தமிழக அரசியலில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி வழக்கம் போல ஒரு ‘முடிவெடுக்க முடியாத’ தர்மசங்கடமான சூழலில் சிக்கியுள்ளது. ஒருபுறம் ஐம்பதாண்டு காலத்திற்கும் மேலாக தங்களை நிழலாக தாங்கி பிடிக்கும் திமுகவுடனான உறவு, மறுபுறம் “ஆட்சியில் பங்கு” தருவதாக தூண்டில் போடும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் என காங்கிரஸ் இரண்டு படகுகளில் கால் வைத்து பயணிக்கிறது. திமுக அமைச்சர்கள் “ஆட்சியில் பங்கு கிடையாது” என்று திட்டவட்டமாக தெரிவித்த பின்பும், அதே கூட்டணியில் ஒட்டிக்கொண்டிருப்பது அந்தக் கட்சியின் தன்மானத்தை பாதிப்பதாக ஒரு தரப்பினர் வாதிடுகின்றனர். ஆனால், இந்த இழுபறியும், கடைசி நேர குழப்பமும்தான் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி அரை நூற்றாண்டாக ஆட்சிக்கட்டிலில் அமர முடியாமல் போனதற்கு முதன்மை காரணமாக பார்க்கப்படுகிறது.
தேசிய அரசியலிலும் காங்கிரஸின் வீழ்ச்சிக்கு இந்த தாமதமான முடிவெடுக்கும் கலாச்சாரம் ஒரு புற்றுநோயாகவே உருவெடுத்துள்ளது. கடந்த மூன்று நாடாளுமன்ற தேர்தல்களிலும் காங்கிரஸ் சந்தித்த தொடர் தோல்விகள், கட்சி மேலிடத்தின் மந்தமான செயல்பாடுகளையே சுட்டிக்காட்டுகின்றன. பாஜக போன்ற கட்சிகள் தேர்தலுக்கு ஒரு வருடத்திற்கு முன்பே வியூகங்களை வகுத்து செயல்படும் நிலையில், காங்கிரஸ் கட்சியோ தேர்தல் அறிவிப்பு வந்த பிறகும் கூட்டணி பேச்சுவார்த்தைகளிலும், வேட்பாளர் தேர்விலும் காலத்தை கடத்துகிறது. இந்த காலதாமதம் தொண்டர்களிடையே சோர்வையும், வாக்காளர்களிடையே நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்துகிறது. ஆட்சி அதிகாரத்தை பிடிக்க வேண்டும் என்ற வெறி இருப்பதை விட, ஏதோ ஒரு கூட்டணியில் இடம்பிடித்தால் போதும் என்ற மனநிலையே அந்த கட்சியை கடைசி வரிசைக்கு தள்ளிவிட்டது.
ராகுல் காந்தியின் அரசியல் அணுகுமுறை குறித்தும் தற்போது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. தேர்தல் காலங்களில் களத்தில் நின்று போராட வேண்டிய நேரத்தில், அவர் வெளிநாட்டு பயணங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் போன்ற முக்கியமான நேரங்களில் அவர் வெளிநாடுகளுக்கு செல்வது, எதிர்த்தரப்பினருக்கு கேலி பொருளாகிவிடுகிறது. இந்த ‘வேர்ல்ட் டூர்’ கலாச்சாரம் ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சி தலைவருக்கு அழகல்ல என்றும், மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை விட அவருக்கு தனிப்பட்ட பயணங்களே முக்கியமா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. தலைமை பொறுப்பில் இருப்பவர் தொடர்ச்சியாக களத்தில் இல்லாதது, இரண்டாம் கட்ட தலைவர்களிடையே ஒருவிதமான அதிகார போட்டியை உருவாக்கி விடுகிறது.
தமிழகத்தில் தவெக-வின் வருகை காங்கிரஸுக்கு ஒரு மாற்று பாதையை காண்பித்துள்ளது. விஜய் தனது மாநாட்டில் ஆட்சியில் பங்கு என்ற அறிவிப்பை வெளியிட்டது, நேரடியாக காங்கிரஸை கவரும் ஒரு உத்தியாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், அங்கும் செல்வதற்கு துணிச்சல் இல்லாமல், திமுகவிடம் 6 அமைச்சர் பதவிகளை கேட்டு பேரம் பேசும் காங்கிரஸின் நிலைப்பாடு மிகுந்த வேடிக்கையானது. ஏற்கனவே திமுக தனது அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள தயாராக இல்லை என்று கூறிய பின்பும், மிரட்டிப் பார்க்கலாம் என்ற காங்கிரஸின் வியூகம் இறுதியில் தோல்வியில்தான் முடியும். கடைசி நாள் வரை யோசித்து கொண்டே இருந்தால், கையில் இருக்கும் தொகுதிகளையும் திமுக குறைத்துவிடும் அல்லது தவெகவின் கதவுகளும் மூடிவிடும் அபாயம் உள்ளது.
அரசியல் என்பது ஒரு சதுரங்க வேட்டை; இங்கே சரியான நேரத்தில் சரியான காய்களை நகர்த்துபவர்களே வெற்றி பெறுகிறார்கள். ஆனால், காங்கிரஸ் கட்சியோ ஆட்டம் முடியப்போகும் வரை காய்களை எப்படி நகர்த்துவது என்று ஆலோசனை கூட்டங்களிலேயே பொழுதைப்போக்குகிறது. ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே போன்ற தலைவர்கள் மாநில தலைவர்களின் குரலுக்கு செவிசாய்க்காமல், டெல்லியில் இருந்துகொண்டே முடிவுகளை எடுப்பது கள எதார்த்தத்திற்கு முரணாக உள்ளது. வலுவான தலைமை இல்லாத எந்தவொரு அமைப்பும் அதிகாரம் என்ற ஏணியில் ஏற முடியாது என்பதற்கு இன்றைய காங்கிரஸே ஒரு நேரடி உதாரணம். இப்போதும் காலம் கடந்துவிடவில்லை, ஆனால் அதற்கான துணிச்சலான முடிவுகளை எடுக்கும் மனப்பக்குவம் தலைமைக்கு இருக்கிறதா என்பதுதான் கேள்விக்குறி.
இறுதியாக, 2026 தேர்தலில் காங்கிரஸ் தனது நிலையை தெளிவுபடுத்தாவிட்டால், அது தமிழக அரசியல் வரைபடத்தில் இருந்தே மறைந்துவிடும் சூழல் ஏற்படும். “திமுகவா? தவெகவா?” என்ற கேள்விக்கு விரைந்து விடையளிக்காவிட்டால், மக்கள் அவர்களை ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டார்கள். ஒரு காலத்தில் தமிழகத்தை ஆண்ட பெருமை மிக்க கட்சி, இன்று சீட்டுக்காகவும், அமைச்சர் பதவிக்காகவும் ஒவ்வொரு வாசலாக ஏறி இறங்குவது தொண்டர்களுக்கு பெரும் அவமானத்தை தேடித்தருகிறது. ராகுல் காந்தி தனது வழக்கமான பாணியில் மீண்டும் ஒரு நீண்ட வெளிநாட்டு பயணத்திற்குத் தயாராவதற்கு முன்பாக, கட்சியை காப்பாற்ற வேண்டிய பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதே அரசியல் விமர்சகர்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
