காங்கிரஸ் போனால் போகட்டும்.. பிளான் பி-ஐ தயார் செய்த திமுக? கமல்ஹாசன், கருணாஸ், வேல்முருகனுக்கு அடித்த அதிர்ஷ்டம்.. வைகோ சமாதானம்.. விசிகவுக்கு அதிக தொகுதிகள்.. தேமுதிக, பாமகவுக்கு அழைப்பு.. ஒரு முடிவோடு இருக்கும் திமுக..!

தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தை நெருக்கமாவது குறித்த விவரங்களை உளவுத்துறை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கூட்டணியை முதலமைச்சர் ஏற்கெனவே…

rahul stalin

தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தை நெருக்கமாவது குறித்த விவரங்களை உளவுத்துறை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கூட்டணியை முதலமைச்சர் ஏற்கெனவே எதிர்பார்த்திருந்ததாகவும், காங்கிரஸ் வெளியேறினால் கூட்டணியை சமாளிக்க தேவையான ‘பிளான் பி’ திட்டங்களைத் திமுக மேலிடம் தீவிரமாக தீட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

தற்போதைய நிலவரப்படி, காங்கிரஸ் கட்சிக்கு வரவிருக்கும் தேர்தலில் 35 தொகுதிகள் வரை ஒதுக்க திமுக தயாராகவே இருக்கிறது. ஆனால், காங்கிரஸ் இந்த கூட்டணியை தவிர்த்துவிட்டு, த.வெ.க-வுடன் கைகோர்த்தால், அதனால் ஏற்படும் இழப்பு காங்கிரஸ் கட்சிக்குத்தான் அதிகமாக இருக்கும் என்று திமுக மேலிடம் கருதுகிறது.

திமுக-வின் ‘பிளான் பி’ திட்டத்தில், காங்கிரஸ் வெளியேறினால் அந்த கட்சிக்கு ஒதுக்க தீர்மானித்த இடங்களை மற்ற கூட்டணி கட்சிகளுக்கு பிரித்து அளிப்பது குறித்தும், புதிய கட்சிகளை சேர்ப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை பிரித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு கூடுதல் எண்ணிக்கையில் தொகுதிகளை ஒதுக்க திமுக தயாராக இருக்கிறது. இது தற்போது இருக்கும் கூட்டணி கட்சிகளை வலுப்படுத்த உதவும். ராமதாஸின் பா.ம.க-வை மீண்டும் கூட்டணிக்குள் கொண்டு வரவும் ஆலோசிக்கப்படுவதாக தெரிகிறது. தே.மு.தி.க மற்றும் புதிய தமிழகம் கட்சிகளையும் தங்கள் கூட்டணிக்குள் இழுத்துக்கொள்ள திமுக மேலிடம் தீர்மானித்துள்ளது.

திமுக மேலிடத்தின் மூத்த நிர்வாகிகள், “இப்போது இருக்கும் கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துக்கொண்டு, பா.ஜ.க எதிர்ப்பை தீவிரப்படுத்தினாலே போதும். காங்கிரஸ் அதுவாக போனால் போகட்டும்” என்ற மனநிலைக்கே வந்துவிட்டதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் காங்கிரஸ் வெளியேறுவதால் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்பவும், கூட்டணியை பலப்படுத்தவும் திமுக சில முக்கியத் தலைவர்களை அரவணைத்து வருகிறது. அந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் கமல்ஹாசன். சமீபத்தில் முதலமைச்சர் ஸ்டாலின், நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளுக்காக அவர் இல்லத்திற்கே சென்று தனது குடும்பத்தினருடன் வாழ்த்து தெரிவித்தார். இதன் பின்னணியில் ஒரு அரசியல் கணக்கு இருப்பதாகவும் கூறப்படுகிறது. காங்கிரஸ் உருவாக்கும் வெற்றிடத்தை கமல்ஹாசன் நிரப்புவார்” என்று அறிவாலய மேலிடம் கருதுகிறது.

அடுத்ததாக வைகோ. கடந்த தேர்தலில் எம்.பி. சீட் தராத கோபத்தில் இருந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிடம், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் காலியாகும் ஆறு மாநிலங்களவை எம்.பி. இடங்களில் ஒன்றை ஒதுக்குவதாகவும் திமுக உறுதி அளித்திருப்பதாக தெரிகிறது. மேலும் வேல்முருகன், கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோருக்கு தலா ஒரு சீட் வழங்கவும் திமுக மேலிடம் ஆலோசித்து வருவதாகத் தகவல்.

மொத்தத்தில், காங்கிரஸ் வெளியேறும் சூழ்நிலை உருவானால், திமுக தனது கூட்டணியில் இருக்கும் கட்சிகளை குஷிப்படுத்துவதன் மூலமும், புதிய சிறிய கட்சிகளை சேர்ப்பதன் மூலமும், கமல்ஹாசன் போன்ற பிரபலங்களை அரவணைப்பதன் மூலமும் வரும் தேர்தலை சமாளிக்க முழுவீச்சில் தயாராகி வருகிறது.