தமிழக அரசியல் களத்தில், தி.மு.க. கூட்டணி கட்சிகளின் எண்ணிக்கையிலும், திரட்டப்பட்ட அரசியல் சக்தியிலும் வலிமையாக காணப்பட்டாலும், அதன் அடித்தளமாக இருக்கும் வாக்காளர்களின் மனநிலை மாற்று வழியை தேடி நகர்வதாக பரவலான அரசியல் விமர்சகர்களால் சுட்டிக்காட்டப்படுகிறது.
பெயரளவில் கூட்டணி வலுவாக இருந்தாலும், அந்த கூட்டணிக்குள் இருக்கும் கட்சிகளுக்கு வாக்களித்த மக்கள் அனைவரும் இன்னும் அதே அரசியல் திசையிலேயே இருக்கிறார்களா என்பது இன்று எழும் முக்கியமான கேள்வி. கூட்டணி பலம் என்பது கட்சி தலைவர்களுக்கும், தொகுதிகளின் எண்ணிக்கைக்குமானதாக இருக்கிறதே தவிர, வாக்கு வங்கிகளின் உணர்வுகளை முழுமையாக பிரதிபலிக்கவில்லை என்ற வாதம் வலுப்பெறுகிறது.
இதற்கு உதாரணமாக, தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் சில முக்கிய கட்சிகளின் ஆதரவு தளத்தின் நகர்வுகள் பேசப்படுகின்றன. குறிப்பாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி தி.மு.க.வுடன் கூட்டணியில் நீடித்தாலும், அக்கட்சிக்கு முன்பு வாக்களித்த ஒரு பிரிவினர் தற்போது தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் பக்கம் திரும்பியிருக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். விசிகவின் சமூக அடித்தளமும், அவர்களின் அரசியல் பார்வையும் ஒருபுறம் இருந்தாலும், ஒரு மாற்றம் தேவை என்ற பொதுவான மனநிலை மற்றும் விஜய்யின் புதிய அரசியல் வருகை ஆகியவற்றால் கவரப்பட்டு, அவர்களின் பாரம்பரிய வாக்குகள் வேறு திசையில் சிதறக்கூடும் என்ற அச்சம் கூட்டணி தலைவர்கள் மத்தியில் நிலவுகிறது.
இதேபோல், தி.மு.க. கூட்டணியின் முக்கிய கட்சிகளில் ஒன்றான மதிமுக கட்சிக்கு வாக்களித்த ஆதரவாளர்களும் இதேபோன்றதொரு மனமாற்றத்தை எதிர்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் திமுக கூட்டணிக்குள் இருந்தாலும் அதே நிலைமை தான்.. எனவே கூட்டணிக்குள் இருப்பும், அவர்களின் செல்வாக்கும் கூட்டணிக்கு பலம் சேர்த்தாலும், அவர்களின் வாக்கு வங்கிகள் விஜய்யின் பொதுவான ஈர்ப்பு மற்றும் புதிய முகம் என்ற காரணங்களுக்காக திசை மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.
அரசியல் களத்தில் ஒரு கூட்டணியின் வெற்றி என்பது, வெறுமனே கட்சிகளின் ஒருங்கிணைப்பிலும், அவற்றின் அதிகார பங்கிடலிலும் மட்டும் முடிந்துவிடுவதில்லை. மாறாக, கூட்டணியின் தலைவர்கள் மற்றும் கொள்கைகள் மீது வாக்காளர்கள் வைக்கும் நம்பிக்கையே அதன் உண்மையான பலமாகும். தற்போது தி.மு.க. கூட்டணியின் தலைவர்கள் மற்றும் அதன் செயல்பாடுகள் மீது அதிருப்தி கொண்டுள்ள வாக்காளர்களின் பெரிய பகுதி, விஜய் போன்ற ஒரு நடுநிலை மற்றும் எல்லைகளற்ற அரசியலை பேசும் தலைவரால் ஈர்க்கப்படுகின்றனர்.
எனவே, ஒரு அரசியல் கட்சி அல்லது கூட்டணி வெற்றி பெற வேண்டுமென்றால், அது வாக்காளர்களின் உண்மையான மனப்போக்கை புரிந்துகொள்வது அவசியம். கூட்டணி தலைவர்களின் மேடை பேச்சுக்களும், எண்ணிக்கை பலமும் அரசியல் அரங்கில் வலிமையை தரலாம்; ஆனால், வாக்குச்சாவடியில் அந்த வலிமை வாக்குகளாக மாற வேண்டுமானால், மக்கள் மனதில் வேரூன்றியிருக்கும் மாற்றத்திற்கான ஆசையை பூர்த்தி செய்ய வேண்டும். தி.மு.க. கூட்டணியின் கட்டமைப்பு வலிமையாக இருந்தாலும், விசிக மற்றும் மதிமுக போன்ற கட்சிகளுக்கு வாக்களித்த மக்கள் வேறு ஒரு தலைமையை நோக்கி நகரும்போது, கூட்டணியின் வெற்றிவாய்ப்புகள் கேள்விக்குள்ளாகின்றன.
மொத்தத்தில், வரவிருக்கும் தேர்தலை பொறுத்தவரை, இது வெறும் அரசியல் கட்சிகளின் கூட்டணி பலத்தின் போர் மட்டுமல்ல; இது வாக்காளர்களின் மனப்போக்கை தீர்மானிக்கும் போர் ஆகும். தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளின் ஆதரவாளர்கள், தங்கள் கட்சியின் நிலைப்பாட்டை தாண்டி, மாற்றத்தை முன்னிறுத்தும் விஜய் பக்கம் சாயும் பட்சத்தில், வலுவான கூட்டணியாக கருதப்படும் தி.மு.க. கூட்டணிக்கு கணிசமான பின்னடைவு ஏற்படலாம். எனவே, அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணி கட்டமைப்பு பலமாக இருப்பதை பற்றி பேசுவதை விட, தங்கள் வாக்காளர்களின் விசுவாசம் எந்தப் பக்கம் உள்ளது என்பதை பற்றியே அதிகம் கவலைப்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
