பொதுச்செயலாளராக ஈபிஎஸ் சந்திக்கும் முதல் தேர்தல்.. விஜய் அரசியல் வாழ்வில் சந்திக்கும் முதல் தேர்தல்.. அப்பா துணை இல்லாமல் அன்புமணி சந்திக்கும் முதல் தேர்தல்.. வாழ்வா சாவா போராட்டத்தில் சீமான் சந்திக்கும் தேர்தல்.. நயினார் நாகேந்திரன் தலைமையில் பாஜக சந்திக்கும் முதல் தேர்தல்..

தமிழ்நாடு அரசியல் களம், 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, நீண்ட இடைவெளிக்கு பிறகு மிகுந்த எதிர்பார்ப்பையும், சவால்களையும், தனிப்பட்ட நெருக்கடிகளையும் கொண்ட ஒரு திருப்புமுனை தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வருகிறது. அனைத்து முக்கிய அரசியல்…

politics

தமிழ்நாடு அரசியல் களம், 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, நீண்ட இடைவெளிக்கு பிறகு மிகுந்த எதிர்பார்ப்பையும், சவால்களையும், தனிப்பட்ட நெருக்கடிகளையும் கொண்ட ஒரு திருப்புமுனை தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வருகிறது. அனைத்து முக்கிய அரசியல் ஆளுமைகளுக்கு இந்த தேர்தல், வெற்றியை தாண்டி, அவர்களின் அரசியல் இருப்பு, தலைமை பண்பு மற்றும் கட்சியின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ‘வாழ்வா-சாவா’ போட்டியாக மாறியுள்ளது.

திமுக தலைமையிலான ஆட்சியை தீர்மானிப்பதோடு, அதிமுக, பாமக, நாம் தமிழர், மற்றும் புதிதாகக் களமிறங்கும் தமிழக வெற்றி கழகம் ஆகியவற்றின் அடுத்தகட்ட நகர்வுகளும் இந்தத் தேர்தல் முடிவிலேயே தங்கியுள்ளன.

1. பொதுச் செயலாளராக ஈபிஎஸ் சந்திக்கும் முதல் தேர்தல்:

அதிமுகவின் பொதுச்செயலாளராக இந்திய தேர்தல் ஆணையத்தால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பிறகு, எடப்பாடி பழனிசாமி சந்திக்கும் முதல் பொதுத் தேர்தல் இது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, உட்கட்சிப் பூசல்கள், இரட்டை தலைமை மோதல், ஓபிஎஸ் நீக்கம் என பல சட்ட மற்றும் அரசியல் சவால்களைச் சந்தித்து, கட்சியை தனியொருவராக கட்டுக்கோப்புக்குள் கொண்டு வந்தவர் ஈபிஎஸ்.

இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுத்தாலும், இதுவரையிலான தேர்தல்களை ஜெயலலிதா என்ற பிம்பத்தின் பின்னாலோ அல்லது கூட்டணி பலத்திலோ எதிர்கொண்ட அதிமுக, தற்போது ஈபிஎஸ் என்ற தனிப்பட்ட தலைவரின் கீழ், தனது கோட்டையான வாக்குகளை தக்கவைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. கட்சிக்குள் எஞ்சியுள்ள எதிர்ப்புகளை முழுமையாக ஒழித்து, கட்சியை தனிப்பெரும் சக்தியாக நிலைநிறுத்தி, தனது தலைமை பண்பை நிரூபிப்பது ஈபிஎஸ்-ஸின் ஒரே இலக்கு. பாஜகவுடனான உறவில் ‘பரஸ்பர நல்லுறவு’ தொடர்ந்தாலும், அதிமுகவின் முடிவுகளில் பாஜக தலையிட முடியாது என்ற தனித்துவமான நிலைப்பாட்டை மக்கள் மத்தியில் கொண்டு செல்வது மிக முக்கியமாகும்.

2. விஜய் அரசியல் வாழ்வில் சந்திக்கும் முதல் தேர்தல்: டிவிகே-வின் தாக்கம் என்ன?

நடிகர் விஜய் அவர்கள் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கிய பின், ஒரு முழுமையான அரசியல் கட்சி தலைவராக சந்திக்கும் முதல் தேர்தல் இது. தனது உச்சபட்ச சினிமா செல்வாக்கை அரசியல் வாக்குகளாக மாற்ற வேண்டிய பெரும் சவாலை அவர் எதிர்கொள்கிறார். நடிகர் என்ற பிம்பத்திலிருந்து அரசியல் தலைவர் என்ற உருமாற்றத்தை மக்களிடம் ஏற்படுத்துவது. கட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்துவது மற்றும் தேர்தல் அரசியலின் கூட்டணி, தொகுதிப் பங்கீடு போன்ற நுணுக்கங்களைக் கையாளுவது.

தவெகவின் வாக்குகள் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிட கட்சிகளின் வாக்குகளையும் பிரிக்கும் சக்தியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, 5,000க்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் முடிவுகள் வரும் தொகுதிகளில், தவெகவின் வருகை வெற்றியாளரை தீர்மானிக்கும் சக்தியாக மாறும். அவரது தேர்தல் முடிவே, திராவிட அரசியலின் அடுத்தகட்ட போக்கை நிர்ணயிக்கும்.

3. அப்பா துணை இல்லாமல் அன்புமணி சந்திக்கும் முதல் தேர்தல்: பாமகவின் எதிர்காலம்!

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்களின் உடல்நலன் மற்றும் கட்சிக்குள் சமீபத்தில் ஏற்பட்ட அதிகார பூசல்களுக்குப் பிறகு, அன்புமணி ராமதாஸ் சந்திக்கும் முதல் பெரிய தேர்தல் இது. தந்தையின் வலுவான வழிகாட்டுதல் மற்றும் ஆதரவு இல்லாமல் அவர் பாமகவின் செல்வாக்கை தக்கவைக்க வேண்டிய நிர்பந்தம் எழுந்துள்ளது.

4. வாழ்வா சாவா போராட்டத்தில் சீமான் சந்திக்கும் தேர்தல்: வாக்கு சதவிகிதத் தக்கவைப்பு!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்திக்கும் இந்த தேர்தல், அவரது தமிழ் தேசிய அரசியலுக்கும், அவர் உருவாக்கி வந்த தனிப்பட்ட வாக்கு பகுதிக்கும் ஒரு வாழ்வா-சாவா போராட்டம். ஒவ்வொரு தேர்தலிலும் தனது வாக்கு சதவீதத்தை உயர்த்தி காட்டிய அவர், இந்த முறை தவெகவின் வருகையால் உருவாகும் புதிய சவாலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. நடிகர் விஜய்யின் வருகை, சீமானின் இளைஞர் மற்றும் மாற்று அரசியல் வாக்காளர்களை பிரிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தனது தமிழ் தேசிய அரசியலை தக்கவைத்துக்கொள்வதுடன், நிலையான மூன்றாவது சக்தி நான்தான் என்பதை மீண்டும் ஒருமுறை வாக்கு சதவீதத்தின் மூலம் நிரூபிப்பது அவரது மிகப்பெரிய சவால்.

5. நயினார் நாகேந்திரன் தலைமையில் பாஜக சந்திக்கும் முதல் தேர்தல்:

தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்ற பிறகு, நயினார் நாகேந்திரன் தலைமையில் அக்கட்சி சந்திக்கும் முதல் சட்டமன்றத் தேர்தல் இது. முன்னாள் தலைவர் அண்ணாமலை அவர்கள் உருவாக்கிய புதிய உத்வேகத்தைத் தக்கவைத்து கொண்டு, அதை வாக்கு வங்கியாக மாற்ற வேண்டிய மிகப்பெரிய சுமை இவர் மீது சுமத்தப்பட்டுள்ளது. பாஜகவை வெறும் தேசிய கட்சியாக அல்லாமல், மாநில அரசியலில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் கட்சியாக மாற்றுவது. தனது தலைமையின் கீழ், சில தொகுதிகளில் வெற்றி பெற்று, தமிழகத்தில் தனக்கென ஒரு நிரந்தரமான அரசியல் தளத்தை உருவாக்குவது. அதிமுகவுடன் கூட்டணி அமைந்தாலும், கூட்டணியில் அதிகமான இடங்களை பெறுவதிலும், தமிழகத்தில் பாஜகவின் தேசிய தலைமையின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதிலும் நயினார் நாகேந்திரன் கவனம் செலுத்துவார்.

6. திமுக தலைவர் ஸ்டாலின் சென்டிமெட்டை மாற்றுவாரா?

கடந்த 50 ஆண்டுகளாக திமுக இரண்டாவது முறை வெற்றி பெற்று ஆட்சியை பிடித்ததாக சரித்திரமே இல்லை என்ற நிலையில் அந்த சென்டிமெட்டை திமுக தலைவரும் முதல் வருமான ஸ்டாலின் மாற்றுவாரா என்ற கேள்வி தான் தற்போது திமுக தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நல்ல திட்டங்கள், பாரம்பரிய வாக்குகள், வலுவான கூட்டணி ஆகியவை திமுகவுக்கு சாதகமாக இருந்தாலும், ஆட்சி மீதான மக்களின் அதிருப்தி பாதகமாக உள்ளது. அந்த பாதகத்தையும் சாதகமாக மாற்றி இரண்டாவது முறையும் ஆட்சியை திமுக பிடிக்க முடியும் என்ற சாதனையை கட்சியின் தலைவர் நிறைவேற்றுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

மொத்தத்தில் 2026 தேர்தல் முடிவுகள், இந்த ஐந்து தலைவர்களின் தனிப்பட்ட அரசியல் பயணத்தை மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் அடுத்த பத்தாண்டுகால அரசியல் போக்கையும், யார் ஆளுமை செலுத்துவார்கள் என்பதையும் நிர்ணயிக்கும் ஒரு மைல்கல்லாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.