கடந்த சில வருடங்களாகவே மொபைல் போனில் மோசடியான அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. போனின் மூலம் மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் தங்கள் கைவரிசையை அதிகமாக காட்டி வருவதாக ஏகப்பட்ட புகார்கள் காவல்துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், காவல்துறை இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும், நாம் தான் இதில் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
மோசடியான அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் வந்தால் உடனடியாக https://sancharsaathi.gov.in/ என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்யலாம். மேலும், எந்த துறையிலிருந்து அழைப்பு வருகிறதோ, குறிப்பாக காவல்துறையிலிருந்து அழைப்பு வந்தால், உடனே காவல்துறையின் இணையதளத்திற்கு சென்று, அங்கு உள்ள போன் எண்களை பெற்று, நேரடியாக தொடர்பு கொண்டு தன் மீது புகார் இருக்கிறதா என்று விசாரிக்கலாம்.
பொதுவாக, ஜிபே உள்ளிட்ட ஆன்லைன் பேமெண்ட் மூலம் பணம் செலுத்துங்கள் என்று கூறினாலே அது மோசடி என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அவசரப்படுத்தி அழுத்தம் கொடுத்தால், அது மோசடி அழைப்பு என்பதையும் புரிந்து கொண்டு நிதானமாக செயல்பட வேண்டும்.
ஒரு காவல்துறை அதிகாரி நம் மீது புகார் கூறுகிறார் என்றால், அதை எழுத்து வடிவில் நம்மிடம் கையெழுத்து வாங்குவார். எனவே, காவல்துறையினர் நேரில் வந்து விசாரிப்பவர்களே தவிர, போனில் அல்லது வாட்ஸ்அப்பில் தொடர்பு கொண்டு விசாரணை செய்ய மாட்டார்கள் என்பதும் புரிந்து கொள்ள வேண்டும்.
சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய பதிவுகளை செய்தால், மோசடிக்காரர்கள் அந்த பதிவுகளை வைத்து மிரட்டுவதுண்டு. எனவே, சமூக வலைதளங்களை பொறுப்புடன் கையாள வேண்டும். சைபர் குற்றங்கள் என்பது காவல்துறையினரால் மட்டும் கட்டுப்படுத்த முடியாத ஒன்று என்பதால், பொதுமக்கள் விழிப்புடன் இருந்து தங்களது சொத்துக்களை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.