திருமணமான தமிழ் பெண்களை வேலைக்கு எடுக்க மறுக்கும் பாக்ஸ்கான் நிறுவனம்.. என்ன காரணம்?

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இயங்கி வரும் பாக்ஸ் தான் நிறுவனம் திருமணமான தமிழ் பெண்களை வேலைக்கு எடுக்க மறுப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆப்பிள் போன்களுக்கு உதிரி பாகங்கள் தயாரித்து…

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இயங்கி வரும் பாக்ஸ் தான் நிறுவனம் திருமணமான தமிழ் பெண்களை வேலைக்கு எடுக்க மறுப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆப்பிள் போன்களுக்கு உதிரி பாகங்கள் தயாரித்து கொடுக்கும் நிறுவனமான பாக்ஸ்கான் நிறுவனம் ஸ்ரீபெரும்புதூர் அருகே இயங்கி வரும் நிலையில் இந்த ஆலைக்கு அவ்வப்போது வேலைக்கு ஆள் எடுக்கப்பட்டு வருகிறது.

ஆனால் இந்த நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டு துறை அதிகாரிகள் திருமணம் ஆன பெண்களுக்கு வேலை தருவதில்லை என்ற செய்தி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து விசாரித்த போது திருமணம் ஆன பெண்களுக்கு பொறுப்புகள் அதிகம் இருக்கும் என்றும் குடும்ப கடமை, கர்ப்பமாகுதல் உள்ளிட்ட பல பிரச்சனை இருப்பதால்தான் திருமணமான பெண்களை வேலைக்கு எடுப்பதில்லை என்றும் திருமணம் ஆகாத பெண்களை வேலைக்கு எடுத்தால் சரியாக வேலைக்கு வருவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

இது ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் திருமணமான பெண்களை வேலைக்கு அமர்த்தாதது வேலைவாய்ப்பு சட்டத்திற்கு முரண்பாடானது என்று கூறப்பட்டு வருகிறது.

இது குறித்து பாக்ஸ்கான் நிறுவனம் விளக்கம் அளித்த போது அதிகமான ஊழியர்கள் தேவைப்படும்போது திருமணமான பெண்களுக்கும் நாங்கள் வேலை தருகிறோம் என்றும் திருமணமான பெண்களுக்கு வேலை கொடுக்க கூடாது என்ற கொள்கை எதுவும் எங்கள் நிறுவனத்தில் கிடையாது என்றும் கூறியுள்ளது.