தமிழக அரசியலில், பெரிய கட்சிகளான திமுகவின் ‘உதயசூரியன்’ மற்றும் அதிமுகவின் ‘இரட்டை இலை’ சின்னங்கள், கூட்டணி கட்சிகளுக்கு பலத்தைத் தருவது மட்டுமின்றி அந்த கட்சிகளின் எதிர்காலத்திற்கு அச்சுறுத்தலாகவும் மாறியுள்ளன. ‘மதிமுக’ போன்ற வலுவான கட்சிகள்கூட, திமுகவின் சின்னத்தில் போட்டியிட்டு தங்கள் சொந்தக் கட்சி அடையாளத்தை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது.
இது குறித்துப் பேசிய அரசியல் விமர்சகர்கள் “கூட்டணி கட்சிகளை அழிப்பதே ‘உதயசூரியன்’ சின்னம் தான்” என்று கடுமையாக விமர்சித்துள்ளனர். சின்ன கட்சிகள் தங்கள் அங்கீகாரத்தை தக்கவைத்துக்கொள்ளவும், வெற்றி பெறவும் பெரிய கட்சிகளின் சின்னத்தை நம்பி செல்வது, இறுதியில் தங்கள் அடையாளத்தையே இழக்க வழிவகுக்கும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.
ஒரு அரசியல் கட்சி, தனது சொந்தச் சின்னத்தில் போட்டியிடாமல் தொடர்ந்து கூட்டணி சின்னங்களில் மட்டும் போட்டியிட்டால், தேர்தல் ஆணையம் அந்த கட்சியின் அங்கீகாரத்தை பறிக்க வாய்ப்புள்ளது. இதன் விளைவாக, எதிர்காலத்தில் அவர்கள் தனித்துத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழக்கக்கூடும்.
“தேர்தல் ஆணையம் இறுக்கமான நிபந்தனைகளை விதித்தால், பல லெட்டர்பேட் கட்சிகள் ஒழிந்துவிடும்” என்று அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இதே நிலை, தேசிய கட்சிகளுக்கும் பொருந்தும். ஒரு மாநில கட்சியாகப் பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சி, குறிப்பிட்ட சதவீத வாக்குகளை பெறாவிட்டால் அல்லது தேர்தலில் போட்டியிடாவிட்டால் அதன் அங்கீகாரம் ரத்து செய்யப்படலாம்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தனது கட்சிக்கு சரியான அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்ற நினைப்பே இல்லாமல் பல தேர்தல்களில் தனது கட்சி சின்னத்தில் போட்டியிடாமல், திமுகவின் உதயசூரியன் சின்னத்திலேயே தனது வேட்பாளர்களை நிறுத்தி வந்தார். இதன் விளைவாக, மாநில கட்சியாகத் தொடர்ந்து இருக்க தேவையான வாக்கு சதவீதத்தை மதிமுகவால் பெற முடியவில்லை. இதனால், மதிமுகவுக்கு இன்னும் அங்கீகாரம் கிடைக்கவில்லை.
இதேபோல, அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளும் ‘இரட்டை இலை’ சின்னத்தில் போட்டியிட்டால், எதிர்காலத்தில் தங்கள் சொந்த அடையாளத்தையும், அங்கீகாரத்தையும் இழக்க நேரிடும். உதயசூரியன், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் சிறிய கட்சிகள் காணாமல் போக வாய்ப்புள்ளது” என்று அரசியல் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த கட்சிகளின் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள், தங்கள் கட்சியைவிடவும், பெரிய கட்சியின் சின்னத்திற்கே முக்கியத்துவம் கொடுக்க தொடங்குவார்கள். இது, காலப்போக்கில் சிறிய கட்சிகளின் தனித்துவத்தையும், வளர்ச்சியையும் முற்றிலுமாகப் பாதிக்கும். இந்த நிலை தொடர்ந்தால், தேர்தல்களில் போட்டியிடவே முடியாத சூழல் சிறிய கட்சிகளுக்கு ஏற்படலாம். இதனால், தங்கள் கட்சியின் சொந்த சின்னத்தில் போட்டியிடவும், தங்கள் கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கவும் பெரிய கட்சிகளுடன் போராட வேண்டிய நிலை வரும்.
மொத்தத்தில், ஒரு கூட்டணி வெற்றிக்காக பெரிய கட்சிகளின் சின்னத்தை பயன்படுத்துவது, சிறிய கட்சிகளுக்குத் தற்காலிக வெற்றியை அளித்தாலும், நீண்டகாலத்தில் அவற்றின் இருப்பிற்கே அச்சுறுத்தலாக மாறியுள்ளது என்பதே கள நிலவரமாக உள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
