வங்கக்கடலில் உருவாகிறது புயல்.. சென்னைக்கு கனமழையா?

Published:

வங்கக்கடலில் புயல் உருவாகிறது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சென்னை உள்பட தமிழக கடற்கரையோர பகுதிகளில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

நாளை முதல் அக்னி நட்சத்திரம் வெயில் தொடங்க இருப்பதை அடுத்து வெயில் உக்கிரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கோடை மழை காரணமாக குளிர்ச்சியான வெப்பநிலை நிலவி வரும் நிலையில் அது மேலும் தொடரும் என்று தெரியவந்துள்ளது.

ஏற்கனவே தமிழகத்தில் உள்ள ஒரு சில மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் மே 6ஆம் தேதி வங்க கடலில் புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்க கடலில் மே 6 அல்லது 7ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்றும் அது தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த தாழ்வு மண்டலம் வடக்கில் நகர்ந்து மத்திய வங்க கடல் பகுதியில் புயலாக மாறும் என்றும் இந்த புயல் நகரும் தன்மை மற்றும் நகரும் திசை ஆகியவை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இந்த புயல் கரையை தமிழக கடற்கரையில் கரையை கடக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் அந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் சென்னை உள்பட தமிழக கடற்கரை ஓர பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அக்னி நட்சத்திரம் நாளை தொடங்கி மே 28ஆம் தேதி வரை இருக்கும் நிலையில் கிட்டத்தட்ட ஒரு வாரம் இந்த புயல் காரணமாக பெய்யும் மழையில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான வெப்பநிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மே மாதம் மிகவும் அரிதாகவே வங்க கடலில் புயல் தோன்றும் நிலையில் இந்த ஆண்டு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு தோன்றியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் உங்களுக்காக...