600 நாளா சூர்யகுமார் தக்க வெச்ச பெருமை.. அலேக்கா தட்டித் தூக்கிய ஆஸ்திரேலிய வீரர்..

தற்போது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் பார்வையும் டி20 உலக கோப்பை தொடரில் அடுத்தடுத்த நடைபெற உள்ள அரை இறுதி போட்டிகள் மீது தான் இருந்து வருகிறது. ரஷீத் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி, முதல் முறையாக ஒரு ஐசிசி தொடரின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற்றம் கண்டுள்ள விஷயம், பலரையும் மிரண்டு பார்க்க வைத்துள்ளது.

இன்னொரு பக்கம் அவர்களுடன் மோத உள்ள தென்னாப்பிரிக்க அணியும் பல முறை அரையிறுதிக்கு முன்னேறி இருந்தாலும் ஒரு முறை கூட ஐசிசி தொடரின் இறுதி போட்டி ஒன்றில் ஆடியது கிடையாது. மேலும், இந்த இரண்டு அணிகளில் இருந்து ஒரு அணி இறுதி போட்டிக்கு முன்னேறும் பட்சத்தில் ஐசிசி தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேறிய புதிய அணிகளில் ஒன்றாகவும் மாறும்.

இந்த விஷயம் ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருந்தாலும், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகளை வீழ்த்தி, அரையிறுதி வரை வந்துள்ள ஆப்கானிஸ்தான் அணி நிச்சயம் மார்க்ரம் தலைமையிலான தென்னாபிரிக்க அணிக்கும் சவாலாக தான் இருப்பார்கள் என தோன்றுகிறது.

இன்னொரு பக்கம் நடப்பு சாம்பியனாக இருக்கும் இங்கிலாந்து அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும் 2 வது அரையிறுதி போட்டியில் மோத உள்ளது. இந்த இரு அணிகளும் கடந்த டி20 உலக கோப்பை தொடரின் அரையிறுதியில் ஆடி இருந்தபோது இங்கிலாந்து அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியதுடன் கோப்பையையும் கைப்பற்றி இருந்தது.

அப்படி ஒரு சூழலில் மீண்டும் இந்த இரு அணிகள் மோத இந்த முறை இந்திய அணியும் அதிக பலத்துடன் ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் இருந்து வருவதால், யார் வெற்றி பெறுவார்கள் என்பதே போட்டியின் முடிவு வரை கணிக்க முடியாத வகையில் தான் இருக்கும் என தெரிகிறது.

இதற்கு மத்தியில் தான் தற்போது ஐசிசி டி 20 வீரர்களின் பேட்டிங் தரவரிசை பட்டியலும் வெளியாகி இருந்தது. இதில் கடந்த 601 நாட்களாக முதலிடத்தை தக்க வைத்த இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் அந்த இடத்தை இடத்தை தற்போது இழந்துள்ளார். ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட், முதலிடத்திற்கு முன்னேற, சூர்யகுமார் 2 வது இடத்திலும், இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பில் சால்ட் 3 வது இடத்திலும் உள்ளனர்.

நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தில் முறையே பாகிஸ்தான் வீரர்களான பாபர் அசாம் மற்றும் ரிஸ்வான் இருக்கின்றனர். மேலும் சூர்யகுமாரை தவிர முதல் 10 இடத்தில் ஒரே ஒரு இந்திய வீரராக ஜெய்ஸ்வால் 7 வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.