2வது கட்ட வேலைநீக்கம்.. 4000 டிஸ்னி ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்ட சோகம்..!

Published:

உலகமெங்கும் உள்ள முன்னணி நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாக வேலை நீக்க நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதும் குறிப்பாக அமேசான், கூகுள், பேஸ்புக், பிளிப்கார்ட் உள்ளிட்ட பல நிறுவனங்கள் வேலை நீக்க அறிவிப்பு குறித்த தகவல்களை வெளியிட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக இன்று காலை கூட அமேசான் நிறுவனம் வேலை நீக்க நடவடிக்கை எடுத்தது என்ற அதிர்ச்சி தகவலை பார்த்தோம்.

இந்த நிலையில் பொழுதுபோக்கு நிறுவனங்களில் ஒன்றான டிஸ்னி தனது இரண்டாவது சுற்று பணி நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நடவடிக்கையின் போது 4000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இன்னும் ஒரு சில வாரங்களில் மூன்றாவது கட்ட வேலை மிக்க நடவடிக்கையும் இருக்கும் என்று கூறப்படுவதால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டிஸ்னி நிறுவனம் தனது நிறுவனத்தின் மறுசீரமைப்பு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அதன் ஒரு பகுதியாக தற்போது 4000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் இன்னும் ஒரு சில வாரங்களில் 3000 ஊழியர்களை குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதன் மூலம் இந்நிறுவனத்தின் செலவு 5.5 பில்லியன் டாலர் குறையும் என்றும் கூறப்படுகிறது. எங்கள் நிறுவனத்தின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு சில கடினமான முடிவுகள் எடுக்க வேண்டிய நிலையில் மூத்த தலைமை குழுக்கள் இருக்கின்றன என்றும் அதை விரைவாக செய்வதை விட வேறு வழி இல்லை என்றும் எங்கள் நிறுவனத்தின் மற்ற ஊழியர்களை காப்பாற்றுவது மிகப்பெரிய முன்னுரிமை என்றும் டிஸ்னி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டிஸ்னி என்டர்டைன்மென்ட், இஎஸ்பி மற்றும் டிஸ்னி பார்க் ஆகிய பிரிவுகளில் உள்ள ஊழியர்கள் தான் வேலையில் இருந்து நீக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக கலிபோர்னியா, நியூயார்க் ஆகிய பகுதியில் உள்ள ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

டிஸ்னி நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் ஏற்கனவே 7000 ஊழியர்களை பணி நீக்கம் செய்த நிலையில் தற்போது மீண்டும் 4000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கையை எடுத்துள்ளது அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் பணி நீக்கம் செய்யப்படும் முடிவை மிகுந்த கனத்த இதயத்துடன் எடுத்தோம் என்றும் உலகெங்கும் உள்ள எங்கள் ஊழியர்களின் திறமை மற்றும் அர்ப்பணிப்புக்கு மிகுந்த மரியாதை செலுத்துகிறோம் என்றும் இந்த மாற்றத்தின் தாக்கத்தை நாங்கள் கவனத்தில் கொள்வோம் என்றும் டிஸ்னி நிறுவனத்தின் சிஇஓ தெரிவித்துள்ளார்.

மேலும் உங்களுக்காக...