தமிழக அரசியல் களத்தில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு துருவங்களும் “ரகசியக் கூட்டாளிகளா?” என்ற கேள்வி கடந்த சில ஆண்டுகளாகவே மக்கள் மத்தியில் ஒரு பேசுபொருளாக இருந்து வருகிறது. 2021-ல் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற போது, அதிமுக முன்னாள் அமைச்சர்களின் ஊழல்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், கடந்த 4.5 ஆண்டுகால ஆட்சியில் எஸ்.பி. வேலுமணி, தங்கமணி போன்ற சில அமைச்சர்கள் மீது ரெய்டுகள் நடத்தப்பட்டாலும், எவர் மீதும் இறுதிவரை கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படவில்லை. இதுவே இரு கட்சிகளுக்கும் இடையே ஒரு “புரிந்துணர்வு ஒப்பந்தம்” இருப்பதாக பொதுமக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அரசியல் பாணியை தான் நெட்டிசன்கள் “நீ என்னை அடிக்கிற மாதிரி நடி, நான் அழுவுற மாதிரி நடிக்கிறேன்” என்று கிண்டல் செய்கின்றனர். ஒருவேளை 2026-ல் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வரானால், அவரும் தற்போதுள்ள திமுக அமைச்சர்கள் மீது வெறும் கண்துடைப்பு நடவடிக்கைகளை மட்டுமே எடுப்பாரோ என்ற அச்சம் மக்களிடம் உள்ளது. ஊழல் செய்தவர்கள் தண்டிக்கப்படாமல், வெறும் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக மட்டும் வழக்குகள் போடப்பட்டு, இறுதியில் மக்கள் வரிப்பணம் தான் வீணாகிறது. இதனால், உண்மையாக ஏமாந்தது வாக்களித்த மக்கள் தான் என்ற ஆதங்கம் வலுவாக பதிவாகியுள்ளது.
இந்த சூழலில் தான் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஒரு மாற்று சக்தியாக தன்னை முன்னிறுத்துகிறது. விஜய் தனது மாநாட்டு உரையில், ஊழலில் ஈடுபடுபவர்களை தனது அரசியல் எதிரியாக அறிவித்தார். விஜய்யின் வருகை, இந்த “இரு கட்சி முறை”யைத தகர்க்கும் என அவரது தொண்டர்கள் நம்புகின்றனர். ஒருவேளை விஜய் ஆட்சிக்கு வந்தால், இருதரப்பு முன்னாள் அமைச்சர்கள் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பாரா அல்லது அவரும் பத்தோடு பதினொன்றாக முந்தைய ஆட்சியாளர்களை போலவே செயல்படுவாரா என்பது பெரும் விவாதமாக உள்ளது.
தவெக ஒரு புதிய கட்சியாக இருப்பதால், அவர்களுக்கு முந்தைய அரசியல் புள்ளிகளுடன் எந்தவிதமான “ரகசியப் பிணைப்பும்” இருக்க வாய்ப்பில்லை. எனவே, ஊழல்வாதிகள் மீது சாட்டை சுழற்றப்படும் என்று ஒரு தரப்பினர் நம்பினாலும், தவெக-விலும் பல முன்னாள் அதிமுக, திமுக நிர்வாகிகள் இணைந்து வருவதால், அவர்கள் மீதான வழக்குகளை விஜய் எப்படி கையாள்வார் என்ற சந்தேகமும் எழுகிறது. குறிப்பாக, கே.ஏ. செங்கோட்டையன் போன்ற மூத்த தலைவர்கள் தவெக பக்கம் சாய்வது, பழைய அரசியல்வாதிகளுக்கு பாதுகாப்பு அரணாக விஜய் மாறுவாரோ என்ற கேள்வியை எழுப்புகிறது.
தமிழக மக்களின் எதிர்பார்ப்பு என்பது, ஆட்சி மாறும்போது வெறும் பெயர்கள் மட்டும் மாறக்கூடாது, மாறாக நிர்வாகத்தில் ஒரு “சுத்திகரிப்பு” நடக்க வேண்டும் என்பதுதான். ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். விஜய் தனது கட்சியின் கொள்கையில் “நேர்மை”யை தாரக மந்திரமாக கொண்டுள்ளதால், அவர் ஒரு புதிய முன்மாதிரியை உருவாக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், நடைமுறை அரசியலில் அவர் சந்திக்கும் சவால்கள் அவரை எந்த திசையில் கொண்டு செல்லும் என்பதுதான் 2026-ன் மிகப்பெரிய புதிராக இருக்கும்.
முடிவாக, திமுக – அதிமுக என்ற சுழற்சியில் சிக்கித் தவிக்கும் தமிழக மக்களுக்கு, விஜய் ஒரு நிஜமான “ஆக்ஷன் ஹீரோவாக” ஊழலை ஒழிப்பாரா அல்லது அரசியல் சமரசங்களுக்கு உள்ளாவாரா என்பது இன்னும் சில மாதங்களில் தெரிந்துவிடும். அதிகாரமும், பணபலமும் கொண்ட இரு பெரும் திராவிடக் கட்சிகளுக்கு எதிராக, விஜய் தனது “தூய்மையான அரசியல்” வாக்குறுதியைக் காப்பாற்றினால் மட்டுமே அவர் மக்களால் உண்மையான “ஜனநாயகன்” என ஏற்றுக்கொள்ளப்படுவார். அதுவரை மக்கள் விழிப்புணர்வுடன் காத்திருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
