வயநாடு நிலச்சரிவு இயற்கைப் பேரிடர் ஏற்பட்டு இன்றுடன் 10 நாட்கள் ஆகப் போகின்றன. இன்னமும் அங்கு மீட்புப் பணிகள் நிறைவுறவில்லை. எங்கு நோக்கினாலும் இன்னும் சிக்கிய உடல்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. வயநாடு பகுதியில் சூரல் மலை, முண்டக்கை போன்ற பகுதிகள் தடமே தெரியாமல் உருக்குலைந்து போய்விட்டன. பூஞ்சேரி மட்டம் என்ற பகுதியானது மனிதர்கள் இனி வாழத் தகுதியற்ற பகுதி என அரசால் அறிவிக்கப்பட்டு விட்டது. இப்படி நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் வயநாடு நிலச்சரிவு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு அனைவரும் தங்ளால் இயன்ற அளவு பணமாகவும், பொருட்களாகவும் உதவி செய்து வருகின்றனர்.
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் பணம் கொடுப்பதற்கான வங்கிக் கணக்கு எண்ணையும் அறிவிக்க அதிலும் நிதி அளித்து வருகின்றனர். பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் வயநாட்டுக்கு கைகொடுக்கும் நிலையில் திண்டுக்கல் நகரில் பாரம்பரியமான முறையில் நிதி திரட்டி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் நக்கல்யா உங்களுக்கு.. கோவில் திருவிழா பேனரில் இடம்பெற்ற மியா கலிஃபா..
கேப்டன் விஜயகாந்த் நடித்த சின்னக்கவுண்டர் திரைப்படத்தில் மொய் விருந்து என்றொரு காட்சி வரும். பண வசதி இல்லாதவர்கள் மொய் விருந்து வைத்து சாப்பிட்ட இலைக்கு அடியில் ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற அளவு பணம் கொடுத்து விருந்து வைத்தவர்களுக்கு உதவி செய்வர். அதன் அடிப்படையில் திண்டுக்கல் ரோட்டரி சங்கம், திண்டுக்கல் ஹோட்டல் அசோஷியேன், திண்டுக்கல் முஜீப் பிரியாணி ஆகியவை இணைந்து வயநாடு நிவாரணப் பணிகளுக்காக நிதி திரட்டும் மொய் விருந்தை நடத்தியது.
இதனையொட்டி திண்டுக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இதுகுறித்த அறிவிப்பு செய்யப்பட்டது. திட்டமிட்டபடி நேற்று இரவு இந்த மொய் விருந்து நடத்தப்பட்டது. இதில் பிரியாணி, சிக்கன் 65, நெய் சாதம், தோசை, புரோட்டா ஆகியவை பரிமாறப்பட்டன. இரவு 8 மணி முதல் 10 மணி வரை நடைபெற்ற இந்த மொய் விருந்தில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு வயிறார உணவருந்தி வயநாடு நிவாரண நிதியை இலைக்கு அடியில் வைத்துச் சென்றனர். மேலும் சிறுவர்கள் தாங்கள் சேமித்து வைத்திருந்த உண்டியல் பணத்தினையும் கொண்டு வந்து தங்கள் உதவி மனப்பான்மையை வெளிப்படுத்தினர்.