ரூ.100 கோடிக்கு ஹெலிகாப்டர் வாங்கிய முதல் இந்தியர்.. அம்பானி, அதானி, ரத்தன் டாடா இல்லை..!

By Bala Siva

Published:

இந்தியாவின் முன்னணி பணக்காரர்களான முகேஷ் அம்பானி, அதானி, ரத்தன் டாடா உள்ளிட்டோர் வாங்காத 100 கோடி ரூபாய் ஹெலிகாப்டரை கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

கேரளாவை சேர்ந்த ரவி பிள்ளை என்பவர் 100 கோடி ரூபாய்க்கு ஹெலிகாப்டர் வாங்கியுள்ளதாகவும் ஏர்பஸ் ஹெச் 145 என்ற ரக ஹெலிகாப்டர் வாங்கிய முதல் இந்தியர் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த ஹெலிகாப்டர் ஆசியாவிலேயே ஐந்து நபர்களிடம் மட்டுமே உள்ளது என்றும் அதில் ஒருவர் கேரளாவை சேர்ந்த ரவி பிள்ளை என்றும் கூறப்படுகிறது.

68 வயதான தொழிலதிபர் ரவி பிள்ளை ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்து வறுமையில் போராடினார். அதன் பின்னர் தனது கடுமையான உழைப்பு மற்றும் சிறப்பான ஐடியாக்களால் இன்று இந்தியாவின் முன்னணி பணக்காரர்களில் ஒருவராக உள்ளார்.

இவர் வாங்கிய ஏர்பஸ் எச் 145 என்ற ஹெலிகாப்டர் கடல் மட்டத்திலிருந்து 20,000 அடி உயரத்தில் பறக்கும் தன்மை உடையது என்று கூறப்படுகிறது. இந்த ஹெலிகாப்டரை வாங்கியவுடன் அவர் முதல் ட்ரிப்பாக கோவளத்திலிருந்து ராவிஸ் அஷ்டமுடி பகுதிக்கு பயணம் செய்து உள்ளார்.

ஆர்பி குழுமத்தின் உரிமையாளரான இவர் ஹெலிகாப்டரை சுற்றுலா முயற்சிகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளதாக கூறியுள்ளார். ஏனெனில் அவர் மாநிலம் முழுவதும் பல உயர்தர ஹோட்டல்களை வைத்திருப்பதால் அந்தந்த இடங்களுக்கு சென்று செல்வதற்கு இந்த ஹெலிகாப்டரை பயன்படுத்தப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

1953ஆம் ஆண்டு கேரளாவின் சாவரா கிராமத்தில், ரவிப்பிள்ளை பிறந்தார். இவருடைய குடும்பம் விவசாயம் குடும்பமாக வறுமையில் இருந்து வந்தாலும், ரவிப்பிள்ளை கல்வியில் அதிக மதிப்பு வைத்திருந்தார். அருகிலுள்ள கல்லூரியில் பட்டம் பெற்ற பிறகு, கொச்சி பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். ரவிப்பிள்ளைக்கு எப்போதுமே சொந்தத் தொழில் செய்ய ஆசை. கொச்சி பல்கலைக்கழகத்தில் வகுப்புகளில் சேர்ந்தபோது, அவர் தனது சொந்த சிட்-பண்ட் தொழிலைத் தொடங்க அருகிலுள்ள வட்டிக்காரரிடம் ரூ.1 லட்சம் கடன் வாங்கினார். அவர் தனது நிறுவனத்தில் பணம் சம்பாதித்த பிறகு தனது கடனைத் திருப்பித் தந்தார் மற்றும் தொடர்ந்து தனது லாபத்தை சேமித்தார். அதன் பிறகு, அவர் தனது சொந்த கட்டுமானத் தொழிலை நிறுவினார்.

ரவிபிள்ளை தன் வாழ்க்கையில் பல ஏற்ற தாழ்வுகளை அனுபவித்தார். வேலூர் ஹிந்துஸ்தான் நியூஸ் பிரிண்ட் பேக்டரியில் இருந்து ஒப்பந்தம் பெற்றபோது, பெரும் பின்னடைவைச் சந்தித்தார். தொழிலாளர் வேலைநிறுத்தம் காரணமாக, அவர் தனது வணிகத்தை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது.

அதன்பிறகு அவர் 1978ஆம் ஆண்டு அவர் இந்தியாவை விட்டு வெளியேறி சவுதி அரேபியாவுக்கு பயணம் செய்தார். அங்கு அவர் தனது வர்த்தகத்தையும் கட்டிடத் தொழிலையும் தொடங்கினார். 150 பேருடன் சொந்த கட்டுமான நிறுவனத்தை நிறுவிய அவர் இன்று கோடிக்கணக்கான மதிப்புள்ள நிறுவனமாக மாற்றியுள்ளார்.

ரவி பிள்ளையின் இன்றைய சொத்து மதிப்பு $2.5 பில்லியன் என்று ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.