லைக் போட்டால் லாக்கப்.. ஷேர் செய்தால் சிறை.. போர் படங்களை பகிர்ந்தால் தொலைஞ்சான்.. சமூக வலைத்தள பயனர்களுக்கு துபாய் எச்சரிக்கை.. அரசை புகழ்ந்து மட்டும் தான் பதிவிட வேண்டும்.. போர் படங்களை பதிவு செய்வது மட்டுமின்றி லைக், ஷேர், கமெண்ட்செய்தால் கூட உள்ளே தள்ளிடுவோம்.. அரசு சொல்ற செய்தியை மட்டும் தான் பார்க்கனும்.. ஐக்கிய அரபு அமீரகத்தின் எச்சரிக்கையால் பரபரப்பு.. இது சர்வாதிகாரி ஆட்சி மாதிரி இருக்கே என பொதுமக்கள் புலம்பல்..!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நிலவி வரும் தற்போதைய போர்ச்சூழல் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் தொடர்பான புகைப்படங்கள் அல்லது காணொளிகளை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என்று அங்குள்ள பிரிட்டிஷ் குடிமக்களுக்கு தூதரகம் கடும் எச்சரிக்கை…

dubai34

ஐக்கிய அரபு அமீரகத்தில் நிலவி வரும் தற்போதைய போர்ச்சூழல் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் தொடர்பான புகைப்படங்கள் அல்லது காணொளிகளை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என்று அங்குள்ள பிரிட்டிஷ் குடிமக்களுக்கு தூதரகம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், சேதமடைந்த இடங்கள் அல்லது ஏவுகணை வீழ்ந்த இடங்களை படம் பிடிப்பது அந்நாட்டின் சட்டப்படி கடுமையான குற்றமாக கருதப்படுகிறது. இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் ஐக்கிய அரபு அமீரகத்தின் இணைய குற்றத் தடுப்பு சட்டங்களின் கீழ் கைது செய்யப்படலாம் என்பதால், மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவையற்ற வதந்திகளை பரப்புவதும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தகவல்களை வெளியிடுவதும் சிறைத்தண்டனைக்கு வழிவகுக்கும் என்று தூதரகம் தெளிவுபடுத்தியுள்ளது.

சமீபத்தில் லண்டனை சேர்ந்த 60 வயதுடைய சுற்றுலாப் பயணி ஒருவர், துபாயில் ஏவுகணை தாக்குதல்களை படம் பிடித்ததாக குற்றம் சாட்டப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் தனது மொபைல் போனில் இருந்த காணொளியை அழித்துவிட்டதாகவும், தனக்கு தவறான எண்ணம் ஏதுமில்லை என்று கூறியபோதிலும், துபாய் அதிகாரிகள் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். பொது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையிலான வதந்திகளைப் பரப்புதல் பிரிவுகளின் கீழ் அவர் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அங்குள்ள வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துபாய் அரசாங்கம் சமூக ஊடகங்களை மிகவும் நுணுக்கமாக கண்காணித்து வருவதுடன், மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தும் வகையிலான தகவல்களை பகிர்பவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று ஏற்கனவே எச்சரித்துள்ளது. போரின் ஆரம்ப நாட்களில் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் குறித்த காணொளிகள் இணையத்தில் பரவலாக காணப்பட்டன. ஆனால் தற்போது அத்தகைய பதிவுகள் அனைத்தும் நீக்கப்பட்டு, அரசாங்கத்தை புகழ்ந்து பேசும் பதிவுகள் மட்டுமே சமூக ஊடகங்களை ஆக்கிரமித்துள்ளன. எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்கள் வாயிலாக பிரிட்டிஷ் தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசு கட்டடங்கள், தூதரக அலுவலகங்கள் மற்றும் ஏவுகணை விழுந்த இடங்களை புகைப்படம் எடுப்பது சட்ட விரோதமானது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகச் சட்டத்தின்படி, வாட்ஸ்அப் போன்ற செயலிகள் மூலம் ஒரு தகவலை மற்றவருக்கு அனுப்புவதும் குற்றமாக கருதப்படும். ஏதேனும் ஒரு காணொளியை முதலில் பதிவிட்டவர் மட்டுமின்றி, அதனை மறுபதிவு செய்பவர்கள் அல்லது அதன் கீழ் கருத்து தெரிவிப்பவர்கள் கூட சட்டத்தின் பிடியில் சிக்க வாய்ப்புள்ளது. இத்தகைய வழக்குகளில் சிக்கினால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, பெரும் அபராதம் அல்லது நாட்டை விட்டு வெளியேற்றுதல் போன்ற கடுமையான தண்டனைகள் விதிக்கப்படலாம் என்று துபாய் அரசு எச்சரித்துள்ளது.

இதுவரை மொத்தம் 21 பேர் சமீபத்திய ஏவுகணை தாக்குதல் தொடர்பான சமூக ஊடக பதிவுகளுக்காக சைபர் கிரைம் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவையாக தோன்றினாலும், நடைமுறையில் ஒரு காணொளியை பகிர்வது போன்ற எளிய செயல்களே பலரை சிக்கலில் தள்ளியுள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். ஏற்கனவே இணையத்தில் உலா வரும் ஒரு காணொளியை பகிர்வது கூட குற்றமாக பார்க்கப்படுவது, அந்நாட்டின் சட்டங்கள் எவ்வளவு கடுமையானவை என்பதை காட்டுகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் அனைத்து வெளிநாட்டினரும் அந்நாட்டின் சட்டங்களுக்கு கட்டுப்பட்டவர்கள் என்பதால், ஆர்வக்கோளாறால் எதனையும் சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டாம் என்று மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. போர்க்கால சூழலில் நாட்டின் பிம்பத்தை பாதுகாப்பதிலும், பொது ஒழுங்கை பராமரிப்பதிலும் துபாய் அரசாங்கம் சமரசமற்ற போக்கை கடைப்பிடித்து வருவதை இந்த சம்பவங்கள் உறுதிப்படுத்துகின்றன.