தமிழகத் தேர்தல் களம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் அனல் பறக்கும் பிரச்சாரங்களுக்கு இணையாக தேர்தல் கருத்துக்கணிப்புகளும் மக்களை வந்து சேர்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால், சமீபகாலமாக வெளிவரும் பல கருத்துக்கணிப்புகள் நம்பகத்தன்மை அற்றவையாகவும், குறிப்பிட்ட சில அரசியல் அஜெண்டாக்களின் அடிப்படையில் உருவாக்கப்படுபவையாகவும் இருப்பதை நாம் கண்கூடாக பார்க்க முடிகிறது.
மிக குறைந்த அளவிலான மாதிரிகளை வைத்துக்கொண்டு, அவை ஒட்டுமொத்த தமிழகத்தின் மனநிலை என்று கூறுவதை ஏற்க முடிவதில்லை. ஒவ்வொரு ஊடகமும் தங்களுக்கு சாதகமான ஒரு பிம்பத்தை கட்டமைக்க முயல்வதையும், குறிப்பிட்ட ஒரு தரப்புக்கு சாதகமான சூழல் இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்க முனைவதையும் மக்கள் கவனிக்க தவற கூடாது. கடந்த ஐந்து ஆண்டுகால ஆட்சியில் உங்கள் வாழ்க்கைத்தரம் எப்படி இருந்தது, உங்கள் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டதா என்பதை அடிப்படையாக கொண்டு நீங்களே ஒரு முடிவெடுப்பதே சரியான ஜனநாயக முறையாக இருக்கும்.
சமீபத்தில் ஒரு மூத்த பத்திரிகையாளர் அவர்கள் வெளியிட்ட ஒரு தகவல், தேசிய அளவிலான ஆங்கில ஊடகங்களின் நம்பகத்தன்மை குறித்த பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது. தேர்தல் வியூக நிபுணர் ஜே.வி.சி ஸ்ரீராம் அவர்கள் இந்தியா முழுக்க ஆய்வு நடத்தி வெளியிடும் கருத்துக்கணிப்பு முடிவுகளை ஒரு முன்னணி ஆங்கில ஊடகத்திடம் சமர்ப்பித்தபோது, அவர்கள் அந்த தரவுகளை மாற்ற சொல்லி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. ஜே.வி.சி ஸ்ரீராமின் ஆய்வின்படி அதிமுக கூட்டணி 131 முதல் 150 தொகுதிகள் வரை வென்று ஆட்சியை பிடிக்கும் என்றும், திமுக 80 முதல் 101 தொகுதிகள் வரை பெற்று எதிர்க்கட்சியாக அமரும் என்றும் முடிவுகள் வந்திருந்தன. ஆனால், அந்த ஆங்கில ஊடகம் திமுக வெற்றி பெறுவது போலவும், அதிமுக எதிர்க்கட்சியாக வருவது போலவும் எண்களை மாற்ற கோரியது அதிர்ச்சியை அளிக்கிறது. இதற்கு உடன்படாத ஸ்ரீராம், அந்த ஊடகத்திலிருந்து வெளியேறி தனது முடிவுகளை தனிப்பட்ட முறையில் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
ஊடகங்களின் இத்தகைய போக்கு, திமுகவின் கட்டுப்பாடு தமிழக ஊடகங்களை தாண்டி தேசிய அளவிலான சில ஆங்கில ஊடகங்கள் வரை நீண்டிருப்பதையே காட்டுகிறது. மக்களிடம் ஒரு குறிப்பிட்ட எண்ணவோட்டத்தை உருவாக்க இத்தகைய முறையற்ற அழுத்தங்கள் ஊடகங்கள் மீது பிரயோகிக்கப்படுகின்றன. ஒருவேளை ஆய்வின் முடிவுகள் தவறாக இருப்பதாக அந்த ஊடகம் கருதினால், அதை நிராகரிக்க அவர்களுக்கு உரிமை உண்டு; ஆனால், முடிவுகளை தங்களுக்கு சாதகமாக மாற்ற சொல்வது என்பது ஊடக தர்மத்திற்கு எதிரானது. சுமார் 2.5 லட்சம் மக்களிடம் எடுக்கப்பட்ட விரிவான ஆய்வின்படி, அதிமுக 40-41% வாக்குவிகிதத்துடன் வலுவாக இருப்பதாக தரவுகள் கூறுகின்றன. ஆனால், ஆட்சியில் இருப்பவர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் பல ஊடகங்கள் மிக தீவிரமாக செயல்படுவதை நாம் உணர முடிகிறது.
இறுதியாக, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்களின் பிரச்சார பயணத்தையும் நாம் கவனிக்க வேண்டியுள்ளது. காரைக்குடி போன்ற இடங்களுக்கு செல்லும் அவர், மக்களிடம் பேசாமலேயே திரும்புவது ஒரு விசித்திரமான உத்தியாக தெரிகிறது. ஊடகங்கள் அவருக்கு ஒரு மிகப்பெரிய பிம்பத்தை உருவாக்கி, அவர் பேசாமலேயே அவர் குறித்து தொடர்ச்சியான செய்திகளை வெளியிடுகின்றன. இத்தகைய சூழலில், மக்கள் ஊடகங்கள் காட்டும் பிம்பங்களையோ அல்லது திணிக்கப்படும் கருத்துக்கணிப்புகளையோ நம்பி ஏமாற கூடாது. விவசாயிகள் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது முதல் துப்பாக்கி சூடு வரை கடந்த ஐந்து ஆண்டுகளில் நீங்கள் நேரில் கண்ட நிஜங்களை மனதில் வைத்து வாக்களியுங்கள். உங்கள் வாக்கு என்பது வெறும் காகிதம் அல்ல, அது தமிழகத்தின் அடுத்த ஐந்து ஆண்டுகால எதிர்காலத்தை தீர்மானிக்கும் மிக வலிமையான ஆயுதம் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
