ஓபிஎஸ், டிடிவி இல்லையெனில் ஈபிஎஸ்க்கு இன்னும் ஒரு தோல்வி உறுதி.. கூட்டணிக்கு வர தயக்கம்.. உண்மையான போட்டி திமுக – தவெக இடையே தான்..

தமிழக அரசியல் களத்தில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பெரும் வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. இந்த சூழலில், பாஜக கூட்டணியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், அதிமுக கூட்டணிக்கு எந்த கட்சியும் செல்லாது என்ற ஒரு வலுவான…

ops eps ttv

தமிழக அரசியல் களத்தில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பெரும் வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. இந்த சூழலில், பாஜக கூட்டணியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், அதிமுக கூட்டணிக்கு எந்த கட்சியும் செல்லாது என்ற ஒரு வலுவான கருத்து நிலவுகிறது. குறிப்பாக, பாஜக உடனிருந்தால், அதிமுக கூட்டணிக்கு சேர வாய்ப்பே இல்லை என அரசியல் பார்வையாளர்கள் திட்டவட்டமாகக்கூறுகின்றனர்.

ஒருங்கிணைந்த அதிமுகவின் அவசியம்:
அரசியல் கட்சிகள் ஒரு ஒருங்கிணைந்த அதிமுகவைத்தான் விரும்புவார்கள் என்று பரவலாக நம்பப்படுகிறது. ஆனால், எடப்பாடி பழனிசாமி தனது தலைமையை நிலைநிறுத்தி கொள்ள வேண்டும் என்பதற்காக ஓ. பன்னீர்செல்வத்தை கட்சியிலிருந்து வெளியேற்றியது, அவரது சமூகத்தின் வாக்குகளை பெருமளவில் அதிமுக இழக்க வைத்தது. அதேபோல், டிடிவி தினகரன் வெளியேற்றப்பட்டதும் எடப்பாடி பழனிசாமி செய்த மிகப்பெரிய தவறு என்று சுட்டிக்காட்டப்படுகிறது.

இந்த இருவரும் அதிமுகவில் இருந்திருந்தால், 2021 இல் அதிமுக ஆட்சியை இழந்திருக்காது என்ற கருத்து பரவலாக உள்ளது. இப்போதும் இந்த இருவருக்கும் ஓரளவிற்கு செல்வாக்கு இருக்கிறது என்பதற்கு 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஓபிஎஸ் தனித்துப் போட்டியிட்டு மூன்று லட்சம் வாக்குகள் வாங்கினார் என்பது ஒரு சான்றாக கூறப்படுகிறது. தென் மாவட்டங்களில் ஓபிஎஸ் செல்வாக்குமிக்க தலைவராக இன்னும் இருக்கிறார்.

எனவே, டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரையும் கட்சிக்குள் அழைத்து, ஒருங்கிணைந்த அதிமுகவை உருவாக்கினால் மட்டுமே அதிமுகவுக்கு செல்வாக்கு அதிகரிக்கும்; கூட்டணி கட்சிகளுக்கும் ஈர்ப்பு வரும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஆனால், அதை எடப்பாடி பழனிசாமி செய்ய போவதில்லை எனவும், எனவே அதிமுகவுக்கு கூட்டணி கட்சிகள் வரப்போவதில்லை எனவும் தெரிவிக்கின்றனர். மக்களும் ஒரு ஒருங்கிணைந்த அதிமுகவையே விரும்புகிறார்கள் என்பதே யதார்த்தம்.

எடப்பாடியின் தொடர் தோல்விகளும் பகல் கனவும்:
எடப்பாடி பழனிசாமி தலைமையில் மூன்று தேர்தல்களில் தோல்வியடைந்த நிலையில், இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களிலும் அதிமுக தோல்வியடைந்துள்ளது. இதை வைத்துக்கொண்டு, பாஜகவையும் கூட்டணியில் வைத்துக்கொண்டு அவர் வெற்றி பெறலாம் என்பது வெறும் பகல் கனவு என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விஜய் வந்தால் மட்டுமே அதிமுக கூட்டணிக்கு ஒரு வாய்ப்பு இருக்கும். அவ்வாறு இல்லை என்றால், அதிமுக கூட்டணி மீண்டும் ஒரு தோல்வியை தான் தழுவும் என்றும் கணிக்கப்படுகிறது.

திமுக vs தமிழக வெற்றிக் கழகம் – உண்மையான போட்டி:

தற்போது தமிழகத்தில் உண்மையான போட்டி திமுகவுக்கும், புதிதாக தொடங்கப்பட்டுள்ள தமிழக வெற்றி கழகத்திற்கும் இடையேதான் உள்ளது என்றும், அதிமுக பல இடங்களில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி சுதாரிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கூட்டணி வாய்ப்புகள்:
நாம் தமிழர் கட்சி, தேமுதிக, பாட்டாளி மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் கூட அதிமுகவுக்கு செல்ல தயக்கம் காட்டி வருகின்றன என்றும் கூறப்படுகிறது. மேலும், திமுக கூட்டணியில் இருந்து எந்த கட்சியும் வெளியே வந்து அதிமுகவை நம்பி கூட்டணி சேர வாய்ப்பு இல்லை என்றும் அரசியல் கள நிலவரம் தெரிவிக்கிறது. ஒட்டுமொத்தத்தில், அதிமுகவின் எதிர்காலம், அதன் தலைமை எடுக்கும் முடிவுகளையும், ஒருங்கிணைப்பு முயற்சிகளையும் பொறுத்தே அமையும் என்பது தெளிவாகிறது.