TVK Flag: நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகம் செய்துள்ளார். இந்த கொடி சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. இரட்டை போர் யானைகள் உள்ளது. மேலே, கீழ் சிவப்பு, நடுவில் மஞ்சள் நிறத்தில் கொடி இருக்கிறது.
போர் யானைகளுக்கு நடுவில் வாகைப்பூ வைக்கப்பட்டு உள்ளது. வாகைப்பூ தமிழ்நாட்டின் பூ ஆகும். அதை சுற்றி நட்சத்திரங்கள் இருக்கின்றன . விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் கொடி முழுக்க முழுக்க தமிழ், தமிழ் தேசியம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதை பார்க்க முடிகின்றது.
போர் வீரம், தோழமை, தைரியம் ஆகியவற்றை குறிக்கும் விதமாக வாகைப்பூ இப்படி வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்டுகிறது.
விஜய் இன்று எடுத்த உறுதிமொழியில், நமது நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன். நமது அன்னைத் தமிழ் மொழியைக் காக்க உயிர்த்தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம், மதநல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக்காக்கின்ற பொறுப்புள்ள தனிமனிதராகச் செயல்படுவேன். மக்களாட்சி, மதச்சார்பின்மை. சமூக நீதிப் பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நலச் சேவகராகக் கடமை ஆற்றுவேன் என உறுதி அளிக்கின்றேன்.
சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளைக் களைந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சம வாய்ப்பு. சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், என்று உளமார உறுதி கூறுகிறேன் கூறினார். இந்த உறுதிமொழியில் சமூக நீதி என்று வார்த்தை இணைந்துள்ளது.
நேற்று கொடி தொடர்பாக வெளியான அறிவிப்பில், சரித்திரத்தின் புதிய திசையாகவும் புதிய விசையாகவும் ஒவ்வொரு நாளும் அமைந்தால் அது ஒரு பெரும் வரம். அப்படியான வரமாக இறைவனும் இயற்கையும் நமக்கு அமைத்துக் கொடுத்திருக்கும் நாள்தான் 2024 ஆகஸ்ட் 22. நம் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய அடையாளமான கொடி அறிமுகமாகும் நாள். தமிழ்நாட்டின் நலனுக்காக உழைத்து, நம் மாநிலத்தின் அடையாளமாகவும் மாறப் போகும் நம் வீரக் கொடியை, வெற்றிக்கொடியை நாளை நம் தலைமை நிலையச் செயலகத்தில் அறிமுகப்படுத்தி, கழகக் கொடிப் பாடலை வெளியிட்டு, கழகக் கொடியை ஏற்றி வைக்கிறோம் என்பதைப் பெருமகிழ்வுடன் அறிவிக்கிறேன். நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும். தமிழ்நாடு இனி சிறக்கும்.. என்று விஜய் கூறியிருந்தார்..