மாற்றம் என்பது புதியதை உருவாக்குவதில் மட்டுமல்ல, பழையதை புதுப்பிப்பதிலும் இருக்கிறது என்று சொல்வார்கள் . இதனை உணர்த்தும் வகையில், கோயம்புத்தூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் AR4 Tech நிறுவனம், பெட்ரோலில் இயங்கும் வாகனங்களை மின்சார வாகனங்களாக மாற்றும் முயற்சியில் முன்னிலை வகிக்கிறது.
2021-ல் சிவசங்கரி.டி.பி என்ற பெண் தொழில்முனைவோரால் தொடங்கப்பட்ட இந்த ஸ்டார்ட்அப், தற்போது Tier 3 மற்றும் Tier 4 நகரங்களில் மின்னணு வாகனங்களை எளிதில் கிடைக்கச் செய்து, அந்தக் குடியிருப்பு மக்களுக்கு தொழில் வாய்ப்புகளும் வழங்கி வருகிறது.
AR4 Tech நிறுவனம், OEM/ODM சேவைகள், மின் மற்றும் சூரிய சக்தி இயங்கும் வாகனங்கள் மற்றும் அவற்றின் பாகங்களைத் தயாரிப்பதில் சிறப்பு பெற்றது. குறிப்பாக, இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்களை மின்சாரத்தில் இயங்கும் வகையில் மாற்றுவதற்கான ஹைபிரிட் மற்றும் முழுமையான மாற்று (conversion) கிட்-களை உருவாக்கி வருகிறது.
காஞ்சிபுரம் அருகில் ஒரு கிராமத்தில் பிறந்த சிவசங்கரி, சாதனைகளை நோக்கிச் சென்று, தன் கிராமத்தில் முதன்முதலாக பட்டம் பெற்ற பெண்களில் ஒருவராக உயர்ந்தவர். பள்ளியில் முதல் மாணவியாக இருந்த அவரது வாழ்க்கை, EMF Innovations நிறுவனத்தில் பெற்ற அனுபவம் மூலம் மாறியது. அங்கு மின் மோட்டார்களின் உற்பத்தியைப் பார்த்தபின், எலக்ட்ரிக் வாகனங்களை மலிவாக கொண்டு வர வேண்டும் என்ற தீர்மானத்துடன் AR4 Tech-ஐ உருவாக்கினார்.
AR4 Tech நிறுவனத்தின் EV மாற்று கிட் ₹39,900 என்ற குறைந்த விலையில் கிடைக்கிறது. இது இரண்டு முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கிறது: அவை ஒன்று மக்களுக்கு ஏற்ற விலை, இரண்டு சுற்றுச்சூழல் பசுமை பாதுகாப்பு.
இந்த மாற்று முறையில், இந்தியாவில் தயாரிக்கப்படும் மின்னணு மோட்டார், சோடியம்-அயான் பேட்டரி போன்றவை பயன்படுத்தப்படுவதால், செலவுகள் குறைவதோடு, பயன்முறையும் சிறப்பாக அமைகிறது. சாதாரண 15-ஆம்பியர் சாக்கெட்டில் 3 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்யக்கூடிய இந்த வாகனம், தினமும் 80 கிமீ வரை பயணிக்க முடியும்.
மற்ற EV நிறுவனங்களை விட வேறுபட்டது AR4 Tech. Tier 3 மற்றும் Tier 4 நகரங்களையே மையமாகக் கொண்டு செயல் படுகிறது. இத்திட்டம் வெற்றிகரமாக அமைந்து, இரு சக்கர வாகனங்களில் 95% விற்பனையும் இந்த பகுதிகளிலிருந்தே வருகிறது.
வாகனங்களை நேரடியாக மக்களிடம் கொண்டு சென்று, உள்ளூர் இன்ப்ளூயன்சர்கள் மூலமாக விளம்பரம் செய்தல், டீலர்ஷிப் வாய்ப்புகள், பயிற்சி நிகழ்ச்சிகள் போன்றவையும் இந்த நிறுவனத்தின் அப்ரோச் அனைவரையும் கவர்ந்துள்ளது.
இனிவரும் காலங்களில், ஹைட்ரஜன் தொழில்நுட்பம், ட்ரோன் டெக், மற்றும் EV தொழில்நுட்பத்திற்கான தொழில்நுட்பக் கல்வி மையங்களை உருவாக்கும் திட்டங்களும் உள்ளன.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
