங்களை குறைக்கவும் இந்த முக்கியமான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பயன்பாட்டில் இல்லாத மொபைல் எண்களை இனங்கண்டு, UPI அமைப்பில் இருந்து அவற்றை நீக்க வேண்டும் என இந்திய தேசிய கட்டணக் கழகம் உத்தரவிட்டுள்ளது.
நீண்ட காலமாக பயன்படுத்தப்படாத எண்கள் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் புதிதாக வழங்கிய மறு ஒதுக்கீடு செய்யப்பட்ட எண்கள் ஆகியவைகளுடன் பழைய வங்கி கணக்கு விவரங்கள் இணைக்கப்பட்டிருக்கலாம் என்பதால், இது சைபர் மோசடிக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது..
மேலும், இந்திய தேசிய கட்டணக் கழகம் இன்னொரு முக்கியமான நடவடிக்கையாக Google Pay, PhonePe, Paytm போன்ற UPI பயன்பாடுகளில் Pull Transaction வசதியை நீக்க அல்லது கட்டுப்படுத்த இருக்கிறது.
Pull Transaction என்பது பயனர்கள் பணம் பெறுவதற்கான கோரிக்கைகளை அனுப்பும் வசதி. மோசடி செய்வோர் இதை தவறாக பயன்படுத்தி, அடுத்தவர்களைப் பணம் அனுப்ப கோரிக்கை ஏமாற்றுகின்றனர் என்பதால் இந்த வசதியை நீக்க திட்டமிட்டிருப்பதாகவும், ஆனால் அதே நேரத்தில் இந்த மாற்றம் எப்போது நடைமுறையில் வரும் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றும், ஆனால் விரைவில் இந்திய தேசிய கட்டணக் கழகம் வங்கிகளுடன் இணைந்து திட்டமிட்டு இதனை செயல்படுத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படவில்லை என்றால், அது தானாகவே UPI அமைப்பில் இருந்து நீக்கப்படும். ஆனால் சேவை நிறைவு செய்யும் முன், வாடிக்கையாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை மெசேஜ் வரும். அந்த எச்சரிக்கைக்கு பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால், அந்த எண்ணுக்கான UPI சேவை நிறுத்தப்படும்.
புதிதாக மொபைல் எண் மாற்றியுள்ளவர்கள் தங்களது வங்கிகளை தகவல் தந்தால் மட்டுமே UPI சேவை அளிக்கப்படும். இந்த நடவடிக்கை தற்போதைக்கு சில பயனர்களுக்கு சில தொந்தரவுகளை ஏற்படுத்தலாம். ஆனால் டிஜிட்டல் கட்டண அமைப்பின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கையாக மக்கள் பார்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது..
பயனர்கள் தங்கள் UPI தொடர்புடைய மொபைல் எண் செயல்படுகிறதா என்று சரிபார்க்க வேண்டும். பழைய அல்லது மறு ஒதுக்கீடு செய்யப்பட்ட எண்களைப் பயன்படுத்துபவர்கள் உடனடியாக தங்கள் வங்கியைத் தொடர்பு கொண்டு விவரங்களை புதுப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.