தமிழகத் தேர்தல் களம் தற்போது தொகுதி பங்கீட்டை தாண்டி, கூட்டணி கட்சிகளின் சின்னம் மற்றும் வேட்பாளர் தேர்வு குறித்த விவாதங்களால் அனல் பறந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக மற்றும் விசிக போன்ற கட்சிகள் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்ற அழுத்தம் கொடுக்கப்படுவதாக கூறப்படும் தகவல், அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி யார் வேட்பாளர் என்பதையும் திமுக தலைமை தான் முடிவு செய்யும் என்ற நிபந்தனையும் வைக்கப்படுகிறதாம். உதயசூரியன் சின்னத்தில் நின்றால் அவர் திமுக வேட்பாளர் தானே, பிறகு வேட்பாளர்களை அந்தந்த கட்சிகள் எப்படி முடிவு செய்ய முடியும்?” என்ற கேள்வியை முன்வைத்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் இந்த விவகாரத்தில் கடும் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது. ஒரு கட்சியின் தனித்துவமே அதன் சின்னத்தில்தான் அடங்கியிருக்கிறது. ஆனால், வெற்றி வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற பெயரில் கூட்டணி கட்சிகளை தனது சின்னத்தில் போட்டியிட சொல்வது, அந்த கட்சிகளின் எதிர்கால அடையாளத்தையே சிதைத்துவிடும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். வேட்பாளர் யார் என்பதை திமுக தலைமைதான் இறுதி செய்யும் என்ற பேச்சு எழுந்துள்ள நிலையில், இது கூட்டணி கட்சிகளின் தன்னாட்சி அதிகாரத்தில் தலையிடும் செயல் என அக்கட்சி தொண்டர்கள் குமுறுகின்றனர்.
“சின்னம் திமுகவினுடையது என்றால், வேட்பாளரும் திமுக முடிவெடுப்பவராக இருப்பதில் என்ன தவறு இருக்கிறது?” என்று திமுக ஆதரவாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். சட்டரீதியாகப் பார்த்தால், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் எவரும் திமுகவின் பி-பார்ம் மூலமே அங்கீகரிக்கப்படுவார்கள். அப்படி இருக்கும்போது, திமுக தலைமைக்கு அந்த வேட்பாளர் குறித்து முடிவெடுக்க முழு உரிமை உண்டு என்பது யதார்த்தமான உண்மை. இதை சுட்டிக்காட்டி, “ஐந்து தொகுதியோ அல்லது ஆறு தொகுதியோ வாங்கிக்கொண்டு திமுக சின்னத்திலேயே நிற்பதற்கு பதில், பேசாமல் கட்சியைத் திமுகவிலேயே இணைத்துவிடலாமே” என பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இந்த சூழல் வைகோ மற்றும் திருமாவளவன் போன்ற மூத்த தலைவர்களுக்கு ஒரு மிகப்பெரிய தர்மசங்கடத்தை உருவாக்கியுள்ளது. பல ஆண்டுகளாக திராவிட அரசியலிலும், ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலிலும் தனி முத்திரை பதித்த இந்த இயக்கங்கள், இன்று ஒரு சின்னத்திற்காக தங்களின் அடையாளத்தை சமரசம் செய்து கொள்வது வரலாற்றில் ஒரு பின்னடைவாகவே பார்க்கப்படும். குறிப்பாக, விசிக போன்ற வளர்ந்து வரும் கட்சிகள் பொது தொகுதிகளிலும் தனி சின்னத்தில் நின்று வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இருக்கும்போது, இத்தகைய அழுத்தங்கள் அவர்களின் அரசியல் வளர்ச்சியை முடக்கும் முயற்சியோ என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது.
தமிழக அரசியலில் “பெரியண்ணன் மனப்பான்மை” என்பது எப்போதும் சிறு கட்சிகளை பலவீனப்படுத்தும் ஒரு கருவியாகவே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. ஒரு காலத்தில் திமுகவை எதிர்த்து உருவான மதிமுக, இன்று அதே கட்சியின் சின்னத்தில் தஞ்சம் புக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது காலத்தின் கோலம். நெட்டிசன்களின் கிண்டலுக்கு ஆளாகும் அளவிற்கு இந்தத் தலைவர்கள் தங்களின் பிடிவாதத்தை குறைத்துக் கொண்டார்களா அல்லது தேர்தல் வெற்றி என்ற ஒற்றை இலக்கிற்காக தங்களின் சுயமரியாதையை அடகு வைக்கிறார்களா என்ற விவாதம் மக்கள் மத்தியில் வலுத்துள்ளது.
இறுதியாக, இந்த தேர்தல் என்பது வெறும் தொகுதி பங்கீடு தொடர்பானது மட்டுமல்ல, அது சிறு கட்சிகளின் இருப்பு தொடர்பானது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றாலும், அவர்கள் சட்டமன்றத்தில் திமுகவின் விதிகளுக்கே கட்டுப்பட வேண்டியிருக்கும். இது அவர்களை ஒரு உதிரி பாகமாக மட்டுமே வைத்திருக்கும். இந்த சிக்கலில் இருந்து விசிக மற்றும் மதிமுக எப்படி மீள போகின்றன என்பதுதான் இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
