இந்தியாவில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் கிளைகள் அமைப்பது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்த பல்கலைக்கழகங்களின் உலகளாவிய தரவரிசைகளை உற்று நோக்கினால், நமக்கு கிடைக்கும் ரிசல்ட் சற்று வேறுபட்டதாக உள்ளது.
இந்தியாவில் வளாகங்களை தொடங்கத் திட்டமிடும் பெரும்பாலான கல்வி நிறுவனங்கள், புகழ்பெற்ற ஐவி லீக் பள்ளிகள் அல்லது ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் போன்ற உலகின் முதல் 20 இடங்களிலுள்ள பல்கலைக்கழகங்கள் அல்ல. மாறாக, உலகளாவிய தரவரிசையில் 100 முதல் 300 இடங்களுக்குள் இருப்பவையே அதிகம்.
கல்வியாளர்கள் கூற்றுப்படி, உலகின் மிக உயரிய தரவரிசை பல்கலைக்கழகங்கள் பொதுவாக வெளிநாடுகளில் கிளைகளை தொடங்குவதில்லை. சிறந்த அறிஞர்களையும் மாணவர்களையும் ஈர்க்க, தங்கள் வளங்களை ஒரு மைய இடத்தில் குவித்து கொள்வதையே அவை விரும்புகின்றன. இதற்கு நேர்மாறாக, உலகின் முதல் 50 இடங்களுக்குக் கீழ் உள்ள பல்கலைக்கழகங்கள், சர்வதேச அளவில் தங்களை விரிவுபடுத்திக் கொள்ள அதிக ஆர்வம் காட்டுகின்றன.
இந்தியா நோக்கி வரும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில், ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள் முன்னிலை வகிக்கின்றன. டீக்கின் பல்கலைக்கழகம் குஜராத்தின் கிஃப்ட் சிட்டியில் வளாகம் அமைத்த முதல் வெளிநாட்டுப் பல்கலைக்கழகம் என்ற பெருமையை பெற்றது. இது ஜூலை 2024 முதல் வணிக பகுப்பாய்வு மற்றும் சைபர் செக்யூரிட்டி ஆகிய துறைகளில் முதுகலை பட்டப்படிப்புகளை வழங்கி வருகிறது.
இதை தொடர்ந்து, வோலோங்காங் பல்கலைக்கழகம் நவம்பர் 2024 முதல் தொழில்நுட்பம் சார்ந்த ஐந்து திட்டங்களை வழங்க தொடங்கியது. உலக அளவில் 13வது இடத்தில் உள்ள மெல்போர்ன் பல்கலைக்கழகம் , கல்விப் படிப்புகளுக்கு பதிலாக, பல்வேறு கூட்டாண்மைகளை எளிதாக்கும் வகையில், டெல்லியில் ஒரு கற்பித்தல் அல்லாத உலகளாவிய மையத்தைத் திறந்துள்ளது.
மற்ற குறிப்பிடத்தக்க வருகைகளில், சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகம், இந்தியாவின் யுஜிசி வழிகாட்டுதலின் கீழ் செயல்படும் முதல் வெளிநாட்டு பல்கலைக்கழகமாக குருகிராமில் தனது செயல்பாடுகளை தொடங்கவுள்ளது. லிவர்பூல் பல்கலைக்கழகம் 2026-க்குள் பெங்களூருவில் ஒரு வளாகத்தைத் திறக்க திட்டமிட்டுள்ளது. இது வணிகம், தொழில்நுட்பம் மற்றும் பயோமெடிக்கல் படிப்புகளின் கலவையை வழங்கும்.
அமெரிக்காவைச் சேர்ந்த இலினாய்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இந்தியாவில் சுதந்திரமாக பட்டங்களை வழங்க அனுமதி பெற்ற முதல் அமெரிக்க பல்கலைக்கழகமாக மும்பையில் தனது வளாகத்தை 2026ஆம் ஆண்டு திறக்க உள்ளது. வெஸ்டர்ன் சிட்னி பல்கலைக்கழகம் , உத்தரப் பிரதேசத்தில் வளாகம் அமைக்க ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. மேலும், குயின்ஸ் பல்கலைக்கழகமும் 2026 முதல் ஐந்து முதுகலை படிப்பு திட்டங்களுடன் தனது செயல்பாடுகளை தொடங்கவுள்ளது.
சரே பல்கலைக்கழகம் மற்றும் யார்க் பல்கலைக்கழகம் ஆகியவையும் இந்தியாவிற்குள் வர திட்டங்களை வைத்துள்ளன.
உலகின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களாக இவை இல்லாவிட்டாலும், இந்த வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் பெரும்பாலான இந்திய பல்கலைக்கழகங்களை விட உயர்ந்த தரவரிசையில் உள்ளன. அவற்றின் வருகை, இந்திய உயர்கல்வியின் ஒட்டுமொத்தத் தரத்தையும், சர்வதேச அளவில் மாணவர்கள் வெளிப்படும் வாய்ப்புகளையும் மேம்படுத்தும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்திய மாணவர்களுக்கு ஒரு புதிய வாய்ப்புத் தளத்தை உருவாக்குமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
