தமிழக அரசியல் களம் என்பது தனிநபர் ஆளுமைகளை விட, வலிமையான கூட்டணிகளால் தீர்மானிக்கப்படும் ஒரு களம் என்பதை வரலாறு பலமுறை நிரூபித்துள்ளது. “திமுகவை வீழ்த்த வேண்டுமென்றால் அதிமுகவோடும், அதிமுகவை வீழ்த்த வேண்டுமென்றால் திமுகவோடும் சேர வேண்டும்” என்பதுதான் கடந்த ஐம்பது ஆண்டுகால தமிழ்நாட்டின் எழுதப்படாத விதியாக இருந்து வருகிறது. இந்த இரு துருவ அரசியலில் மூன்றாம் தரப்பாக உருவெடுக்க முயன்ற பல தலைவர்கள், இறுதியில் ஏதோ ஒரு திராவிட கட்சியின் துணையின்றி அதிகாரத்தை கைப்பற்ற முடியாது என்ற யதார்த்தத்தை உணர்ந்தே இருக்கிறார்கள். நடிகர் விஜய் தற்போது அரசியலில் அடியெடுத்து வைத்துள்ள சூழலில், அவருக்கும் இதே விதியே பொருந்தும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
வரலாற்றை திரும்பிப் பார்த்தால், 1991-ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தி மறைவுக்கு பின் ஏற்பட்ட அலையில் ஜெயலலிதா மிகப்பெரிய வெற்றி பெற்றார். அப்போது பலவீனமாக இருந்த திமுகவை மீட்டெடுக்க, 1996-ல் மூப்பனார் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் திமுகவுடன் கைகோர்த்தது. இந்த “மெகா கூட்டணி” தான் ஜெயலலிதாவின் ஆட்சியை வீழ்த்தி கருணாநிதியை மீண்டும் அரியணையில் ஏற்றியது. அதேபோல், 2001ஆம் ஆண்டு அதே மூப்பனார், அதிமுகவுடன் கூட்டணி வைத்து திமுகவை வீழ்த்தினார்.
இதற்கு இன்னொரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் நடிகர் விஜயகாந்த். 2005-ல் தேமுதிகவைத் தொடங்கியபோது தனித்து நின்று கணிசமான வாக்குகளைப் பெற்றாலும், அவரால் ஆட்சியைப் பிடிக்கவோ அல்லது திமுகவை வீழ்த்தவோ முடியவில்லை. ஆனால், 2011-ல் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவுடன் கைகோர்த்தபோது, திமுகவை மூன்றாம் இடத்திற்குத் தள்ளி எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்தை பெற்றார். “மாற்று அரசியல்” என்று முழங்கிய விஜயகாந்த், யதார்த்த அரசியலின் கட்டாயத்தால் அதிமுகவுடன் இணைந்தே வெற்றியை ஈட்ட முடிந்தது என்பது விஜய்க்கு ஒரு முக்கியமான பாடமாகும்.
2016-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்திருக்க வேண்டியது. அப்போது கருணாநிதி தலைமையிலான திமுகவுடன் விஜயகாந்த் இணைந்திருந்தால், மிக எளிதாக ஜெயலலிதாவை வீழ்த்தியிருக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் இன்றும் கருதுகின்றனர். ஆனால், “மக்கள் நல கூட்டணி” என்ற பெயரில் மாற்றுப் பாதையில் விஜயகாந்த் சென்றதால், வாக்குகள் சிதறி ஜெயலலிதா மீண்டும் ஆட்சியைப் பிடித்தார். ஒரு சரியான கூட்டணி முடிவை எடுக்கத் தவறியது விஜயகாந்தின் அரசியல் சரிவுக்குக் காரணமாக அமைந்தது போல, விஜய் இப்போது எடுக்கும் முடிவுகளும் அவரது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்.
தற்போது விஜய் “தமிழக வெற்றிக் கழகம்” என்ற பெயரில் ஒரு பெரும் சக்தியாக உருவெடுத்துள்ளார். திராவிட கட்சிகளுக்கு மாற்றாக தன்னை முன்னிறுத்தினாலும், தற்போதைய பலம் வாய்ந்த திமுகவின் கட்டமைப்பை சிதைப்பது தனி ஒரு மனிதராக அவருக்கு சாத்தியமற்ற ஒன்றாகவே தெரிகிறது. திமுகவை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என்பதுதான் விஜய்யின் முதன்மையான இலக்கு என்றால், அவருக்கு இருக்கும் ஒரே அரசியல் “ஆப்ஷன்” அதிமுகவுடன் கூட்டணி வைப்பதுதான். அதிமுகவின் வாக்கு வங்கியும், விஜய்யின் ரசிகர் பலமும் இணைந்தால் மட்டுமே திமுகவின் கோட்டையைத் தகர்க்க முடியும் என்பது அரசியல் கணக்குகளின்படி மறுக்க முடியாத உண்மையாகும்.
முடிவாக, தமிழக அரசியல் களம் என்பது கொள்கைகளை விட கூட்டணி கணக்குகளால் ஆளப்படுகிறது. விஜய் தனது திரை பிம்பத்தை மட்டும் நம்பித் தனித்து போட்டியிட்டால், அது 2016-ல் விஜயகாந்த் செய்த அதே தவறை மீண்டும் செய்வது போலாகிவிடும். பாறையை போன்ற ஒரு அரசியல் கட்டமைப்பை உடைக்க வேண்டுமானால், இன்னொரு பாறையின் துணை அவசியம். திராவிட அரசியலை ஒழிக்கப்போவதாக கூறிக்கொண்டு, அதே திராவிட கட்சியின் ஒரு பிரிவுடன் கைகோர்ப்பது விஜய்க்குத் தர்மசங்கடமாக இருக்கலாம். ஆனால், அதிகாரத்தை கைப்பற்றுவதே லட்சியம் என்றால், அவர் அதிமுகவின் கரம் கோர்ப்பதை தவிர வேறு வழியில்லை.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
