கிரெடிட் கார்டு என்பது தற்போது சர்வ சாதாரணமாக கிட்டத்தட்ட அனைத்து தரப்பினரிடமும் உள்ளது. இதைப் பயன்படுத்தி பல்வேறு பொருட்களை வாங்கி வருகின்றனர்.
ஒரு சிலர் கிரெடிட் கார்டை பயன்படுத்தி தங்கம் வாங்கி சேமித்து வருவதாக கூறுகின்றனர். இது உண்மையிலேயே சேமிப்பா அல்லது கூடுதல் சுமையா என்பது குறித்த விவாதம் சமூக வலைதளங்களில் நடந்து வருகிறது.
பொதுவாக, கிரெடிட் கார்டில் அதிக அளவில் செலவு செய்தால் கூடுதலான ரிவார்டு புள்ளிகள் கிடைக்கலாம். அந்த வகையில், கிரெடிட் கார்டு மூலம் தங்கம் வாங்கினால், ரிவார்டு மூலம் நமக்கு லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. ,மேலும் அதிக அளவில் கிரெடிட் கார்டில் செலவு செய்யும் போது “வெல்கம் போனஸ்” தொகையும் கிடைக்கும். தங்கம் வாங்குவதால் இந்த இலக்கை எளிதாக அடையலாம்.
ஆனால், கிரெடிட் கார்டில் செலவு செய்த தொகையை ஒரு குறிப்பிட்ட நாட்களில் திருப்பிச் செலுத்த வேண்டும். அந்த காலக்கெடுவுக்குள் செலுத்தினால் மட்டுமே வட்டி இல்லாமல் கடன் தீர்க்கப்படும். இல்லையென்றால், வட்டி சேர்ந்து விடும். இதனால், நீங்கள் நகை வாங்குவதில் எந்தவிதமான பயனும் பெற முடியாமல் போய்விடும்.
மேலும், சில நகைக்கடைக்காரர்கள் கிரெடிட் கார்டு பயன்பாட்டுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கலாம். ஏற்கனவே தங்க நகை வாங்கும் போது செய்கூலி, சேதாரம் ஆகியவை நஷ்டமாக இருக்கும். இதற்கிடையில், கிரெடிட் கார்டு கூடுதல் கட்டணமும் சேரும்போது, கூடுதல் நஷ்டம் ஏற்படும்.
எனவே, கிரெடிட் கார்டை பயன்படுத்தி நகை வாங்கினால், அந்த குறிப்பிட்ட காலத்திற்குள் கிரெடிட் தொகையை செலுத்த முடியும் என்றால் மட்டும் இதை செய்வது நல்லது. இல்லை என்றால், கிரெடிட் கார்டு மூலம் நகைகள் வாங்குவது பெரும்பாலும் லாபத்தை தராது என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.