தமிழக அரசியல் சதுரங்கத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான காய்நகர்த்தல்கள் இப்போதே உச்சக்கட்டத்தை எட்டியுள்ளன. கடந்த சில தேர்தல்களில் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, தற்போதைய சூழல் மிகவும் சவாலான ஒன்றாக மாறியுள்ளது. ஒருபுறம் திமுகவின் பலம், மறுபுறம் பாஜகவின் மறைமுக அழுத்தம் என நெருக்கடிகளுக்கு நடுவே, நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ ஏற்படுத்தியுள்ள தாக்கம், எடப்பாடியை தனது அரசியல் வியூகத்தை மாற்றியமைக்க தூண்டியிருப்பதாக தெரிகிறது.
எடப்பாடி பழனிசாமிக்கு இப்போது இருக்கும் மிகப்பெரிய தலைவலி, கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை தக்கவைத்துக் கொள்வதும், உட்கட்சி எதிர்ப்புகளை சமாளிப்பதும் ஆகும். குறிப்பாக, ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் எடப்பாடியை வீழ்த்துவதையே தங்களது முதன்மை நோக்கமாகக் கொண்டு காய்களை நகர்த்தி வருகின்றனர். இந்த சூழலில், விஜய்யுடன் கூட்டணி அமைத்தால், ‘ஒரே கல்லில் இரண்டு மாங்காய்’ என்பது போல, இந்த அரசியல் எதிரிகளை தேர்தல் களத்தில் ஓரங்கட்டுவதுடன், அதிமுகவின் வாக்கு வங்கியை பாதுகாக்கவும் முடியும் என அவர் கணக்குப் போடுவதாக கூறப்படுகிறது.
பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் மீண்டும் சிறுபான்மையினர் மற்றும் நடுநிலை வாக்காளர்களின் அதிருப்தியை சம்பாதிக்க நேரிடும் என்பதை ஈபிஎஸ் நன்கு உணர்ந்துள்ளார். சமீபத்திய செய்திகளின்படி, பாஜகவின் பியூஷ் கோயல் அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தினாலும், எடப்பாடி பழனிசாமி தவெக-வின் பக்கம் ஒரு கண் வைத்துள்ளார். பாஜகவின் அழுத்தத்திலிருந்து தப்பித்து, ஒரு மதச்சார்பற்ற பிம்பத்தை மீட்டெடுக்க விஜய்யுடன் கைகோர்ப்பதே சரியான முடிவாக இருக்கும் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.
அதிமுக போன்ற ஒரு மாபெரும் இயக்கத்திற்கு துணை முதல்வர் பதவி என்பது சற்று பின்னடைவாக தெரிந்தாலும், தற்போதைய இக்கட்டான நிலையில் அது ஒரு தற்காப்பு வியூகமாக பார்க்கப்படுகிறது. 2026-ல் மூன்றாவது இடத்தை பிடித்து பலத்தை இழப்பதை விட, விஜய்யுடன் இணைந்து அதிகாரத்தை பகிர்ந்துகொள்வது புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும். இதன் மூலம், திமுகவின் வெற்றி வாய்ப்பை தடுப்பதுடன், அரசு நிர்வாகத்தில் மீண்டும் ஒரு பங்கை பெறவும் வாய்ப்பு ஏற்படும்.
விஜய்யின் தவெக தற்போது இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று வருகிறது. ஆனால், அவர்களுக்கு தேவையான அடிமட்ட கட்டமைப்பு அதிமுகவிடம் பலமாக உள்ளது. இந்த இரண்டு சக்திகளும் இணைந்தால், அது திமுகவிற்கு மிகப்பெரிய சவாலாக அமையும். எடப்பாடி பழனிசாமி ‘மாற்றி யோசிப்பதன்’ பின்னணியில், தனது பொதுச்செயலாளர் பதவியை உறுதிப்படுத்துவதும், கட்சியின் எதிர்காலத்தை காப்பாற்றுவதும் மட்டுமே பிரதான இலக்குகளாக உள்ளன.
இருப்பினும், தவெக சார்பில் ‘விஜய்தான் முதல்வர் வேட்பாளர்’ என்ற நிபந்தனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதற்கு எடப்பாடி பழனிசாமி சம்மதிப்பாரா அல்லது தொகுதி பங்கீட்டில் விட்டுக்கொடுத்துத் தனது செல்வாக்கை நிலைநாட்டுவாரா என்பது பொங்கல் பண்டிகைக்குப் பின் தெளிவாகும். பாஜகவை நம்பி இருப்பதை விட, புதிய அரசியல் சக்தியுடன் கைகோர்ப்பதே அதிமுகவின் 50 ஆண்டுகால வரலாற்றை தொடர செய்யும் என்று எடப்பாடி பழனிசாமி தீவிரமாக யோசித்து வருவதாக தெரிகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
