தமிழக அரசியல் களத்தில் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டுவரும் என்ற எதிர்பார்ப்புடன் களமிறங்கியுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் தனது முதல் தேர்தல் கூட்டணி அமைப்பதில் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மேலிடம், வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் திமுகவுடனான கூட்டணியை தொடர்வது உறுதி என்று அறிவித்துள்ள நிலையில், புதிய கூட்டணி எதிர்பார்ப்பில் இருந்த விஜய்க்கு இது ஒரு பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
இந்த திடீர் திருப்பம், தமிழக அரசியல் போட்டி மீண்டும் பாரம்பரியமான திமுக – அதிமுக கூட்டணிக்குள்ளேயே சுழலும் சூழலை உருவாக்கியுள்ளது.
கடந்த சில வாரங்களாக, பீகார் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அடைந்த படுதோல்வியால், அது திமுக கூட்டணியை விட்டு விலகி, தமிழகத்தில் ஒரு மாற்று சக்தியாக கருதப்படும் விஜய்யின் தவெக-வுடன் கூட்டணி அமைக்கலாம் என்ற யூகங்கள் நிலவி வந்தன. இந்த யூகங்கள், விஜய்யின் அரசியல் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிகரித்தது.
ஆனால், இந்த அனைத்து எதிர்பார்ப்புகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, காங்கிரஸ் கட்சியின் மேலிடம் தனது முடிவை உறுதிப்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் அறிவுறுத்தலின் பேரில், திமுக தலைமையிலான கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடத்த, கிரிஷ் சோடங்கர் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு அமைக்கப்பட்டதன் மூலம், தேசிய அளவில் ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், தமிழகத்திலும் அதே கூட்டணியில் உறுதியாக நீடிக்கும் என்ற வலுவான சமிக்ஞையை திமுகவுக்கு அளித்துள்ளது.
காங்கிரஸ் கட்சி உறுதியாக திமுக பக்கம் சாய்ந்திருப்பது, விஜய்யின் அரசியல் வியூகங்களுக்கு பல சிக்கல்களை உருவாக்கியுள்ளது. காங்கிரஸ், விஜய்யுடன் இணைந்திருந்தால், அது ஒரு மூன்றாவது மாற்று சக்தியை உருவாக்க உதவியிருக்கும். இப்போது, விஜய் தனியாக போட்டியிடும் நிலைக்கு தள்ளப்படுவாரா அல்லது வேறு அதிமுக – பாஜக கூட்டணியில் சேரவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
காங்கிரஸ் தனது முடிவை அறிவிக்கும் முன்பு அதிமுகவுடன் தவெக பேரம் பேசியிருந்தால், “காங்கிரஸ் எங்களிடம் வந்தால், அது அதிமுக அணிக்கு ஒரு பலவீனமாக அமையும்” என்று மிரட்டி அதிக தொகுதியை கேட்டிருக்கலாம்.
ஆனால் இப்போது, காங்கிரஸ் திமுக கூட்டணியில் உறுதியாக இருப்பதால், அதிமுக கூட்டணிக்கு விஜய்சென்றாலும் அதிக தொகுதிகளுக்கோ மற்ற பதவிகளுக்கோ பேரம் பேச முடியாது. விஜய்யின் புதிய கட்சிக்கு குறைவான தொகுதிகளையும் முக்கியத்துவம் குறைந்த இடங்களையும் வழங்க வாய்ப்புள்ளது.
விஜய்யின் வரவு, தமிழகத்தில் பல ஆண்டுகளாக நிலவும் அரசியல் சமன்பாட்டை மாற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், காங்கிரஸ் மேலிடத்தின் திடமான முடிவால், விஜய் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் நிறுத்தப்பட்டுள்ளார். அவர் இப்போது அதிமுக கூட்டணியில் சேரப் போகிறாரா, அல்லது தனித்து நின்று தனது லட்சியத்தை நிரூபிக்க போகிறாரா என்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
