காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ-வுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 75. இவர் தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமியின் அண்ணன் ஈ.வெ.கிருஷ்ணசாமியின் பேரனும் அவர் மகன் ஈ. வெ. கி. சம்பத் அவர்களின் மகனும் ஆவார்.
ஈரோட்டில் 1948-ல் பிறந்த இளங்கோவன் சென்னை மாநிலக் கல்லூரியில் படித்த போது காங்கிரஸ் கட்சியின் மாணவரணி செயலாளராக இருந்தார். 1984-ல் முதன்முறையாக சத்யமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி எம்.எல்.ஏ. ஆனார். அதன்பிறகு மீண்டும் 2004 மக்களவைத் தேர்தலில் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் வெற்றி பெற்று 2009-வரை மன்மோகன் சிங் ஆட்சியில் மத்திய இணை அமைச்சராகப் பணியாற்றினார்.
தொடர்ந்து இரண்டு முறை தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவராகப் பொறுப்பு வகித்தார். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பினை இழந்தார். அதன்பிறகு ஈரோடு கிழக்குத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த இவரது மகன் திருமகன் 2023-ல் திடீர் மாரடைப்பால் காலமானார். இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் மகன் விட்டுச் சென்ற இடத்தில் மீண்டும் போட்டியிட்டார். இதில் அவர் வெற்றி பெற்று மீண்டும் 39 வருடங்களுக்குப் பிறகு சட்டமன்றத்தில் நுழைந்தார்.
இந்நிலையில் அவருக்கு நுரையீரல் தொற்று காரணமாக சென்னையிலுள்ள மியாட் மருத்துவமனையில் கடந்த நவம்பர் 11-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவரை முதல்வர் ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட பலர் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.
தொடர் சிகிச்சையில் இருந்த அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்படவே இன்று காலை காலாமானதாக மியாட் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவருக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். ஈவிகேஎஸ் உடல் அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
அதன்பின் தொண்டர்கள் அஞ்சலிக்காக காங்கிரஸ் தலைமையகமான சத்யமூர்த்தி பவனில் வைக்கப்பட்டு நாளை இறுதிச் சடங்கு நடைபெறுகிறது. ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு திருமாவளவன், பாரிவேந்தர் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.