2000 ரூபாய் நோட்டை திரும்ப பெற்றுக் கொள்வதாக என இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிவித்த நிலையில் நேற்று முதல் வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. வங்கியில் 2000 ரூபாய் நோட்டை மாற்றுவதற்கு எந்த விதமான நிபந்தனையும் இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் தினமும் பத்து 2000 ரூபாய் நோட்டுகளை மட்டுமே மாற்ற முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களிடம் 2000 ரூபாய் நோட்டு இதுவரை இல்லாத நிலையில் திடீரென அனைத்து மக்களிடமும் நேற்று முதல் 2000 நோட்டு புழங்கியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. கோடிக்கணக்கில் 2000 ரூபாய் நோட்டை பதுக்கி வைத்தவர்கள் ஏஜெண்டுகள் மூலம் பொதுமக்களிடம் 2000 ரூபாய் நோட்டுகளை கொடுத்து அவற்றை மாற்றக் கூறி அதற்கு கமிஷன் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து சாதாரண காய்கறி கடை மளிகை கடை முதல் நகைக்கடை வரை நேற்று ஒரே நாளில் கோடிக்கணக்கில் 2000 ரூபாய் நோட்டு குவிந்து வந்ததாகவும் இவ்வளவு நாள் இந்த நோட்டுகள் எல்லாம் எங்கே இருந்தது என்று கேள்வி எழுப்பும் வகையில் இருந்தது என்றும் கூறப்படுகிறது. 2000 ரூபாய் நோட்டை பார்த்து மாத கணக்கில் ஆகிறது வருட கணக்கில் ஆகிறது என்று கூறியவர்கள் கூட 2000 ரூபாய் நோட்டை எடுத்துக்கொண்டு கடைக்கு செல்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் ஸ்விக்கி, ஜொமேட்டோ உள்ளிட்ட ஆன்லைன் உணவு நிறுவனங்களிடம் கிட்டத்தட்ட அனைவருமே 2000 ரூபாய் நோட்டை தான் மாற்றி வருகிறார்கள் என்றும் 100 ரூபாய் பெட்ரோல் போடுவதற்கு கூட 2000 ரூபாய் நோட்டை மாற்றி வருகிறார் என்றும் கூறப்படுகிறது. நேற்று ஒரே நாளில் கோடிக்கணக்கான 2000 ரூபாய் நோட்டு பதுக்கல்காரர்களிடம் இருந்து வெளியே வந்துள்ளது என்ற தகவல் இந்த அறிவிப்பு வெளியிட்ட ரிசர்வ் வங்கிக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில் 2000 ரூபாய் நோட்டை பதுக்கி வைத்தவர்களுக்கு இந்த அறிவிப்பு மிகப்பெரிய பதட்டத்தை அளித்துள்ளது என்பதும் 2000 ரூபாய் நோட்டை கடந்த சில வருடங்களாக பார்த்தே இராத ஏழை எளிய மக்களுக்கு தற்போது ஒரு ஜாக்பாட் அடித்துள்ளது என்றும் கூறப்படுகிறது.