தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக, திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி, இந்த முறை முன்வைத்துள்ள நிபந்தனைகள் அறிவாலயத்தை அதிர வைத்துள்ளது. கடந்த தேர்தல்களில் ஒதுக்கப்பட்ட இடங்களைக்காட்டிலும் கூடுதலாக, அதாவது 40 தொகுதிகளை காங்கிரஸ் கோருவதோடு மட்டுமல்லாமல், “ஆட்சியில் பங்கு” என்ற கறாரான நிபந்தனையையும் முன்வைத்துள்ளது. மத்தியில் ராகுல் காந்தி தலைமையிலான மேலிடம் இது குறித்து திமுகவின் பதிலுக்காக காத்திருப்பதாக தகவல்கள் கசிகின்றன.
2006-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக அறுதிப் பெரும்பான்மை பெறாத நிலையிலும், காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரவு அளித்து ஒரு ‘மைனாரிட்டி’ அரசை வழிநடத்த உதவியது. ஆனால், இந்த முறை 2006 போல் ஏமாற தயாராக இல்லை என்று காங்கிரஸ் நிர்வாகிகள் வெளிப்படையாகவே பேச தொடங்கியுள்ளனர். 117 இடங்களுக்கு குறைவாக திமுக வெற்றி பெறும் சூழல் உருவானால், அது நிச்சயம் ஒரு கூட்டணி ஆட்சியாகவே இருக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் திமுகவுக்கு மெஜாரிட்டி கிடைத்தாலும் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று காங்கிரஸ் கேட்பது தான் திமுகவுக்கு பெரிய தலைவலியாக உள்ளது. டெல்லி மேலிடத்தின் ஆசி இன்றி தமிழக காங்கிரஸ் தலைவர்கள் இவ்வளவு துணிச்சலாக இக்கோரிக்கையை வைக்க மாட்டார்கள் என்பதால், இதன் பின்னணியில் ராகுல் காந்தியின் வியூகம் இருப்பதாக கருதப்படுகிறது.
திமுகவை பொறுத்தவரை, தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற கலாச்சாரத்தை இதுவரை அனுமதித்ததே இல்லை. கருணாநிதியின் காலம் முதல் தற்போது ஸ்டாலின் காலம் வரை, தோழமை கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்குவதோடு சரி, அதிகாரத்தில் பங்கு தருவதை அவர்கள் விரும்புவதில்லை. ஆனால் அதே நேரத்தில் காங்கிரஸ் மத்தியில் ஆட்சி அமைத்தால் தேவையான துறைகளை கேட்டு பெற்று கொள்வதிலும் திமுக தவறியதில்லை.
இந்த நிலையில் இப்போது காங்கிரஸின் இந்த கோரிக்கையை ஏற்றால், அது ஒரு சங்கிலி தொடர் வினையாக மாறும் அபாயம் உள்ளது. காங்கிரசுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்தால், கூட்டணியில் உள்ள விசிக, மற்றும் ஒருவேளை இணைய வாய்ப்புள்ள பாமக, தேமுதிக போன்ற கட்சிகளும் அதே உரிமையை கோரும். இது திமுகவின் ஒற்றை தலைமை அதிகாரத்தை சிதைத்துவிடும் என்பதால் முதலமைச்சர் ஸ்டாலின் இதில் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் இந்த நெருக்கடிக்கு மற்றொரு காரணம், விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் வருகை. விஜய் தனது கொள்கை அறிவிப்பில் “ஆட்சியில் பங்கு” என்று அறிவித்திருப்பது, திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு ஒரு புதிய பேரம் பேசும் கருவியாக மாறியுள்ளது. திமுக இடம் தராவிட்டால், விஜய்யின் பக்கம் சாய வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மறைமுகமாக எச்சரித்து வருகின்றனர். ராகுல் காந்தியும் விஜய்யும் தொலைபேசியில் உரையாடியதாக வெளிவந்த தகவல்கள், பிரவீன் சக்கரவர்த்தி விஜய்யை நேரில் சந்தித்து பேசியது, திமுக அரசின் கடன் குறித்து விமர்சனம் செய்தது எல்லாம் திமுக தலைமைக்கு ஒருவித அழுத்தத்தை உருவாக்கியுள்ளது என்பதில் சந்தேகமில்லை.
திமுக இந்த நெருக்கடியை எப்படி கையாளப் போகிறது என்பதுதான் தற்போதைய கேள்வி. காங்கிரஸை கூட்டணியில் இருந்து கழட்டிவிடுவது என்பது தேசிய அளவில் இந்தியா கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும். அதே நேரத்தில், 40 இடங்களையும் ஆட்சியதிகாரத்தையும் விட்டுக்கொடுப்பது என்பது திமுகவின் பலத்தை மாநில அளவில் பலவீனப்படுத்தும். எனவே, “கொள்கை ரீதியான கூட்டணி” என்ற போர்வையில் காங்கிரஸை சமாதானப்படுத்த திமுக தலைமை முயற்சிக்கும். ஆனால், இம்முறை சமரசத்திற்கு இடமில்லை என சத்தியமூர்த்தி பவன் வட்டாரங்கள் பிடிவாதமாக இருப்பதால், பேச்சுவார்த்தை இழுபறியாகவே நீடிக்கிறது.
அடுத்த சில மாதங்களில் தொகுதி பங்கீட்டுக்குழு அமைக்கப்படும்போது இந்த மோதல் உச்சத்தை அடையும். ராகுல் காந்தியின் நேரடி தலையீடு இருந்தால் மட்டுமே இதற்கொரு தீர்வு கிடைக்கும். திமுக தலைமையோ, ஒற்றை ஆட்சி என்ற தனது பிம்பத்தை காப்பாற்றி கொள்வதா அல்லது கூட்டணி தர்மத்திற்காக அதிகாரத்தை பகிர்வதா என்ற தர்மசங்கடத்தில் உள்ளது. ஒருவேளை திமுக இறங்கி வராவிட்டால், தமிழக அரசியல் களம் மிகப்பெரிய மாற்றங்களை சந்திக்க நேரிடும். 2026 தேர்தல் என்பது வெறும் வெற்றி தோல்வியை பற்றியது மட்டுமல்ல, அது தமிழகத்தில் “கூட்டணி ஆட்சி” என்ற புதிய சகாப்தம் பிறக்க போகிறதா என்பதைத் தீர்மானிக்கும் தேர்தலாக அமையும் என்று அரசியல் வியூக ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
