தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கிய அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் எந்த அணியுடன் இணையும் என்ற கேள்வி மையப்புள்ளியாக உள்ளது. டிசம்பர் இறுதி அல்லது ஜனவரிக்குள் தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்பம் நிகழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில், திமுக கூட்டணி உடைதல், தவெக – காங்கிரஸ் கூட்டணி அமைதல், அல்லது தவெக – அதிமுக கூட்டணிக்குள் நுழைதல் ஆகிய மூன்று முக்கிய சாத்தியக்கூறுகளில் ஏதேனும் ஒன்று நடக்கலாம் என்றும், இது தவெகவுக்கு சாதகமாக அமையும் என்றும் கணிக்கப்படுகிறது.
தமிழக அரசியலில் தற்போது மூன்று வகையான கூட்டணி மாற்றங்களுக்கான வாய்ப்புகள் மிகத்தீவிரமாகப் பேசப்படுகின்றன, இவை அனைத்தும் விஜய்யின் தவெக-வை மையப்படுத்தியே உள்ளன. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸுக்கும் மற்ற சிறு கட்சிகளுக்கும் பிணக்குகள் ஏற்பட்டு கூட்டணி உடையும் நிலை ஒரு சாத்தியக்கூறு. இரண்டாவதாக, காங்கிரஸ் மற்றும் சில கட்சிகள் திமுக கூட்டணியில் இருந்து விலகி, தவெக தலைமையில் ஒரு மூன்றாவது அணி உருவாக வாய்ப்புள்ளது, இது திமுக மற்றும் அதிமுக என இரு பிரதான கட்சிகளுக்கும் சவாலான ஒரு மூன்றாவது முனையை உருவாக்கும். மூன்றாவதாக, பாஜகவின் அழுத்தம் காரணமாக, அதிமுக தலைமையிலான கூட்டணிக்குள் தவெக இணைவது என்ற சாத்தியமும் உள்ளது. அரசியலில் நிரந்தர நண்பர்கள், பகைவர்கள் இல்லை என்பதால், இந்த மூன்று சாத்தியக்கூறுகளும் நடப்பதற்கான வாய்ப்புகள் சமமாகவே இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் ஜனவரி 9 அல்லது 10ஆம் தேதிகளில் வெளியாகிறது. ஒரு சினிமா நட்சத்திரத்தின் அரசியல் நகர்வுகளுக்கு அவரது திரைப்பட வெற்றியே மிகப்பெரிய பலமாக இருக்கும் என்றுகூறப்படுகிறது. எம்ஜிஆருக்கு தேர்தலுக்கு முன் ஒரு ‘உலகம் சுற்றும் வாலிபன்’ ரிலீச் ஆனது போல் விஜய்க்கு ஒரு ‘ஜனநாயகன் ஒரு பெரிய பலத்தை கொடுக்க வாய்ப்பு உண்டு. விஜய்யின் மிகப்பெரிய பலமே அவருடைய திரைப்பிரபலம் தான். இந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆனால், அது நடிகர் விஜய்யின் அரசியல் பயணத்திற்கு ஒரு மிகப்பெரிய அட்வான்டேஜ் ஆகவும், தொண்டர்களுக்கு உந்து சக்தியாகவும் அமையும். இந்த படத்தின் வெற்றி தோல்வி மற்றும் அதன் தாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில், தவெக கூட்டணி குறித்து என்ன முடிவெடுக்கப் போகிறது என்பதில் ஜனவரி இறுதிக்குள் தெளிவு கிடைக்கும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சரான செங்கோட்டையன் போன்ற மூத்த தலைவர்களின் வருகை, விஜய்யின் தேர்தல் கணக்குகளுக்கு பெரிய பலம் சேர்க்கிறது. செங்கோட்டையன் போன்றவர்கள் மூலம், தவெகவுக்கு புதிதாக பல லட்சம் வாக்குகள் வராவிட்டாலும், அவருடைய அனுபவம், களப்பணி மற்றும் ராஜதந்திரம் ஆகியவை தவெகவுக்கான வாக்குகளை உறுதிப்படுத்தவும், ஏற்கனவே உள்ள வாக்கு சதவீதம் தக்கவைக்கவும் உதவும்.
தற்போதைய லேட்டஸ்ட் சர்வேக்களின்படி, திமுக அரசு மீதான அதிருப்தி காரணமாக, எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு சாதகமான அலை வீசுகிறது, இது ‘ஆன்டி இன்கம்பன்ஸி’ அலையாக செயல்படுகிறது. எனினும், இந்த அலை எந்த பக்கம் வீசப்போகிறது என்பதை பொறுத்தே முடிவுகள் அமையும்.
மொத்தத்தில் திமுக கூட்டணி உடைதல், தவெக ஒரு மூன்றாவது அணியாக உருவெடுத்தல், அல்லது அதிமுக கூட்டணிக்குள் தவெக இணைதல் ஆகிய மூன்றில் ஒன்று நடந்தாலும் அது தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்பங்களாக இருக்கும். இந்த நிகழ்வுகள் டிசம்பர் இறுதி முதல் ஜனவரி இறுதிக்குள் ஒரு தெளிவான வடிவத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணி உடையாமல் தக்க வைக்க திமுக தரப்பு எடுக்கும் நடவடிக்கைகள், தவெகவின் தலைவர் விஜய்யின் வியூகங்கள், அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ்ஸின் உறுதியான நடவடிக்கைகள், ஆகியவை வரவிருக்கும் தேர்தலை பரபரப்பான அரசியல் களத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
